Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மர்ம மரண வழக்கு: ”செத்தவன் ஒரு ரவுடி ஃபெல்லோ!” டிஎஸ்பி அலட்சிய பதில்!!

சேலம் அருகே,
சந்தேக மரணமாக
முடிக்கப்பட்ட வழக்கை,
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு
சிபிசிஐடி காவல்துறை
துருவி துருவி விசாரித்து
வரும் நிலையில், ஆரம்பத்தில்
இந்த வழக்கை விசாரித்த
காவல்துறை அதிகாரி ஒருவர்,
‘இறந்துபோன நபர் ஒன்றும்
விஐவி அல்ல.
ஒரு ரவுடி ஃபெல்லோ’ என
அலட்சியமாக பதில்
அளித்துள்ளார்.

மணிகண்டன்

சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டி சித்தனூரில் உள்ள காத்தவராயன் கோயில் அருகே வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி உள்ளூரைச் சேர்ந்த சிலர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் தாயின் மடியிலேயே உயிரிழந்தார்.

 

இதுகுறித்து சகுந்தலா, இரும்பாலை காவல் நிலையத்தில் தன் மகனை கோவிந்தராஜ், ராம்குமார், ஏழுமலை, முட்டை ராஜா என்கிற விஜயராஜா ஆகியோர் அடித்துக் கொன்றுவிட்டதாக புகாரளித்தார். அதன்பேரில், அப்போது இரும்பாலை காவல் ஆய்வாளராக இருந்த சண்முகம், சிஆர்பிசி பிரிவு 174 (3)-ன் கீழ் (சந்தேக மரணம்) வழக்குப்பதிவு செய்தார்.

 

அதற்கு அடுத்த நாள் (20.12.2012), சேலம் அரசு மருத்துவமனையில் மணிகண்டனின் சடலம், உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதன்பிறகு சடலத்தைப் பெற்றுக்கொண்ட பெற்றோர், சித்தனூரில் தங்களுக்குச் சொந்தமான மேட்டு நிலத்தில் சடலத்தைப் புதைத்தனர்.

 

உடற்கூறாய்வு சான்றிதழில் (பிஎம்சி), ”மணிகண்டனின் இடது முழங்கால், இடது கால், இடது நெற்றிப்பொட்டு, முன் கழுத்து ஆகிய இடங்களில் சிராய்ப்பு காயங்கள். முதுகு, வலது மேல் கை, இடதுபுற வயிறு ஆகிய இடங்களில் கன்றிய காயங்கள், இடதுபுற நெற்றியில் கிழிந்த காயம், கன்றிய காயம், இதய வீக்கம் காணப்படுகிறது. இதயத்தின் கீழ் அறையில் ரத்த ஓட்டம் குறைந்து, மாரடைப்பு ஏற்பட்டதற்கான தடயம் காணப்படுகிறது. இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு காணப்படுகிறது,” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மணிகண்டனின் பெற்றோர்

இதற்கிடையே, மணிகண்டனை தான்தான் அடித்துக் கொன்றதாகக்கூறி, சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த கோவிந்தராஜ், விஏஓ முன்னிலையில் சரணடைந்தார். அவரை கைது செய்த இரும்பாலை காவல்துறை, சந்தேக மரணம் என்ற பிரிவை திருத்தம் செய்து கொலை வழக்காக (இதச பிரிவு 302) மாற்றி பதிவு செய்தது. இதையடுத்து கோவிந்தராஜூம், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். புகாரில் கூறப்பட்ட ஏழுமலை, ராம்குமார், முட்டை ராஜா ஆகிய மூவர் மீதும் குற்றத்திற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி காவல்துறையினர் விசாரித்து அனுப்பி விட்டனர்.

 

இது ஒருபுறம் இருக்க, மணிகண்டனின் முக்கிய உடல் பாகங்கள் வேதியியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதன் அறிக்கையில், மணிகண்டன் சம்பவத்தன்று மாரடைப்பு ஏற்பட்டதால்தான் இறந்தார் என சொல்லப்பட்டு இருந்தது. மணிகண்டனை கொலை செய்ததாக கோவிந்தராஜ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், வேதியியல் பரிசோதனைக்கூட ஆய்வில் மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம் என வந்ததால், ஆய்வாளர் சண்முகம் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வேதியியல் பரிசோதனை முடிவில் சொல்லப்பட்ட தகவலையே தனது இறுதி விசாரணை அறிக்கையிலும் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 59 நாள்கள் சிறையில் இருந்த கோவிந்தராஜூம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

 

இந்த நிலையில்தான், சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இனியன் செந்தில் மூலமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மணிகண்டனின் பெற்றோர், மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கோவிந்தராஜ் உள்ளிட்ட நால்வர்தான் அடித்துக் கொன்றனர் என்றும் கூறினார். வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட நீதிமன்றம், மணிகண்டன் மரண வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கும்படி சேலம் சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.

