Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

”தமிழக வெற்றிக்கழகத்துடன்
கூட்டணி வைப்போருக்கு ஆட்சி,
அதிகாரத்தில் பங்கீடும்,
அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்று
அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய்
கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில்
பெரும் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.

தமிழ்த்திரை உலகின்
சூப்பர் ஸ்டாரான நடிகர் விஜய்,
கடந்த பிப்ரவரி 2ம் தேதி,
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில்
புதிய கட்சியைத் தொடங்கினார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு,
விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை
தொடங்கியபோதே அவரின் அரசியல்
வருகை தொடர்பான பேச்சும்
தொடங்கி விட்டது.

இன்றைய தேதியில்,
இந்தியாவில் 200 கோடி ரூபாய்
சம்பளம் பெறும் வெகுசில
நடிகர்களில் விஜய்யும் ஒருவர்.
அதிகபட்ச சம்பளம், புகழின் உச்சத்தில்
இருக்கும் ஒருவர் முழுநேர
அரசியல்வாதியாக களம் காண வருகிறார்
என்றபோதே பலரின் புருவங்களும் உயர்ந்தன.

கட்சி தொடங்கியபோதே,
நமது இலக்கு 2026 சட்டப்பேரவைத்
தேர்தல்தான் என்றும், மக்களவைத் தேர்தலில்
யாருக்கும் ஆதரவு இல்லை என்றும்
தெளிவு படுத்தி இருந்தார்.
ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்டபடி
ஓரிரு படங்களை முடித்துவிட்டுதான்
தீவிர அரசியலில் இறங்குவார்
என்று சொல்லப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி த.வெ.க.,
கட்சியின் கொடியை அறிமுகப் படுத்தி
வைத்துப் பேசினார். அதன்பிறகு,
வழக்கம்போல் அவர் படப்பிடிப்புகளில்
கலந்து கொண்டாலும், இடையில்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகள் குறித்து
அறிக்கை வாயிலாக கருத்து
தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில்தான்,
அக். 27ம் தேதி, விக்கிரவாண்டியில் த.வெ.க.,
கட்சியின் முதல் மாநில மாநாடு நடந்து முடிந்துள்ளது.
விஜய்யின் அரசியல் குறித்த கன்னிப் பேச்சைக் கேட்க
அரசியல் கடந்து எல்லா மட்டத்திலும்
ஆர்வம் இருந்ததை மறுக்க இயலாது.

மாநாட்டின் முகப்பை கோட்டை
வடிவில் செட் அமைத்து இருந்தனர்.
முகப்பில் தந்தை பெரியார், காமராஜர், அம்பேத்கர்,
வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள்
ஆகியோருக்கு கட்அவுட் வைத்திருந்தனர்.
மாநாட்டில் அவர் என்ன பேசப்போகிறார்
என்பது குறித்து இந்த கட்அவுட்டுகளே
கட்டியம் கூறின. எனினும்,
பேரறிஞர் அண்ணாத்துரையை
தவிர்த்துவிட்டு அரசியலா? என்ற
விமர்சனங்களும் எழாமல் இல்லை.

அண்ணாவுக்கும் கட்அவுட் வைத்திருந்தால் இது இன்னொரு திமுக மாநாடு போல் தோற்றமளிக்கும் என்பதாலேயே அண்ணாவின் கட்அவுட் வைக்கப்படவில்லை என எண்ணுகிறேன். அவருடைய கொள்கை முழக்கங்களும் ஏறக்குறைய திராவிடக் கட்சிகளை ஒட்டியே இருந்தன.

கொள்கை எதிரி? அரசியல் எதிரி யார்?:

”நமது கட்சியின் கோட்பாடாக,
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று
அறிவித்தபோதே, நமது எதிரி யார்?
என்று அறிவித்து விட்டேன்.

