Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழகம்: அணையா நெருப்பு!: ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

தவறான நீதி வழங்கிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு, காவிரி விவகாரத்தில் பாஜகவின் அநீதிக்கு எதிராகவும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

 

 

இந்திய அளவில் மிகப்பெரும் போராட்டக் களமாக, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈழ இறுதி யுத்த நாள்களில் தொடங்கிய போராட்டம் வெப்பம் குறையாமல் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள், கூடங்குளம், டாஸ்மாக், நெடுவாசல், விவசாயிகள் தற்கொலை, நியூட்ரினோ, காவிரி என அடுத்தடுத்து உஷ்ணம் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.

 

இதற்கான பொறி, கண்ணகி விதைத்தது. செங்கோல் முறைமையில் இருந்து வழுவிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு அணையாமல் தணலாக விசும்பிக் கொண்டே இருக்கிறது.

 

எங்கெல்லாம் எப்போதெல்லாம் நீதி வழுவுகிறதோ அப்போதெல்லாம் தணல் கனிந்து பெரும் ஜூவாலையாக தகிக்கத் தொடங்கி விடுகிறது.

 

கடந்த 2015ம் ஆண்டில், நாட்டிலேயே அதிக போராட்டங்கள் கண்ட மாநிலமாக தமிழகம் மாறிப்போனது. அந்த ஆண்டில் மட்டும், பல்வேறு பிரச்னைகளுக்காக தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் எண்ணிக்கை 20450.

 

இதற்கு அடுத்த இடத்தில் பஞ்சாப். அங்கு, 13000 போராட்டங்கள். போராடுவதையே வாழ்வியலின் ஒரு பகுதியாகக் கொண்ட இடதுசாரிகள் ஆளும் கேரளாவில்கூட அப்போது 3371 போராட்டங்கள் மட்டுமே நடந்துள்ளன. இடதுசாரிகளின் மற்றொரு கோட்டையான மேற்கு வங்கத்தில் அந்த ஆண்டு 3089 போராட்டங்கள் நடந்துள்ளன.

 

எதற்காகச் சொல்கிறேன் என்றால், தமிழகம் வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் பூமி. அவ்வளவு சீக்கிரத்தில் கிளர்ந்தெழுந்து விட மாட்டர். ஆனால், அநீதிக்கு எதிராகவும், சுயமரியாதைக்கு ஒரு பங்கம் என்றாலும் உடனடியாக வலுவாகக் குரல் எழுப்பும் மாநிலம் என்றால் அது தமிழகம் மட்டும்தான்.

 

இந்த இடத்தில்தான் அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் மிகத் தந்திரமாக காய்களை நகர்த்துகின்றனர்.

 

காவிரி நீரைப் பெறுவது என்பது நமது அடிப்படை உரிமை மட்டுமல்ல. சுயமரியாதையைப் பாதுகாக்கவும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வற்புறுத்துவது கட்டாயமாகிறது. இறுதியாக கிடைத்திருக்கும் இந்த நீதியிலும் நாம் சமரசம் செய்து கொள்ள நேர்ந்தால், அது நம் பிறப்பிலேயே குற்றம் உள்ளதாகத்தான் கருதிக்கொள்ள வேண்டும்.

 

காவிரிக்காக ஆளும் அதிமுக மேற்கொண்ட உண்ணாவிரதம் முதல் எதிர்க்கட்சிகள் நடத்தும் திடீர் மறியல், கடையடைப்பு வரை எல்லாமே அவரவர்கள் தங்களுக்கான இருப்பைப் பதிவு செய்வதற்கான வேலைகளேயன்றி வேறு ஒன்றும் இல்லை. கர்நாடகாவில் ஆளும்கட்சியும், ஆட்சிக்கு வரத்துடிக்கும் பாஜகவும் காவிரிக்காக ஒரே புள்ளியில் கைகுலுக்கும்போது தமிழகத்தில் மட்டும் ஏன் அது தடைப்பட்டு நிற்கிறது?