 

இதையடுத்து 2020 ஜூன் 30ம் தேதி, சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில், மணிகண்டனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடத்திலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவர் கோகுலரமணன் உடற்கூறாய்வு செய்தார். முக்கிய பாகங்கள், தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

 

சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக அங்குலம் அங்குலமாக இந்த வழக்கை புலனாய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கு ‘புதிய அகராதி’ தரப்பிலும் மணிகண்டனின் பெற்றோர், வழக்கில் சரணடைந்த கோவிந்தராஜின் மனைவி லதா, அவருடைய அண்ணன் ஏழுமலை ஆகியோரின் வாக்குமூலங்கள், முன்னாள் எஸ்பி, மருத்துவர், உள்ளூர்க்காரர்களிடம் பெற்ற தகவல்களையும் 12.7.2020ம் தேதி ‘புதிய அகராதி’ இணையத்தில் விரிவாக எழுதி இருக்கிறோம்.

 

ஆரம்பத்தில், மணிகண்டனின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த அப்போதைய ஆய்வாளர் சண்முகம், அச்சம்பவம் நடந்த அடுத்த சில மாதங்களில் கோவை சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 2017ல் டிஎஸ்பி ஆக பதவி உயர்வு பெற்ற சண்முகம், தற்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உள்கோட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

 

நடந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி சண்முகத்திடம் விசாரித்தோம்.

டிஎஸ்பி சண்முகம்

புதிய அகராதி: நீங்கள் இரும்பாலை காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது மணிகண்டன் என்பவரின் மரண வழக்கை விசாரித்தீர்கள். அந்த வழக்கை, 8 ஆண்டுகள் கழித்து இப்போது சிபிசிஐடி போலீசாரின் மறு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உங்கள் புலனாய்வின் படி இந்த வழக்கில் நடந்தது என்ன?

 

டிஎஸ்பி சண்முகம்: ஆக்சுவலா…
இறந்துபோன மணிகண்டன்,
ஒரு ரவுடி ஃபெல்லோ.
அவன் மீது இரும்பாலை
காவல்நிலையத்தில்
‘ஹிஸ்டரி ஷீட்’ இருந்தது.
கஞ்சா போதையில் ஊருக்குள்
எக்கச்சக்கமாக தகராறு
செய்வான். இந்த வழக்கில்
அப்போது கைதான கோவிந்தராஜும்,
மணிகண்டனும் நண்பர்கள்தான்.
சம்பவத்தன்று கோவிந்தராஜ்,
அய்யப்பன் கோயிலுக்கு சென்றுவிட்டு
வீடு திரும்பியிருந்தான். அன்று
சாமிக்கு போட்டிருந்த மாலையை
கழற்றப் போயிருந்தான்.
அந்த நேரம் பார்த்து மணிகண்டன்
கோவிந்தராஜின் வீட்டுக்குச் சென்று,
அவருடைய மனைவி லதாவிடம்
ஏதோ தகராறில் ஈடுபட்டிருக்கிறான்.

 

புதிய அகராதி: லதாவிடம் அவர் தவறாக நடக்க முயன்றாரா?

 

டிஎஸ்பி சண்முகம்: கோவிந்தராஜின்
மனைவி லதாவுக்கு, மணிகண்டன்
அண்ணன் முறையாகிறது. அதனால்
அவன் தவறான நோக்கத்தில் நடந்து
கொண்டானா எனத் தெரியாது.
என்னிடமும் லதா, அப்போது
அப்படி எதுவும் சொல்லவில்லை.
அப்போது கஞ்சா போதையில்
‘அன் கான்சியஸ்’ ஆக இருந்த
மணிகண்டன், லதா வீட்டில்
கட்டிலில் படுத்துக் கொண்டான்.
அப்போது வீட்டுக்கு வந்த
கோவிந்தராஜிடம் லதா, அவன்
தகராறு செய்ததாகச் சொல்ல,
வீட்டில் இருந்த கட்டையை எடுத்து
மணிகண்டனை அஞ்சாறு
அடி அடித்திருக்கிறார். அதில் அவன்
போதையில் கீழே புரண்டு
விழுந்து விட்டான்.