சாதி, மதம், இனம், மொழி, பாலினம்,
பணம் என பிரிக்கும் பிளவுவாத
அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல்
கலாச்சாரத்தையும் எதிர்ப்பேன்.

ஒரு கூட்டம், யார் அரசியலுக்கு வந்தாலும்
அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி,
ஃபாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,
பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள்.
அவர்கள் ஃபாசிசம் என்றால்,
நீங்கள் என்ன பாயாசமா?

இந்த மக்கள் விரோத ஆட்சியை,
திராவிட மாடல் ஆட்சி என்று கூறி
ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல்
செய்பவர்கள் த.வெ.க.,வின் கொள்கை எதிரி.

திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா
பெயரைச் சொல்லி தமிழ்நாட்டைச் சுரண்டி
கொள்ளையடிக்கிற ஒரு குடும்பம்…
அந்த சுயநலக்கூட்டம்தான் நமது அரசியல் எதிரி,”
என்று ஆளும் திமுகவுக்கு பகிரங்கமாக
சம்மட்டி அடி கொடுத்தார் விஜய்.

சாதி, மதம் என பிளவுவாத அரசியல்
செய்பவர்கள் த.வெ.க.,வின் கொள்கை எதிரி
என்று பேசியதன் மூலம் பா.ஜ.க.,வுக்கும்
சூடு வைத்திருக்கிறார்.

திராவிடக் கட்சிகள் காலங்காலமாக
முழங்கி வரும் இருமொழிக் கொள்கையும்,
ஆளுநர்கள் நியமனத்திற்கான எதிர்ப்பையும்
விஜய்யும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்தக் கருத்துகளும் பாஜகவுக்கு எதிரான
சாட்டை அடியாகவே பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக,
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து
பேசியதுதான் இந்த மாநாட்டின் முத்தாய்ப்பு எனலாம்.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை
சுவைத்த கட்சிகள் இதுவரை
பேசத் தயங்கிய கோட்பாடு இது.

”வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரத்தில் பகிர்வும் கொடுப்போம்,” என்று தமிழக அரசியல் களத்தில் கிட்டத்தட்ட ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்தி இருக்கிறார் விஜய்.

தேமுதிகவை தொடங்கும்போது விஜயகாந்த் கோட்டை விட்டது இந்த இடத்தில்தான். காலத்தின் போக்கை அறிந்து ஆட்சியில் பங்கு குறித்து கெட்டிக்காரத்தனமாக பேசி இருக்கிறார் விஜய்.

இன்றைய நிலையில், எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் தேர்தலில் தனித்து வெற்றி பெற முடியாது என்பதே கள யதார்த்தம். சீமான் பலமுறை தனித்துக் களம் கண்டும் அவருக்குப் பிடிபடாத ஒன்றை விஜய் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்.

தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்று விஜய், கொள்கை முழக்கமாகவே பேசியிருக்கிறார். இனி தமிழக அரசியல் பாதை இப்படிதான் இருக்கும்.

தி.மு.க.,வுக்கு சம்மட்டி அடி:

‘எத்தனையோ நடிகர்கள் கட்சி தொடங்கியதையும், அவர்களின் கொள்கைகளையும் பார்த்தாச்சு. இவரென்ன சுண்டைக்காய்…?’ என்று, ஒருவேளை ஆளுங்கட்சி கருதி இருக்குமேயானால் விஜய்யின் இந்தப் பேச்சு, திமுகவுக்கு பலத்த சம்மட்டி அடியாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள வி.சி.க., ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து பேசி வருகிறது. திமுக, ‘ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம்’ என்ற கொள்கையில் இனியும் விடாப்பிடியாக இருக்குமேயானால், விசிக, இடதுசாரிகள், இன்னபிற கட்சிகள் த.வெ.க., கட்சியை நோக்கி நகரத் தொடங்கும்.