 

சரி. ஆளுங்கட்சி வராவிட்டால் போகிறது. பிரதான எதிர்க்கட்சியான திமுக ஏன், ஆளுங்கட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்க முயற்சிக்கவில்லை? ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு கட்சி போராட்டத்தை அறிவிப்பதால், காவிரி விவகாரத்தில் கிளம்பிய உஷ்ணம் நீர்த்துப் போகவே செய்யும்.

 

ஆடிட்டர் குருமூர்த்தி பார்வையில் சொல்லவேண்டுமானால் ஆண்மையற்ற அதிமுகவை விட்டுத்தள்ளுவோம். திமுகவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருக்கின்றனர்.

 

தேமுதிக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர், மக்கள் நீதி மையம் மற்றும் இன்னபிற சிறு சிறு கட்சிகளும் கணிசமான தொண்டர்களைக் கொண்டிருக்கின்றன.

 

அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்பதை விட அவர்களை ஏன் இக்கட்சிகள் காவிரிக்காக ஒன்றுதிரட்டவில்லை என்பதே கேள்வி. அப்படி ஒன்று திரட்டப்படாததற்குக் காரணம், எல்லா கட்சிகளுமே இப்பிரச்னையில் அடையாள அரசியலை முன்வைப்பதுதான்.

 

கர்நாடகா காங்கிரஸ், பாஜக மட்டுமின்றி கேரளாவில் ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை எதிர்க்கின்றன. பிறகெப்படி, தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜகவினர் காவிரிக்காக குரல் கொடுப்பார்கள்? அப்படியே குரல் கொடுத்தாலும் அதுவும் அடையாள அரசியலே.

 

1925ல் பார்ப்பனர்களுக்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தின் மூலம் மிகப்பெரும் கிளர்ச்சியைத் தட்டி எழுப்பினார் பெரியார். பின்னர் அவரேதான், ஹிந்தி மொழி திணிப்பைக் கொண்டு வந்த ராஜாஜிக்கு எதிராக 1937ல் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

 

அவர் மூட்டிய தீ, அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோர் தலைமையில் 1965ல் மாநிலமெங்கும் பற்றி எரிந்தது. அந்தப் போராட்டங்களை அப்போது திமுக முன்னெடுத்தாலும், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்விலும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெறி ஊறிப்போயிருந்தது.

 

அத்தகைய வெறியுணர்வு, இப்போதும் வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக சமூக ஊடகங்கள் மூலம் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள் எங்கே போனார்கள்? ஸ்டெர்லைட்டுக்கும், காவிரிக்காகவும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையிலும், இளைஞர்கள் கூட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட்டுக்காக மிகப்பெரும் வரிசையில் நின்றதை பார்க்க முடிந்ததே.

 

ஐபிஎல் மைதானத்திலும் எதிர்ப்பைக் காட்டலாம். உலகளவில் கவனம் பெறும். மறுப்பதற்கில்லை. அதனால் ஏற்படும் இழப்பு என்பது பிசிசிஐ எனப்படும் தனியாருக்கானது. ஆனால், அதைவிட நாம் வேறு வடிவில் திரள வேண்டும் என்பதே தனிப்பட்ட விருப்பம்.

 

நாம் முன்னரே சொல்லியதுதான். தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள், பிஎஸ்என்எல், தபால் அலுவலகங்கள், கலால், வருமானவரி, ரயில் நிலையங்கள், அனல் மற்றும் அனுமின் நிலையங்கள் மற்றும் இன்னபிற நடுவண் அரசுக்குத் தொடர்புடைய அனைத்து அலுவலக வாயில்களையும் முற்றுகையிடுவோம். முன்னறிவிப்பின்றி.

