Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நிலத்தை பறித்துக்கொண்டால் நாங்கள் எங்கே போவோம்?; நிலமற்ற கூலிகள் குமுறல்!!

எட்டு வழிச்சாலை என்றதுமே, நிலத்தை பறிகொடுத்து நேரடியாக பாதிக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்களான விவசாயிகளைப் பற்றி மட்டுமே பேசும் நாம், அதிகம் கவனப்படுத்தப்படாத மற்றொரு பெருங்கூட்டமும் இதனால் பாதிக்கப்படுகிறது என்பதை மறந்தே போனோம்.

 

காலங்காலமாக நில உடைமையாளர்களிடம் கூலி வேலை செய்யும் விவசாய தொழிலாளர்கள் என்ற பெரும் சமூகமே இந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். 2009களில் உலகமே பொருளாதார மந்தநிலையால் சுருண்டு கிடந்தபோது, இந்திய பொருளாதாரம் கம்பீரமாக நின்றது. அதற்கு சாமானியனின் சேமிப்பும், கிராமப் பொருளாதாரமும் முக்கிய காரணிகளாக இருந்தன.

 

அத்தகைய வலிமையான கிராமப் பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டதில், நிலமற்ற கூலித்தொழிலாளர்களின் உழைப்பு அளப்பரியது. எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளருக்கு, வழிகாட்டி மதிப்பில் இருந்து இரண்டரை மடங்கு முதல் அதிகபட்சம் நான்கு மடங்கு வரை இழப்பீடு தொகையை அரசு வழங்கி விடும். ஆனால், அந்த நிலத்தை விட்டு வெளியேறும் சிறு, குறு விவசாயிகளின் காடு, கழனிகளை நம்பியே வாழ்ந்து வந்த கூலித்தொ-ழிலாளர்கள்தான் உண்மையிலேயே வேலை இழந்து, வருவாய் இழந்து, சொந்த மண்ணில் அகதிகளாக பரிதவிக்கும் சூழல் உள்ளது.

ஏற்கனவே நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை அளிப்பது கணிசமாக குறைக்கப்பட்டுவிட்டது. அதன்மூலம் கிடைத்த குறைந்தபட்ச உத்தரவாதமும் பறிபோயிருக்கிறது. இந்த நிலையில், களை பறித்தல், நாற்று நடுதல், கதிர் அறுத்தல், பனை, தென்னை, பாக்கு மரமேறுதல், உழவு ஓட்டுதல் என விவசாய நிலங்களைச் சார்ந்து பலர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். ஓராண்டில் 6 மாதங்களுக்கு விளை நிலங்கள் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது.

 

கிராமப்புற பெண்களின் முக்கிய வேலை ஆதாரமே இந்த நிலம்தான். மிகப்பெரும் வேலைவாய்ப்பு வழங்கி வந்த விளை நிலங்களும், எட்டு வழிச்சாலைக்கு இரையாக உள்ள நிலையில் விளிம்புநிலை விவசாயக்கூலிகளின் வாழ்வாதாரம்தான் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது.

 

சேலத்தை அடுத்த குள்ளம்பட்டியில், வயலில் களை பறித்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளர்கள் சிலரை சந்தித்தோம். எட்டு வழிச்சாலைக்கு எதிராக அவர்களும் தங்கள் தரப்பு குமுறல்களை வெளிப்படுத்தினர்.

இந்த நிலத்தை நம்பி எங்களைப்போல கூலிக்காரங்க நிறைய பேர் இருக்கிறோம். மின்னாம்பள்ளி, வலசையூர், சுக்கம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி, குள்ளம்பட்டினு பல ஊர்களுக்கு நாங்க காட்டு வேலைக்குதான் போறோம். எட்டு வழிச்சாலைனு ரோடு போட்டுட்டா… நாங்க ரோட்டு மேலேயே நெல்லு நாத்து நடுவோம்? களை வெட்டுவோம், பயிர் நடுவோம், நெல் அறுப்போம். அதுதான் எங்களுக்கு தொழிலே. இனிமே நாங்க ரோட்டு மேலயா பயிர் நட்டு, சோறு தின்போம்?

 

நிலம் கொடுக்கும் காட்டுக்காரங்களுக்கு இழப்பீடுனு ஏதோ பாதிக்குப்பாதியாவது பணத்தைக் கொடுத்துடுவாங்க. அவங்க அதை வெச்சு பொழச்சுக்குவாங்க. ரோடு போட்டுட்டீங்கனா நாங்க எந்த காட்டுக்கு இனிமே வேலைக்குப் போவோம்?. அருவா… களைக்கட்டு… எடுத்தாதானே எங்களுக்கு சோறு…. இதை நம்பித்தான் நாங்க புள்ளக்குட்டிங்கள படிக்க வைக்கறோம்.

எட்டு வழிப்பாதைக்கு ரோடு போட்டுட்டால் பஸ்ஸூ போவும்…. ஆனா எங்க வயிறு ரொம்புமா? நிலத்துக்காரங்களுக்கு இழப்பீடு தரும் அரசாங்கம், எங்கள மாதிரி கூலிக்காரங்களுக்கு என்ன தரப்போகுது? நாங்க படிச்சிருந்தா உத்தியோகத்துக்கு போவோம். படிக்காத எங்களுக்கு இந்த கூலி வேலைதான் சோறு போட்டது. இனிமே அதுக்கும் வழியில்ல…

 

வருஷத்துக்கு மூணு போகம் பயிர் நடுவோம். நெல் அடிப்போம். எங்களுக்கு நெல்லு கூலியாக கிடைக்கும். இப்ப ரோடு போட்டுட்டா இனிமே நாங்க என்ன வேலைக்குப் போவோம்? இப்போ ஏரி வேலையும் இல்ல. நாங்க வேலை செய்கிற காடே போயிடுச்சுனா நாங்க எங்கதான் வேலைக்குப் போறது?

வருஷத்துக்கு மூணு தடவை நெல் அடிச்சோம்னா எங்களுக்கு பத்து வல்லம்னு முப்பது வல்லம் நெல்லு கிடைச்சிடும். அதைத்தான் அரிசியாக்கி சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். அருவாள கையில புடிச்சாத்தான் எங்களுக்கு கஞ்சி…இந்த காட்டு வேலையும் இப்போ பறிபோகுது. ரோடு போட்டா அதுல வெள்ளாமை வெளையுமா?,” என்கிறார்கள் ஏழை விவசாய கூலித் தொழிலாளர்கள்.

 

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பிரதமர் மோடியும், எல்லா விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை தரப்படும் எனச்சொல்லும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பறிபோகும் வாழ்வாதாரத்தை எண்ணி உள்ளம் குமுறும் விளிம்பு நிலை விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?

 

 

– பேனாக்காரன்.