Sunday, May 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விஜய் பட விவகாரம்: வக்கீலை மெர்சலாக்கிய ஹைகோர்ட்!

மதுபானம், தீண்டாமை என்று எவ்வளவு பிரச்னை இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு மெர்சல் படத்திற்கு தடை விதிக்க வழக்கு தொடர்ந்து, அந்தப்படத்திற்கு விளம்பரம் தேடித்தர வேண்டாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில், ஜிஎஸ்டி வரி விதிப்பு, டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது போன்ற வசனங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும், அந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று (அக்டோபர் 27, 2017) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞரிடம் பல கேள்விகளை எழுப்பியதோடு, கடும் கண்டனங்களையும் தெரிவித்தார்.

நாட்டுக்கு முக்கியமா?

அப்போது நீதிபதி கூறுகையில், ”இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே அந்தப்படத்தின் வசனங்கள் உள்ளன. அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. தீண்டாமை, மதுபானம், புகைப்பிடித்தல், மாற்றுத்திறனாளிகள் அவமதிக்கப்படுவது என எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. அதற்காக பொதுநல வழக்கு தொடரலாமே.

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட வசனத்திற்காக அந்தப்படத்தை தடை செய்யக்கோரி, இந்த நீதிமன்றத்தை நீங்கள் பொதுமேடையாக்க பார்க்கிறீர்கள். இதன்மூலம் படத்தயாரிப்பாளருக்கு விளம்பரம் தேடித் தருகிறீர்கள். சினிமாவில் சொல்லப்படுவதை அப்படியே மக்கள் கண்மூடித்தனமாக நம்புவார்கள் என்பதை ஏற்பதற்கில்லை. உங்களுக்குப் பிடித்தால் பாருங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள்.

தணிக்கை சான்றிதழ் அளிக்கும் குழுவில் தகுதியானவர்கள்தான் உள்ளனர். சட்டத்திற்கு உட்பட்டுதான் தணிக்கை சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த மனுவை விசாரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்கிறேன்,” என்றார்.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் படத்தயாரிப்புக் குழுவும், விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழிசை அதிருப்தி:

படத்தின் சில வசனங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ”படத்தில் சொல்லப்பட்ட சில தறவான கருத்துகள் மக்களை தவறான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். ஒருதலைப்பட்சமாக கருத்து சொல்வது என்பது கருத்துத் திணிப்பு ஆகும்,” என்றார்.