Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்
ஆலைக்கு எதிரான
போராட்டத்தின்போது
காவல்துறையினர் நடத்திய
துப்பாக்கிச்சூட்டில் 17 பேர்
பலியாயினர். அப்போது
இதுகுறித்து கருத்து தெரிவித்த
நடிகர் ரஜினிகாந்த்,
போராட்டக்காரர்களுடன்
தீவிரவாதிகளும் நுழைந்ததால்தான்
போராட்டம் வேறு திசைக்குச்
சென்றதாகவும், இப்படி
எதற்கெடுத்தாலும் போராடினால்
நாடு சுடுகாடு ஆகிவிடும்
என்றும் சொன்னார்.

இப்படி அவர் கருத்து சொன்ன அடுத்த நிமிடமே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர். போராட்டக்காரர்களையும், குண்டடிபட்டு இறந்தவர்களையும் ரஜினி தீவிரவாதிகள் என்கிறாரா? என பொதுவெளியில் வினாக்களை முன்வைத்தனர். அதற்கு ரஜினியிடம் இருந்து மவுனமே பதிலாக இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இந்நிலையில், நடுவண் பாஜக அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அண்மையில் நாடு முழுவதும் அமல்படுத்தியது.

 

இந்த புதிய சட்டம், அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைப்பதில் கடும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

 

அஸ்ஸாம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தொடர்ந்து நான்கு நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் காவல்துறையினரைக் கொண்டு போராட்டக் கும்பலை ஒடுக்கி வருகிறது. தமிழகத்திலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதற்கிடையே, இரண்டு நாள்களுக்கு முன்பு, ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் பத்திரிகையாளர்கள் சிலர், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கருத்து கேட்டபோது, ‘இது சினிமா தொடர்பான விழா. இது தொடர்பாக வேறு ஒரு தளத்தில் பதில் அளிக்கிறேன்,’ என்று சொல்லி நழுவினார்.

 

இந்த நிலையில்தான், வியாழக்கிழமை (டிச. 19, 2019) இரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடியிரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து கருத்து பதிவிட்டிருந்தார்.

அதாவது,
”எந்த ஒரு பிரச்னைக்கும்
தீர்வு காண வன்முறை மற்றும்
கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது.
தேசப்பாதுகாப்பு மற்றும்
நாட்டு நலனை மனதில் கொண்டு
இந்திய மக்கள் எல்லோரும்
ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும்
இருக்க வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது
நடந்து கொண்டிருக்கும்
வன்முறைகள் என் மனதிற்கு
மிகவும் வேதனை அளிக்கிறது,”
என்று தெரிவித்து இருக்கிறார்.

ரஜினி அரசியலுக்கு வருவதாக
சொல்லியதில் இருந்தே அவரை
கடுமையாக எதிர்த்து களமாடி
வரும் சீமான், ”பிரச்னைகளுக்கு
வன்முறை தீர்வாகாதுதான்.
வன்முறை செய்தது யார்?
குடியுரிமைச் சட்டத்திருத்தம்
பற்றிய உங்களது கருத்தென்ன?
ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?
அதைச்சொல்லுங்கள் முதலில்.
அடக்குமுறையையும்,
ஒடுக்குமுறையையும் மீறி
போராடும் மாணவர்களை இதைவிட
யாராலும் கொச்சைப்படுத்த
முடியாது,” என்று
ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, ரஜினியின் ட்விட்டர் பதிவு அனைத்து காட்சி ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. ட்விட்டர் தளத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்காமல், போராட்டக்காரர்களை வன்முறையாளர்கள் எனக்கூறியதாக அவருக்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். அதேநேரம், ரஜினி க்கு கண்டனம் தெரிவிக்கும் கும்பலின் பின்னணியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக கருதும் ரஜினி ரசிகர்களும், அவர்களை விமர்சித்து கருத்துகளையும், கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். சொல்லப்போனால் ட்விட்டர் தளம் போர்க்களம்போல் உருவாகி இருக்கிறது.

