Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

கூகுள் நிறுவனம்,
வோடபோன் ஐடியா
நிறுவனத்தில் கணிசமான
பங்குகளை வாங்க உள்ளதாக
பேச்சுகள் எழுந்ததை அடுத்து,
மே மாத கடைசி வர்த்தக
நாளில் இந்நிறுவனத்தின்
பங்குகள் 34 சதவீதம் வரை
அதிரடியாக உயர்ந்தது.

இந்தியாவின் பெரும்
கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி,
தன்னுடைய ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனத்தின் கணிசமான
பங்குகளை அண்மையில் பேஸ்புக்,
சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி,
ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய
நிறுவனங்களுக்கு விற்றதன்
மூலம் சுமார் 75 ஆயிரம்
கோடி ரூபாயை திரட்டினார்.

 

பேஸ்புக் நிறுவனம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்
மீது பார்வையைச் செலுத்திய
நிலையில், உலகின் மற்றொரு
டிஜிட்டல் ஜாம்பவனான கூகுள்
நிறுவனமும், இந்திய
தொலைதொடர்புத் துறையில்
கால் பதிக்க ஆர்வம் காட்டுகிறது.

 

கூகுள் நிறுவனம்,
வோடபோன் ஐடியா
நிறுவனத்திடம் இருந்து
5 சதவீத பங்குகளை வாங்க
திட்டமிட்டு இருப்பதாக
பரவலாக பேச்சுகள் எழுந்துள்ளன.
இப்படி ஒரு தகவல் கசிந்ததால்
மே மாதத்தின் கடைசி
வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை
(மே 29) வோடபோன் ஐடியா
நிறுவன பங்குகள் விலை
வேகமாக உயரத் தொடங்கின.

நேற்று முன்தினம்
(மே 28) இந்நிறுவனப்
பங்குகள் விலை 5.80 ரூபாயில்
முடிவடைந்தன. நேற்று,
இப்பங்கின் ஆரம்ப விலையே
6.35 ரூபாயில் இருந்து
தொடங்கியது. பகல் 1 மணியளவில்
அதிகபட்சமாக 7.80 ரூபாய்
வரை உயர்ந்தது. அதாவது
முதல் நாள் விலையுடன்
ஒப்பிடுகையில்,
இது 34 சதவீதம்
ஏற்றம் ஆகும்.

 

வர்த்தகத்தின் முடிவில்
வோடபோன் ஐடியா
பங்குகள் 6.55 ரூபாயில்
முடிவடைந்தன. இது
முந்தைய நாளைக் காட்டிலும்
12.93 சதவீதம் உயர்வாகும்.

 

பங்குச்சந்தை ஆய்வாளர்கள்,
வோடபோன் ஐடியா நிறுவனத்தில்
முதலீடு செய்யலாம் என்றும்
ஒரு ஏப்ரல் முதல் ஜூன்
வரையிலான காலாண்டிற்குள்
12 முதல் 14 ரூபாய் வரை
பங்குகள் விலை உயரக்கூடும்
என்றும் பரிந்துரை செய்துள்ளனர்.

 

இந்திய தொலைதொடர்பு
சந்தையில் ரிலையனஸ் ஜியோ,
ஏர்டெல் நிறுவனங்களுக்கு அடுத்து
வோடபோன் ஐடியா நிறுவனம்தான்
மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
என்றாலும், அதன் கடந்த கால
செயல்பாடுகள் லாபகரமானதாக
இல்லை. இந்நிறுவனம், இந்திய
தொலைதொடர்புத் துறைக்கு
58 ஆயிரம் கோடி ரூபாய்
கட்டண நிலுவை வைத்துள்ளது.
தொழில் ரீதியாக பலமுனைகளிலும்
அழுத்தங்களைச் சந்தித்து
வரும் நிலையில், கூகுள் நிறுவனம்
எதற்காக வோடபோன் ஐடியாவில்
முதலீடு செய்ய தீர்மானித்தது
என்பதும் வெளிப்படையாகத்
தெரியவில்லை.

 

அதேநேரம்,
இந்நிறுவனப் பங்குகளில்
முதலீடு செய்தவர்களுக்கு
நேற்று ஒரே நாளில் 34 சதவீதம்
வரை லாபம் கிடைத்ததால்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், பங்குகள் விலை
உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு
காரணமாக புதிய முதலீட்டாளர்கள்
பலரும் இப்பங்குகளை வாங்க
ஆர்வம் காட்டினர்.

 

– ஷேர்கிங்