இந்திய பங்குச்சந்தைகளில்
கடந்த வாரத்தின் கடைசி
வர்த்தக நாளில்,
முதல் இரண்டு மணி
நேரத்திற்கு கரடி ஆட்டம்
காட்டி வந்த நிலையில்,
இரண்டாவது சுற்றில்
காளையின் ஆட்டம் தொடங்கியது.
பங்குச்சந்தைகள் ஓரளவு
சரிவிலிருந்து மீண்டதால்
முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
அடைந்தனர்.
கரடியின் ஆட்டம்!:
கடந்த வியாழனன்று
(ஜூன் 11), மும்பை
பங்குச்சந்தையான சென்செக்ஸ்
33538 புள்ளிகளுடன்
முடிவடைந்தது. சந்தை
ஆய்வாளர்கள் முன்பே
எச்சரித்தது போலவே
வாரத்தின் கடைசி வர்த்தக
நாளான வெள்ளியன்று
(ஜூன் 12), ஆரம்பத்திலேயே
சென்செக்ஸ் 32436
புள்ளிகளில்தான் துவங்கியது.
அதாவது முந்தைய நாள்
முடிவைக் காட்டிலும்
இது 1102 புள்ளிகள்
வீழ்ச்சி ஆகும்.
வர்த்தகம் தொடங்கிய
முதல் இரண்டு மணி நேரத்தில்
பெரிய முன்னேற்றம் இல்லாததால்
முதலீட்டாளர்கள் உற்சாகம்
இழந்தனர். எனினும்,
நீண்ட கால முதலீடுகளுக்கு
இப்போதைய சூழல் உகந்தது
என்ற கருத்து நிலவியதால்,
அதன்பிறகு சென்செக்ஸ்
படிப்படியாக முன்னேற்றம்
கண்டது. குறைந்தபட்ச
அளவாக 32348 புள்ளிகளுக்குச்
சென்ற சென்செக்ஸ்,
இறுதியில் 33780 புள்ளிகளில்
நிறைவடைந்தது. இது
முந்தைய நாள் நிறைவடைந்த
புள்ளிகளைக் காட்டிலும்
இது 242.52 உயர்வு ஆகும்.
அதேநேரம்,
ஒரே நாளில் சென்செக்ஸில்
ஆரம்ப நேர குறியீட்டெண்களுடன்
ஒப்பிடுகையில் 1102 புள்ளிகள்
அதிகரித்து இருப்பது
முதலீட்டாளர்களிடையே
புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி
உள்ளது. சென்செக்ஸில்
பட்டியலிடப்பட்டுள்ள
30 முக்கிய பங்குகளில்,
17 பங்குகளின் விலைகள்
கணிசமாக ஏறியிருந்தன.
13 பங்குகளின் விலைகள்
வீழ்ச்சி அடைந்தன.
பிஎஸ்இ சந்தையில் வணிகத்தில் ஈடுபட்ட 2653 நிறுவனங்களில், 1235 நிறுவனப் பங்குகள் ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தன. 1264 பங்குகளின் மதிப்பு சரிவடைந்தன. இந்த ஏற்ற, இறக்கத்திலும் 51 நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வார உச்சத்தைத் தொட்டு இருந்தன. 53 பங்குகள், ஓராண்டின் குறைந்தபட்ச விலைக்குச் சென்றன. 288 பங்குகள் அதிகபட்ச விலையை எட்டியிருந்தன.
நிப்டி நிலவரம்:
தேசிய பங்குச்சந்தையான
நிப்டியும், துவக்கத்தில்
சரிவுடனேயே (9544 புள்ளிகள்)
வர்த்தகத்தைத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் சரிவில்
இருந்து மீண்டு முன்னேற்றம்
கண்ட நிப்டி 10000 புள்ளிகளைத்
தொட்டுவிடும் என்று
எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
9972.90 புள்ளிகளில்
நிறைவடைந்தது. இச்சந்தையில்
வர்த்தக நிலையைக் கணக்கிட
உதவும் 50 பங்குகளில்,
29 நிறுவனப் பங்குகளின்
விலைகள் சற்று ஏற்றம்
கண்டிருந்தன. 20 பங்குகளின்
மதிப்பு வீழ்ச்சி அடைந்தன.
ஒரு பங்கின் விலையில்
மாற்றங்கள் இல்லாமல் இருந்தது.
நிப்டியில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா (7.57%), இன்பிராடெல் (6.45%), ஸ்ரீ சிமெண்ட் (5.82%), பஜாஜ் பைனான்ஸ் (4.46%), ஹீரோ மோட்டார்ஸ் (3.90%) ஆகிய பங்குகள், இன்ட்ரா டே வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு லாபத்தைக் கொடுத்தன. ஸீ என்டர்யெயிண்மென்ட், ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா, பவர் கிரிட், விப்ரோ பங்குகள் சரிவை சந்தித்தன.
ஒட்டுமொத்த அளவில் நிப்டியில் நேற்று வர்த்தகத்தில் ஈடுபட்ட 1912 நிறுவனங்களில் 942 பங்குகள் ஓரளவு வளர்ச்சி கண்டிருந்தன. 903 பங்குகளின் விலைகள் சரிவடைந்து இருந்தன. 67 பங்குகளின் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
உலகளவில், அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக் (0.56%), மற்றும் எப்டிஎஸ்இ (0.47%), சிஏசி (0.49) ஆகிய ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் அடுத்தடுத்த செஸ்ஸன்களில் லேசாக வளர்ச்சி கண்டன. அதனால்தான் இந்திய பங்குச்சந்தைகளும் ஆரம்பத்தில் இறக்கத்துடன் தொடங்கினாலும் நேரம் செல்லச்செல்ல லேசான உயர்வைச் சந்தித்தன.
புதிய நம்பிக்கை:
கொரோனா தொற்றால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக, பங்குச்சந்தைகளில் ஸ்திரமற்ற தன்மை காணப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்களிடையே விற்கும் ஆர்வம் அதிகரித்ததால், நேற்று வர்த்தகம் தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்திற்கு மந்த நிலையிலேயே காணப்பட்டது என்கிறார்கள் நிபுணர்கள்.
இது ஒருபக்கம் இருக்க, வரும் வாரத்தில் நிப்டி 10160 முதல் 10250 புள்ளிகள் வரை உயரக்கூடும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இது, முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
– ஷேர்கிங்