ஆத்தூர் அருகே பதினான்கு வயது சிறுமியை, ஆட்டை அறுப்பதுபோல் துடிக்க துடிக்க தலையை தனியாக வெட்டி வீசிய கொலைச்சம்பவம்தான், இன்றைக்கு சேலம் மாவட்ட மக்களை நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.
சிறுமி ராஜலட்சுமி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி, சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள், ராஜலட்சுமி (14). தளவாய்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள்.
இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், கார்த்திக் என்கிற தினேஷ்குமார் (25) வசித்து வருகிறார். இவருடைய மனைவி, சாரதா. முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தினேஷ்குமாரும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாரதாவும் 2013ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டரை வயதில் செல்வதரணிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
மாரியம்மன் வேடம்
சிறுமி ராஜலட்சுமி, அக். 23ம் தேதியன்று பள்ளியில் நடக்க இருந்த ஆண்டு விழாவில், மாறுவேடப்போட்டியில் மாரியம்மன் வேடமிடுவதற்கு பெயர் கொடுத்திருந்தாள்.
அதற்காக, அக். 22ம் தேதியன்று மாலை, தினேஷ்குமாருக்குச் சொந்தமான தோட்டத்தில் இருந்து மல்லிகைப் பூக்களை பறித்து வந்து தாயிடம் கொடுத்தாள். தாயார் பூக்களை கட்டிக்கொண்டிருக்க, அவருக்கு உதவியாக சிறுமி பூக்களை சேர்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
உறவுக்காரர்போல…
உறவுக்காரர்போல பழகி வந்த தினேஷ்குமாரே தன் மகளுக்கு எமனாக வருவான் என்று சிறுமியின் தாயார் அத்தருணம் வரை கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. அன்று இரவு 7.30 மணியளவில், கையில் கொடுவாளுடன் சின்னப் பொண்ணுவின் வீட்டுக்குள் நுழைந்த தினேஷ்குமார், சிறுமியை தலைமுடி பிடித்து தூக்கினார். பதறி எழுந்த சின்னப்பொண்ணு, அவரை தடுக்க முயல, சுவரிலேயே அடித்துச் சாய்த்தார்.
ஆட்டை அறுப்பதுபோல…
அடுத்த ஓரிரு நிமிடங்களுக்குள் தினேஷ்குமார், சிறுமி ராஜலட்சுமியின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல அறுத்துக் கொலை செய்தார். அதன்பின்னும் ஆவேசம் தணியாமல், சிறுமியின் உடலை வீட்டு வாசல் வரை இழுத்து வந்து போட்டுவிட்டு, தலையை மட்டும் தனியாக எடுத்துச்சென்று சாலையில் வீசிவிட்டு தன் வீட்டுக்குள் போய் பதுங்கிக் கொண்டார். நிகழ்விடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தளவாய்பட்டி – ஈச்சம்பட்டி சாலையில் தலையை வீசியிருந்தார்.
உடல் முழுவதும் ரத்தம்
சம்பவத்தின்போது அவர், காக்கி நிறத்தில் அரைக்கால் டிரவுசர் மட்டும் அணிந்திருந்தார். கையில் வீச்சரிவாள், உடல் முழுவதும் ரத்தம் படிந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த கணவரை பார்த்து மனைவி சாரதாவும், தம்பி சசிகுமாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ராஜலட்சுமியின் தாயார் கூச்சல் கேட்டு ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த அவர்கள், தினேஷ்குமாரை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக்கொண்டு, அவர்களே ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் இரவு 8.30 மணியளவில் ஒப்படைத்தனர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம்
இதுகுறித்து விசாரணை நடத்திய ஆத்தூர் டவுன் போலீசார், தினேஷ்குமார் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 302 (கொலை), 294 பி, (ஆபாசமாக பேசுதல்) மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவத்தன்று இரவு சிறுமியின் தாயார் சின்னப்பொண்ணு போலீசாரிடம் அளித்த தகவலில், ”அக். 22ம் தேதியன்று மாலை தினேஷ்குமார் தோட்டத்தில் நானும் என் மகளும் பூப்பறித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தோம். பிறகு பூக்கட்டுவதற்கு நூல்கண்டு இல்லாததால், அதை வாங்கிவரும்படி தினேஷ்குமார் வீட்டிற்கு ராஜலட்சுமி சென்றாள்.
