Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (23/8/17) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதா, குற்றவாளிதான் என்றாலும் அவர் மரணம் அடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி அடைக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் அமிதவ ராய், போப்டே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை நேற்று விசாரித்தது.

இன்று தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மேற்சொன்ன நீதிபதிகளின் அமர்வு சசிகலா உள்ளிட்ட மூவரின் சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள் ஏதும் சொல்லப்படவில்லை.

இதனால் சசிகலா தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலும் சசிகலா தரப்பினர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.