 

இன்னும் அலைபேசி கோபுரங்கள் இருக்கின்றவே. ஆங்காங்கே திரளுவோம். பணிக்கு வரும் ஊழியர்களை வாயிலிலேயே தடுப்போம். அவர்களும் தமிழர்கள்தானே?. அவர்களும் தாகம் எடுத்தால் தண்ணீரைத்தானே குடித்தாக வேண்டும்?

 

நடுவண் அரசுக்கு இதமாக சொறிந்துவிட தமிழக அரசு காவல்துறையை ஏவக்கூடும். அதுதானே அவர்களுக்கு ஆகச்சிறந்த வழி. அவர்கள் ஆயுதம் கொண்டு தாக்கட்டும். நாம் நிராயுதபாணியாக எதிர்கொள்வோம். கருத்துப் பரப்புரைகள் முன்னால் காக்கிகள் என்ன செய்துவிட முடியும்?

 

தமிழ்நாட்டில் உள்ள 12618 கிராமங்களிலும் காவிரிக்கான போராட்டம் கிளர்ந்தெழுகையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு லட்சம் காவல்துறையினரை வைத்து இந்த அரசால் சமாளித்து விட முடியாது.

 

துணை ராணுவத்தை அழைத்தாலும் கிளர்ச்சியை ஒடுக்கிவிட முடியாது. கைதே செய்தாலும் இங்குள்ள 136 சிறைகளில் நம்மை அடைத்து வைக்க இடமில்லை. கல்யாண மண்டபங்களும் போதாது. தேச விரோத சட்டத்தில் எத்தனை பேரை அடைக்க முடியும்?. ஒட்டுமொத்தமாக நடுவண் அரசை முடக்கிப் போடும் வேலைகளைச் செய்வதே இப்போதைய நம் உத்தியாக இருக்க வேண்டும்.

 

இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக தமிழகத்தில் நடுவண் பாஜக அரசு, ஆட்சிக் கலைப்பிலும் ஈடுபடக்கூடும். அத்தகைய அச்சம், மாநில அரசுக்கும் ஏற்படும். இப்படி ஒரே நேரத்தில் நாம் நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் அழுத்தம் கொடுக்க முடியும்.

 

ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தமிழுக்காக 68 பேர் தன்னுயிர் ஈந்த தியாகிகளையும் தமிழ்நாடு கண்டிருக்கிறது. தன்னியல்பாக கிளர்ந்தெழும் தமிழர்களை தடுக்க எந்த சக்திக்கும் திராணியில்லை.

 

காவிரியை வைத்து இனியும் அரசியல் செய்ய அனுமதிப்பது சரியல்ல. தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பத்து விழுக்காட்டினர் கிளர்ந்து எழுந்தாலே, நாடு தாங்காது. மக்களே, பறவைத் தூக்கத்தில் இருந்து விடுபடுங்கள்.

 

நதிகள் பிறந்த இடத்தைக் காட்டிலும், அது பாய்கின்ற மாநிலங்களுக்கே முதல் உரிமை என்ற அகில உலக சட்டமே இங்கு மீறப்பட்டு இருக்கிறது. நாட்டில் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பு முறையே சிதிலமடைந்து கிடைக்கையில், நாம் மட்டும் தண்டனை தர ஐந்து ஆண்டுகள் காத்திருப்பது எங்ஙனம் சரியாகும்?

 

ஒடுக்குமுறைகளில் இருந்தும் சுரண்டல்களில் இருந்தும் நம்மை மீட்க யாதொரு ரட்சகரும் இனியும் உயிர்த்தெழப் போவதில்லை. மாறாக நாம் கிளர்ந்தெழுவதன் மூலமே நீடித்த தீர்வைப் பெற முடியும். ஓட்டரசியல் கட்சிகள் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சமரசங்களுக்குக் கட்டுண்டு விடுவர். அதனால்தான் அவர்களைப் பின்தொடராமல், தமிழராய் ஒன்றுபடுங்கள் என்கிறேன்.

 

கண்ணகி பற்ற வைத்து தீ, இன்னும் அணைந்து விடவில்லை.

 

– பேனாக்காரன்.