பாலியல் உறவு
அப்போது தினேஷ்குமார், என் மகளை பாலியல் உறவுக்கு அழைத்தார். அதைப்பற்றி அப்பாவிடம் சொல்லி, உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறிவிட்டு ராஜலட்சுமி வீட்டுக்கு ஓடிவந்துவிட்டாள். இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில்தான் என் மகளை தினேஷ்குமார் கொன்றுவிட்டான்,” என்று சொல்லியிருக்கிறார்.
வெறும் கூடாக…
தலை வேறு, உடல் வேறாக கிடந்த சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலை தனியாக துண்டிக்கப்பட்டதால், சிறுமியின் உடலில் ஒரு சொட்டு ரத்தம்கூட இல்லாமல் வற்றிப்போய் வெறும் கூடாக இருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பித்துப் பிடித்தவர்போல…
எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விட்டாலும், கொலையாளியிடமும் விசாரிக்க வேண்டுமே. ஆனால் தினேஷ்குமாரோ, பித்துப் பிடித்தவர்போல ஏதேதோ தனக்குள்ளேயே பிதற்றிக் கொண்டிருந்தார். திடீரென்று, ‘என் பொண்டாட்டி பத்தினி…. ஆமா… என் பொண்டாட்டி பேரு என்ன…. நான் யாரு…’ என்றெல்லாம் கேட்டுள்ளார். அக். 23ம் தேதியன்று காலை தினேஷ்குமாரின் அக்காவும், தாயாரும் வந்து பார்த்தபோதுகூட அவர்களை யாரென்றே தெரியாமல்தான் போலீஸ் நிலையத்தில் ‘தேமே’ என்று இருந்திருக்கிறார்.
சம்பவத்தன்று இரவு, மோட்டார் சைக்கிளில் ஏறி உட்காரச்சொன்னபோதுகூட தன்னை சுடுகாட்டுக்குப் கூட்டிப்போகும்படி மனைவியிடம் அடம் பிடித்திருக்கிறார். அவர்களும் அங்கே அழைத்துச் செல்வதாகக் கூறித்தான், போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் வழக்கமான ‘கவனிப்புகளை’ காட்டியபோதும், ‘வலிக்கலையே’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு ஒருமுறை, ‘என்னை அடிச்சுக் கொன்னுடுங்க போலீஸ்…’ என்று கதறினாராம். ‘அந்நியன்’ விக்ரம் போல, மாறி மாறி பேசியதால் அவரிடம் வாக்குமூலம் பெறவே சிரமப்பட்டிருக்கின்றனர் போலீசார்.
நிர்வாண நிலையில்
இதனால், ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆத்தூர் போலீசார், தினேஷ்குமாரை ‘லீடிங் செயின்’ எனப்படும் நீளமான சங்கிலியால் கைகளையும், கால்களையும் சேர்த்தே பிணைத்திருந்தனர். டிரவுசரை முழங்காலுக்குக் கீழ் வரை இறக்கிவிட்டு கிட்டத்தட்ட நிர்வாண நிலையில்தான் படுத்துக் கிடந்தார் என்கிறார்கள் போலீசார்.
அந்த இடத்திலேயே ஒண்ணுக்கு, ரெண்டுக்கு என கழித்த தினேஷ்குமார், விடிய விடிய கத்தி கூச்சல் போட்டதால் தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டதாகவும், அப்போதும் அவர் தூங்கவே இல்லை என்றும் கூறுகின்றனர். அக். 24ம் தேதி இரவு வரையிலும்கூட அவரிடம் இருந்து கொலைக்கான காரணத்தைப் பெற முடியாமல் போலீசார் திணறினர்.
சேலம் மத்திய சிறை
இந்த நிலையில்தான் அக். 25ம் தேதி அதிகாலை 4 மணியளவில், தினேஷ்குமாரை ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர். பிறகு மதியம் 2 மணியளவில் நீதிமன்ற உத்தரவின்பேரில், 15 நாள்கள் விசாரணை கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சாதி வெறியன்?
இது ஒருபுறம் இருக்க, தலித் சிறுமியை சாதி வெறியன் கொன்று விட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் தீயாகப் பரவின. தலித் இயக்கங்கள், ‘எவிடென்ஸ்’ போன்ற அமைப்புகளின் முன்னெடுப்புகளால், இந்த கொலை வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது.