ஒருவேளை, இப்போதுள்ள கட்சிகள் அப்படியே திமுகவுடன் தொடரும்பட்சத்தில், அக்கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடும். மொத்தத்தில் ஆட்சி, அதிகாரப்பகிர்வு குறித்த விஜய்யின் பேச்சு, திமுக கூட்டணிக்குள் சலசலப்பையும், விரிசலையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை.

கிட்டத்தட்ட அதிமுகவுக்கும் இதே நெருக்கடி நிலைதான். அமைச்சரவையில் இடம் கொடுப்பதாக இருந்தால் கூட்டணிக்கு வருகிறோம் என்று ஒற்றை இலக்க வாக்குவங்கி கட்சிகள்கூட குரலை உயர்த்திப் பேசலாம்.

பெரியார் வேண்டும்; கடவுள் மறுப்பு வேண்டாம்:

த.வெ.க., கொள்கை முழக்கங்களில் பல முரண்களும் இல்லாமல் இல்லை.

த.வெ.க., மாநாட்டில் பேரறிஞர்
அண்ணாவுக்கு கட்அவுட் வைக்காத விஜய்,
அவர் கூறிய, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’
என்ற கோட்பாட்டை ஏற்றுக்
கொள்வதாகச் சொல்கிறார்.

தந்தை பெரியாருக்கு கட்அவுட் வைத்த அவர்,
கடவுள் மறுப்புக் கொள்கையில்
உடன்பாடு இல்லை என்றதோடு,
பெரியாரின் பெண்ணுரிமை, சமூக நீதி, சமூக முன்னேற்றம்,
பகுத்தறிவுச் சிந்தனை அடிப்படையில்
கட்சி செயல்படும் என்கிறார்.
பகுத்தறிவுச் சிந்தனை என்றாலே
அங்கே கடவுள் மறுப்பும் உள்ளடக்கமாகி
விடுகிறது என்பதை ஏனோ
விஜய் மறந்து போனார்.

கடவுள் மற்றும் ஆன்மிகத்தில் நம்பிக்கை வைத்துள்ள பெரும்பான்மை சாதி இந்துக்களின் வாக்குகளைப் பெற முடியாமல் போய் விடுமோ என்பதை கணக்குப் போட்டே கடவுள் மறுப்பு சித்தாந்தத்தை கைவிட்டிருக்கலாம். அல்லது, பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக, அதிமுக, நா.த.க., கட்சிகளுக்குச் சென்று விடாமல் தடுப்பதற்காக கடவுள் மறுப்பை புறந்தள்ளி இருக்கலாம் என கருதுகிறேன்.

காமராஜருக்கு கட்அவுட் வைத்ததன் மூலம் தான் ஒரு தேசியவாதி என்றும், தூய்மையான அரசியலை முன்னெடுப்பேன் என்றும் சொல்லாமல் சொல்கிறார். மாநாட்டு மேடையில் இஸ்லாமிய பெண் ஒருவரை அமர்த்தி அழகு பார்த்த விஜய், திப்பு சுல்தான், காயிதே மில்லத் ஆகியோருக்கும் பதாகை வைக்க மறந்துவிட்டார்.

‘திராவிடமும், தமிழ்த்தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார் விஜய். தமிழ்த்தேசியம் என்பது திராவிடச் சிந்தனையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அவருக்கான ஆலோசகர்கள் ஏனோ சொல்லிக் கொடுக்க மறந்து விட்டார்கள். திராவிட நிலப்பரப்பு எது என்பது குறித்து அவருக்கு ஆலோசகர்கள் சொல்லிக் கொடுக்க தவறிவிட்டனர்.

யாருக்கெல்லாம் பாதிப்பு?:

விஜய்யின் வருகை தமிழக அரசியல் களத்தில் உறுதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். விஜய் விரித்த வலையில் எந்த கட்சியும் சிக்காமல் போனாலும்கூட அவர் தேர்தலில் உறுதியாக தனித்து களம் காண்பார் என நம்பலாம். முதல் தலைமுறை மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்களில் கணிசமானோர், அவருக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள விஜய் ரசிகர்களும் த.வெ.க., கட்சியை ஆதரிக்கக்கூடும். இதனால் எல்லா கட்சிகளின் வாக்குகளையும் வரும் தேர்தலில் விஜய் சிதறடிக்கச் செய்வார்.

நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. நடிகர் விஜய்யும், கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் ஆரம்பத்தில் மூன்றில் ஒரு பங்கும், எதிர்காலத்தில் 50 விழுக்காடு வாய்ப்பும் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்.

இதன்மூலம் விஜய், இளம் பெண்களின் வாக்குகளைக் கவர வாய்ப்பு உள்ளது. தம்பிக்காக காத்திருந்த ‘அண்ணனுக்கும்’ சேர்த்தே விஜய் ஆப்பு வைத்திருக்கிறார். நா.த.க.,வுக்கு விழும் இளைஞர்கள், இளம் பெண்களின் வாக்குகள் கணிசமாக த.வெ.க.,வுக்கு வரக்கூடும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க., 8&10 விழுக்காடு வாக்குகள் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை திமுக அணி, அதிமுக அணி, பாஜக அணி, நா.த.க., த.வெ.க., என ஐந்து முனைப் போட்டி ஏற்படும் பட்சத்தில், திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம். பலமுனைப் போட்டி நிலவும் போது 30&35 விழுக்காடு வாக்குகளைப் பெற்றாலே ஆட்சியைக் கைப்பற்றும் நிலை வரக்கூடும்.

அதிமுகவை மறந்த விஜய்:

மோடி மஸ்தான், பிளவுவாதம் என
ஈயம் பூசியும் பூசாத மாதிரியும்
பாஜகவை விமர்சித்த விஜய்,
திராவிட மாடல் பெயரில் மக்களைச் சுரண்டி
வரும் திமுகவை மட்டும் பச்சையாக
வெளுத்து வாங்கியிருந்தார்.
ஏ டீம், பி டீம் என்று விமர்சிப்பதையும்
சாடி இருந்தார்.

திமுகவின் இணையக்கூலிப்படை,
தவெக மற்றும் விஜய் குறித்து
ஆபாசமாக பேசி வருவதை
மறைமுகமாக சாடிய விஜய்,
நாங்கள் யாரையும் தாக்கியோ,
ஆபாசமாகவோ பேச வரவில்லை.
ஆனால் எங்கள் அணுகுமுறை
‘டீசண்ட் அப்ரோச்; டீசன்ட் அட்டாக்.
பட், டீப்’பாக இருக்கும் என்றும்
உடன்பிறப்புகளுக்கு ஒரு காட்டு காட்டியிருந்தார்.

”ஊழல்வாதிகள் முகமூடி அணிந்து
நம்முடனே இருக்கிறார்கள்.
ஊழலை ஒழிக்க வேண்டும்,” என்று பேசிய விஜய்,
ஊழலில் ஊறிப்போய் முடைநாற்றம் வீசும்
அ.தி.மு.க.வை மட்டும் எங்கேயும் விமர்சிக்கவில்லை.
சினிமாவில் இருந்து வந்து தமிழ்நாட்டில்
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர்
எம்ஜிஆர் என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டு
கடந்து சென்றார்.

அதிமுகவின் வாக்குகளைக்
கவரும் நோக்கிலோ, அல்லது வரும் தேர்தலில்
அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் நோக்கிலோ
அவர் இலைக்கட்சியை விமர்சிக்காமல்
கடந்து போயிருக்கலாம்
என பார்க்கிறேன்.

பயமறியாத குழந்தை பாம்பை கையில் பிடித்து விளையாடும் என்கிறார் விஜய். ஆனால் அரசியல் களம் என்பது கொடூர நஞ்சு கொண்ட பாம்புகளின் வேட்டைக்காடு என்பதையும் அவர் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

 

– பேனாக்காரன்

Leave a Reply