 

ரஜினி நடித்த படங்கள்
வெளியாகும் நேரத்தில் மட்டுமே
அவர் அரசியல் ரீதியில்
கருத்துகளை தெரிவிக்கிறார்.
அவருடைய படங்கள் வசூல்
ரீதியாக பெரிய அளவில்
வெற்றி பெறுவதற்காக செய்யும்
ஒருவித சந்தை யுக்தி என்ற
கருத்தும் வழக்கம்போல்
எழாமல் இல்லை. போர்ப்ஸ்
வணிக இதழ்கூட இந்திய
அளவில் 100 பிரபலங்களின்
பட்டியலை வியாழக்கிழமை
(டிச. 19) வெளியிட்டுள்ளது. அதில்,
ரஜினிக்கு 13ம் இடம் அளித்துள்ள
நிலையில், தன்னுடைய பட
வெற்றிக்காக அவர் அரசியல்
கருத்துகளை பேசுகிறார் என்பது
ஏற்புடையதும் அல்ல.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக
அவர்தான் பாக்ஸ் ஆபீசில்
முதலிடத்தில் இருக்கிறார்
எனும்போது, இத்தகைய
யுக்தியை பின்பற்ற
தேவையிருக்காது என்றே
நம்புகிறோம்.

இன்னும் சிலரோ, என்டிஆர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் கிடைத்த புகழை அரசியலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், ரஜினிகாந்த் தன் படங்களின் வெற்றிக்காக அரசியலைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றும் விமர்சனம் செய்திருக்கின்றனர். சிலர், அவரை மனநலம் பாதி க்கப்பட்டவராகக்கூட கேலி செய்திருக்கிறார்கள்.

 

ரஜினி மீதான தாக்குதல்களும், எதிர்மறை விமர்சனங்களும் அவரை அரசியல் களத்திற்குள் வராமலேயே, ‘சீச்சீ… இந்தப்பழம் புளிக்கும்’ என்ற கதையாக ஒதுங்கிப் போகச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு காய்நகர்த்துவோரும் களத்தில் இருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ரஜினியின் வன்முறை
குறித்த கருத்துக்கு
ட்விட்டர் தளத்தில்
ராஜ் பிரின்ஸ் என்ற பதிவர்,
”அண்மையில் ரஜினிகாந்த்,
சிலர் என் மீது காவி சாயம்
பூச பார்க்கிறார்கள். நானும்
காவிக்குள் சிக்க மாட்டேன்.
மக்கள் மன்றமும்
மாட்டிக்கொள்ளாது என்று
பதில் அளித்து இருந்தார்.
ஆனால், குடியுரிமை
திருத்தச் சட்டம் குறித்த
கருத்தின் மூலம் அவர்
பாஜக ஆதரவாளர் என்பதும்,
நேரத்திற்கு தகுந்தாற்போல்
தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி போன்றவர் ரஜினி,”
என்றும் கருத்து
தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அவருடைய கட்சி பங்கேற்கும் என்றும் அறிவித்துள்ளார். கமல் வாய் திறந்ததால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே, ரஜினியிடம் இருந்து வன்முறை தீர்வாகாது என்ற தொனியில் கருத்து வெளியாகி இருக்கலாம் என்கிற அபிப்ராயமும் அரசியல் களத்தில் பேசப்படுகிறது. காங்கிரஸ் நிர்வாகியும் சக திரைக்கலைஞருமான குஷ்பு சுந்தர், குடியுரிமை சட்டம் குறித்து கமலின் துணிச்சலான கருத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ள அவருக்கு, கமலும் பரஸ்பரம் நன்றி தெரிவித்துள்ளார்.

 

எது எப்படியோ, இன்னும் இரண்டொரு நாள்களுக்கு ரஜினிதான் ஊடகங்களுக்கு அவல்.

 

– பேனாக்காரன்