இதையடுத்து, அக். 25ம் தேதியன்று மாலை, சிறுமி ராஜலட்சுமியின் பெற்றோரை அவர்களுடைய வீட்டில் வைத்து நாம் நேரில் சந்தித்துப் பேசினோம். நாம் சென்றதற்கு சற்று முன்பாக ‘எவிடென்ஸ்’ மற்றும் இடதுசாரிகள் ராஜலட்சுமியின் பெற்றோரிடம் விசாரித்துவிட்டுச் சென்றிருந்தனர்.
”நாங்களும் தினேஷ்குமார் வீட்டாரும் நாப்பது வருஷமா தாயா புள்ளயாதான் பழகிட்டு வர்றோம். அவங்க தொட்டிலதான் குடிக்க தண்ணி புடிச்சிக்குவோம். கார்த்திக்கோட காட்டுல பூ பறிச்சுதான் எங்க புள்ள தலைக்கு வெச்சிக்கிட்டு பள்ளி க்கூடத்துக்கு போகும். ஆனா திங்கள் கிழமை (அக். 22) சாயங்காலம் 6 மணிக்கு, பூக்கட்டறதுக்கு நூல் கண்டு வாங்கறதுக்காக எங்க புள்ள அவங்க வீட்டுக்கு போச்சிங்க. அப்ப தினேசு முறைச்சி பேசுனதால புள்ள ஓடியாந்துட்டா….
மயக்கம் வந்த மாதிரி ஆச்சு
அப்புறம் கொஞ்ச நேரத்துல கொடுவாள எடுத்துக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்தான். போதையான போத…. ஜட்டி மட்டும் போட்டிருந்தான். ‘ஏன்டா கார்த்தி, ஆளு இல்லாத வூட்ல கொடுவாளோட வந்து நிக்கறனு’ கேட்டேன். உடனே என்னை தள்ளிவிட்டான். அப்படியே மயக்கம் வந்த மாதிரி ஆச்சுங்க. அதுக்குள்ள என் புள்ளய தலைய வெட்டி கொன்னுப்போட்டுட்டு போய்ட்டாங்க,” என கண்ணீர் மல்கினார் சிறுமியின் தாயார் சின்னப்பொண்ணு.
கார்த்தியண்ணே கைய புடிச்சி இழுத்துச்சு
ராஜலட்சுமியின் தந்தை சாமிவேல், ”சனிக்கிழம (அக். 20) சாயந்தரம் 4 மணி இருக்கும். என் புள்ளய கையப்புடிச்சி தப்பா நடந்துக்கப் பார்த்துருக்கான் கார்த்தி. அவ, அறியாப்புள்ளய்ங்க… இளம்புள்ள… வயசுக்கு வந்து மூணு மாசம்தான் ஆச்சுங்க. மறுநாள் ஞாயித்துக்கிழம, என் புள்ளைக்கிட்ட ‘ஏன்மா சோகமா இருக்கேன்?’னு கேட்டேன்.
‘கார்த்தியண்ணே கைய புடிச்சி இழுத்துச்சு. பயமாக இருக்குப்பானுச்சி’. சரிம்மா… இத யாருக்கிட்டயும் சொன்னா தப்பாயி டும். நீ அறியாபுள்ள… நான் வண்டி வாடகைக்கு போய்ட்டு வந்து, கார்த்திகிட்ட கேட்டுக்கறேன்னு சொல்லிட்டுப் போனேன். திங்கள் கிழமையன்னிக்கு இப்படி என் புள்ளய கொன்னுப் போட்டுட்டான்…..,” என மேற்கொண்டு பேச முடியாமல் கண்ணீர் சிந்தினார்.
அநியாயமா கொன்னுப்புட்டானே…
பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில், ஆண்டுதோறும் சிறுமி ராஜலட்சுமிதான் மாரியம்மன் வேஷமிடுவாளாம். ”விடிஞ்சா சாமி வேஷம் கட்ட இருந்தவள கார்த்திக் இப்படி அநியாயமா கொன்னுப்புட்டானே….” என்றும் சிறுமியின் பெற்றோர் கதறினர்.
கொலைக்கு முக்கிய காரணம்
இது ஒருபுறம் இருக்க, சாதி வெறியும், பாலியல் அத்துமீறலும்தான் கொலைக்கு முக்கிய காரணம் என்று சமூக ஊடகங்களில் பல்வேறு யூகங்களும் பரப்பப்பட்டு வந்தன.
