Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

அதிமுக எம்எல்ஏ செம்மலையால் பலர் முன்னிலையில் அடித்து அவமானப்படுத்தப்பட்ட அக்கட்சித் தொண்டர், தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஏப்ரல் 4, 2019) திமுகவில் இணைந்தார்.

 

தர்மபுரி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த மார்ச் 31ம் தேதி, சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் பகுதியில் பரப்புரைக்காக வந்திருந்தார். அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அதிமுக எம்எல்ஏ செம்மலை மற்றும் இரு கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

அன்புமணி ராமதாஸ் பரப்புரையை தொடங்கியபோது, கூட்டத்தில் பிளந்து கொண்டு வந்த ஒருவர், ‘நீங்கள்தான் போன முறை எம்.பி.யாக ஜெயிச்சீங்க அய்யா. ஆனால் ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை. எட்டு வழிச்சாலையை எதிர்த்தீங்களே அய்யா…. இப்போது அதிமுக உடன் கூட்டணி வெச்சிருக்கீங்களே அய்யா… அந்த திட்டத்தை இனிமே ஆதரிப்பீங்களா அய்யா…’ என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார்.

 

இதைப்பார்த்த எம்எல்ஏ செம்மலை திடீரென்று, ‘டேய் போடா அந்தப்பக்கம் என்று சொல்லியவாறே, அவருடைய கன்னத்தில் ‘பளார் பளார்’ என இரண்டு முறை அறைந்தார். பின்னர் கட்சியினரும், பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினரும் அவரை இழுத்துக்கொண்டு சென்று கூட்டத்துக்கு வெளியே விட்டுவிட்டு வந்தனர். அப்போதும் அவர் கூச்சல் போட்டுக்கொண்டே சென்றார்.

விசாரணையில் அந்த நபர், சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் அருகே உள்ள அக்கரையானூரைச் சேர்ந்த செந்தில்குமார் (39) என்பதும், அதிமுக கிளை செயலாளர் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து செம்மலை கூறுகையில், ‘அவர் அதிமுக காரர்தான். ஏதோ போதையில் இருந்திருப்பார் போலருக்கு. அதுதான் அப்படி பேசிவிட்டார். அவரை பேச வேண்டாம் என்று வாயைத்தான் பொத்தினேன். ஆனால், நான் அடித்ததுபோல் சித்தரித்து விட்டார்கள்,’ என்று கூறியிருந்தார்.

 

மேலும், பாமக, அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து அவருக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, நேற்று முதல் ‘அன்புமணியிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் சாதி வெறியால் அடித்துக்கொலை, என்று ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டிருக்கும் படமும், அதன் அருகில் செந்தில்குமாரின் படமும் இணைத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் பரவின.

 

இதுகுறித்து செந்தில்குமாரை
தொடர்பு கொண்டு கேட்டபோது,
‘நான் கொல்லப்பட்டு விட்டதாக
யாரோ விஷமிகள் வதந்தி பரப்பியுள்ளனர்.
அதை யாரும் நம்ப வேண்டாம்.
நான் தீவிர அதிமுக விசுவாசி.
சிறு வயதில் இருந்தே அதிமுகவில்தான்
இருந்து வருகிறேன். எங்கள் பகுதியில்
கட்சியை வளர்த்தினேன்.
என்னால் செம்மலை பலன் அடைந்துள்ளார்.
அவரும் நானும் ரொம்பவே
நெருக்கமாகத்தான் இருந்தோம்.

அப்படிப்பட்ட என்னையே பலர்
முன்னிலையில் கன்னத்தில் அடித்து
அசிங்கப்படுத்தி விட்டார். சிறு வயதில்
இருந்தே எனக்குக் குடிப்பழக்கம் கிடையாது.
ஆனால் நான் அன்றைக்கு மது போதையில்
இருந்ததாக செம்மலை கூறியுள்ளார்.
அம்மா (ஜெயலலிதா) இறந்ததற்கு பிறகு,
அதிமுகவில் ஒவ்வொரு தொண்டனும்
தாயை இழந்த பிள்ளைபோல்
அனாதைகளாகி விட்டோம்.
எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல்
தடுமாறிக் கொண்டு இருக்கிறோம்.
நான் கொல்லப்பட்டு விட்டதாக
தகவல்கள் வந்ததால், நான் இல்லாத
நேரத்தில் காவல்துறையினர் என்
வீட்டுக்கு வந்து நேரில்
விசாரித்துவிட்டு சென்றுள்ளனர்.

 

இனியும் அதிமுகவில் இருந்தால்
எனக்கு மரியாதை இல்லை.
அதனால் திமுகவில் இணைய
முடிவு செய்துள்ளேன். இனி,
அதிமுக, பாமகவுக்கு தக்க
பாடம் புகட்டப்படும்,’ என்றார்.

 

இந்நிலையில், இன்று மாலை அக்கரையானூரில் உள்ள செந்தில்குமாரின் தோட்டத்தில் அவர் தனது ஆதரவாளர்கள் 400 பேருடன் திமுகவில் இணைந்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

 

செந்தில்குமார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைவது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதி அதிமுக நிர்வாகி மாது என்பவர், கட்சியை விட்டுச்செல்லக்கூடாது என்றும், அனைவரும் திரும்பி வீட்டுக்குச் செல்லுமாறும் மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கிருந்தவர்கள், மாதுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில், ”அதிமுகவில் உண்மையான தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் உழைத்த என்னை பலர் முன்னிலையில் செம்மலை தாக்கியது ஏற்க முடியாது. திமுகவில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இருப்பதை அறிந்து, இந்தக் கட்சியில் இணைந்து கொண்டேன். திமுகவுக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்வேன்,” என்றார்.