கொலையாளி கார்த்திக் என்கிற தினேஷ்குமாரின் மனைவி சாரதாவுக்கும், தினேஷின் தம்பிக்கும் கள்ள உறவு இருந்து வந்ததாகவும், அதை சிறுமி நேரில் பார்த்துவிட்டதால்தான் இந்த கொலை நடந்ததாகவும் ஒரு தகவல் பரவியது.
இத்தகைய யூகங்கள் எல்லாமே பார்வையற்ற ஒருவன், யானையை தடவிப்பார்த்து அடையாளம் சொன்ன கதைகளாகவே நமது நேரடி கள விசாரணையில் தெரிய வந்தது.
அக்கம்பக்கத்தில் சிலரிடம் விசாரித்தபோதும், தினேஷ்குமார் பற்றிய அபிப்ராயபேதங்கள் யாரிடமும் இல்லை.
கொலை நிகழ்விடம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் முதலியார் சமூகத்தினர் மிகச் சொற்பமாகவே இருக்கின்றனர். கொலையாளியும் நாடார் சமூகத்துப் பெண்ணை காதலித்து மணம் முடித்திருக்கிறார் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது.
ஆனாலும், கொல்லப்பட்டது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி என்பதால், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவையும் வழக்குப்பதிவில் சேர்த்துள்ளனர்.
இழப்பீடு
அதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதல்கட்டமாக அரசுத்தரப்பில் இருந்து 4 லட்சத்து 12500 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது எஞ்சியுள்ள ரூ.412500ம் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு விடும்.
கொலையாளியின் மனைவி சாரதாவிடமும் நாம் விசாரித்தோம்.
”தளவாய்ப்பட்டியை சேர்ந்த ராமு என்பவருக்குச் சொந்தமான கதிர் அறுக்கும் வண்டியிலதான் கடந்த 10 நாளாக கார்த்தி வேலை செஞ்சிட்டு இருந்துச்சி. தஞ்சாவூருக்கு வாடகைக்கு ஓட்டிட்டுப் போயிருந்திச்சு. வேலை முடிஞ்சி சனிக்கிழம (அக். 20) காலை 6.15 மணியளவில் வீட்டுக்கு வந்துச்சு.
எப்பவும் வீட்டுக்குள்ள வந்ததும் பையன தூக்கிக் கொஞ்சும். ஆனா, அன்னிக்கு வந்ததுலேருந்து கார்த்தியோட மூஞ்சி சோகமாக இருந்துச்சு. அதனால, அவரை வேலைக்கு கூட்டிக்கிட்டு போன ராமுங்கறவர்கிட்ட போன்ல கேட்டேன். தஞ்சாவூர்ல நாங்க ஒரு சுடுகாட்டுலதான் படுத்துக்கிடந்தோம். அப்பவே அவன், வண்டி வாங்கணும்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இரு ந்தான்னு சொன்னாரு.
வேப்பிலையால அடிச்சி…
அன்னிக்கு இரவும் சும்மாவே கண்களை திறந்து வைத்து படுத்திருந்துச்சே தவிர, தூங்கவே இல்ல. முனி வந்திருக்கு. எனக்கு மல்லிப்பூ வாசம்னாலே பிடிக்கல… வண்டி வாங்கணும்…. இப்படி சம்பந்தமே இல்லாம ஏதேதோ பேசிக்கிட்டே இருந்தாரு. மறுநாள் (அக். 21) காலையில அவருக்கு பாடம் போடலாம்னு சீலியம்பட்டியில இருக்கற பசுமாட்டுக்காரன்கிற தாத்தாகிட்ட கூட்டிக்கிட்டு போனோம்.
அந்த தாத்தா வேப்பிலையால அடிச்சி பேய் ஓட்டுனாரு. அப்போது கார்த்தி தானாகவே, நான் பாடமுத்தி முனி வந்திருக்கேன். இந்தப் பையன விட்டு ரெண்டு மூணு நாள்ல போய்டுவேன்னு சொன்னிச்சு. அதுக்கப்புறம் அந்த தாத்தா, கார்த்திக்கு நீறு போட்டுவிட்டு எங்களோட அனுப்பினாரு. அதுக்கு குவார்ட்டரும், ஆட்டுக்கறியும் வாங்கிக்கொடுக்குமாறும் சொன்னாரு.
மேற்கு திசையில ஒரு உசுரு போகும்…
அப்புறம், மதியம் 2.30 மணி இருக்கும். மலையம்பட்டியில மாரிமுத்துனு ஒரு சாமியாடிக்கிட்ட கயிறு கட்டிக்கிட்டு வரலாம்ணு கார்த்திய கூட்டிக்கிட்டு போனேன். அப்பலாம் வண்டிய அவருதான் ஓட்டிக்கிட்டு போனாரு. ஆனா தாறுமாறாக ஓட்டினாரு. சாமியாடி மாரிமுத்து, கார்த்தி ஒடம்புல முனி வந்திருக்குனு சொன்னாரு. உங்க 3 பேருக்கும் கிரகம் புடிச்சிருக்கு. மேற்கு திசை அல்லது வடக்கு திசையில ஒரு உசுரு போகும்னு சொன்னாரு. இது என் புருஷன் மனசுல பதிஞ்சு போச்சோ என்னவோ தெரியலைங்க.
அன்னிக்கு இரவும் கார்த்தி தூங்கவே இல்ல. மறுநாள் (அக். 22) எங்களுக்குத் தெரிஞ்ச ஆத்தூர்ல இருக்கிற நவநீதகிருஷ்ணன்கிற குழந்தைகள் டாக்டர்கிட்ட கார்த்திய கூட்டிக்கிட்டு போனேன். ஒரு மணி நேரம் கார்த்தியோட தனியாக பேசினார். அவரும், கார்த்திக்கு லேசா மனநலம் பாதிச்சிருக்குமான்னு சொல்லிட்டு, மருந்து, மாத்திரைகள் எழுதிக் கொடுத்தாரு.
திங்கள் கிழம சாயங்காலம் திடீர்னு என் குழந்தையை நெஞ்சோட அணைச்சு கழுத்தை நெரித்துக் கொல்லப்பார்த்தாரு. அவர்கிட்ட இருந்து குழந்தைய பிடுங்கிக்கிட்டு, நல்லா திட்டிவிட்டேன். ஆனா, அதுக்கப்புறம் சில நிமிஷங்கள்ல அவரு விறுவிறுனு போய் ராஜலட்சுமி புள்ளைய கொன்னுப்புட்டு வந்துட்டாரு.
போலீசில் ஒப்படைச்சோம்
இங்கே இருந்தா அதே வெறியில என்னையும், குழந்தையையும் கொன்னு போட்டிருக்கும்… இல்லேனே… எங்காவது அடிபட்டு செத்திருக்கும்… அந்த பயத்துலதான் நானும், கொழுந்தனாரும் கார்த்தியை போலீசில் ஒப்படைச்சோம்,” என்கிறார் சாரதா.
கொடுவாள் பறிமுதல்
இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் டிஎஸ்பி பொன்.கார்த்திக்குமாரிடம் கேட்டபோது, ”இது ஒரு பக்கா மர்டர். சாதி ரீதியில் இந்த கொலை நடந்ததாக சொல்வதில் உண்மை இல்லை. எங்களுக்குக் கிடைத்த முதல் தகவலின் அடிப்படையிலும், வீடு அருகே புதருக்குள் வீசப்பட்டிருந்த கொலைக்கான கொடுவாள் பறிமுதல் செய்யப்பட்டதன் பேரிலும் எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறோம். கொலையாளிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் எங்கேயும் சொல்லப்படவில்லை,” என்றார்.
இதற்கிடையே, பல்வேறு மட்டங்களில் இருந்தும் சிறுமியின் கொலை குறித்தும், கொலையாளி மீது வேறு சில சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வந்த அழுத்தங்களின் காரணமாகவும், தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்திருக்கிறது ஆத்தூர் டவுன் போலீஸ். மேலும், அவரை குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்திருக்கிறார்கள் போலீசார்.
மர்மத்தை அவிழ்க்குமா?
ஒரு கொலை நடந்திருக்கிறது… கொலையாளியை மனைவியும், தம்பியுமே போலீசில் ஒப்படைத்திருக்கின்றனர். ஆனால், இதுவரை அவர்கள் இருவரிடமும் முறையான / முழுமையான விசாரணையை போலீசார் ஏன நடத்தவில்லை என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக எஞ்சி நிற்கிறது.
கொலைக்கான மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்குமா போலீஸ்?
– செங்கழுநீர்