 

இதனால் பதற்றம் அடைந்த
கோவிந்தராஜ் உடனடியாக ராம்குமார்,
முட்டை ராஜா, ஏழுமலை ஆகியோருக்கு
போன் செய்து வீட்டுக்கு வரச்சொல்கிறான்.
அவர்கள் வரும்போது மணிகண்டன்
அங்கே தரையில் ‘அன் கான்சியஸ்’
ஆகத்தான் கிடந்திருக்கிறான். அதனால்
அவர்கள் வந்து அடித்திருக்க வாய்ப்பு
இல்லை. அவர்கள் நான்கு பேரும்
மணிகண்டனை அங்கிருந்து வேறிடத்திற்குத்
தூக்கிச் சென்றனர். மணிகண்டனுக்கு
ஏதாவது ஆகிவிட்டால் நாமும் மாட்டுவோம்
என்று பயந்துபோன அவர்கள்,
கோவிந்தராஜை பாதி வழியிலேயே
விட்டுவிட்டு மற்ற மூவரும் ஓடிவிட்டனர்.
அதன்பிறகு கோவிந்தராஜ்
தனி ஒரு ஆளாக மணிகண்டனை
தூக்கிச்சென்றான். அப்போதே
மணிகண்டனின் கால்கள் தரையில்
உரசிக்கொண்டே வந்தது.

 

மணிகண்டனின் அம்மா
அங்கே வருவதைப் பார்த்துவிட்ட
கோவிந்தராஜ், அவரை அங்கேயே
போட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.
அப்போது வரை அவனுக்கு
உயிர் இருந்தது. அவங்க அம்மா
தண்ணீர் கொடுக்கும்போதுதான்
அவன் இறந்து போகிறான்.
அந்த சம்பவம் நடந்தபோது
நான் வீராணத்தில் இருந்தேன்.
இரும்பாலை, வீராணம் ஆகிய
இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களுக்கும்
நான்தான் அப்போது சர்க்கிள்
இன்ஸ்பெக்டர்.

 

மணிகண்டன் எப்போதுமே
ஊருக்குள் தகராறில் ஈடுபடுவதால்
போலீசும் போகவில்லை போல இருக்கு.
அவனுடைய தந்தை, அதிமுக
ஆதரவாளர். இந்தப் புகாரில்
கூறப்பட்ட ராம்குமார், கோவிந்தராஜ்,
ஏழுமலை, முட்டை ராஜா ஆகியோர்
திமுக ஆதரவாளர்கள். அதனால்
அதிமுகவினர் சேர்ந்து கொண்டு
சாலை மறியலுக்கு திட்டமிட்டிருந்தனர்.
அதன்பிறகு என்ன நடந்ததோ
மறியலை கைவிட்டு, மணிகண்டனின்
உடலை ‘போஸ்ட் மார்ட்டம்’
செய்ய ஒத்துக்கொண்டனர்.
அதன்பிறகு நாமும் அந்த வழக்கை
சந்தேக மரணம் என்று இருந்ததை,
கொலை வழக்காக மாற்றம் செய்து,
கோவிந்தராஜை கைது செய்தோம்.

 

என்னுடைய விசாரணையில், ராம்குமார், ஏழுமலை, முட்டை ராஜா ஆகியோருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பது ‘கிளியர் கட்’ ஆக தெரிந்ததால் அவர்களை விட்டுவிட்டேன். போஸ்ட் மார்ட்டம் சர்டிபிகேட் வாங்கச் சென்றபோது, ‘அவர் மாரடைப்பில் இறக்கவில்லை. இருதய நோயால் இறந்திருக்கிறார். அதனால், இறப்புக்கான காரணம் கொடுக்க முடியாது,’ என்று போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் சொல்லி விட்டார்.

 

இது என்னடா வம்பாபோச்சு… கோவிந்தராஜ் என் மீது அவமதிப்பு வழக்கு போட்டால் என்ன செய்வது என்று எண்ணினேன். அதனால், இந்த எப்ஐஆர்&ஐ திருத்தம் செய்து, இ.த.ச. பிரிவு 324 (ஆயுதங்களால் தாக்கி காயம் விளைவித்தல்) என்று மாற்றலாம் என்றும் யோசித்தேன். அதுகுறித்து ‘லீகல் ஒப்பீனியன்’ கேட்டபோது, கொலை வழக்குப் பிரிவை குறைத்து பதிவு செய்ய ஒப்பீனியன் தர முடியாது என வழக்கறிஞர்கள் சொல்லி விட்டனர். அதனால் மீண்டும் இந்த வழக்கை சிஆர்பிசி 174 பிரிவுக்கு மாற்றி, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துவிட்டேன்.

 

அதன்பிறகு நானும் இடமாறுதலில் சென்றுவிட்டேன். எனக்குப் பிறகு இரும்பாலைக்கு வந்த மற்ற அதிகாரிகளும் இந்த வழக்கை மறு விசாரணை செய்யாமல் விட்டுவிட்டனர்.

 

செத்துப்போனவன் பெரிய ஆளாக இருந்தால்கூட ரீ-இன்வெஸ்டிகேஷன் பண்ணலாம். அவன் ஒரு ரவுடி ஃபெல்லோ. அவனுடைய மனைவியே அவனைப் பிடிக்காமல் பிரிந்து சென்று விட்டார். மணிகண்டனின் தந்தை, அதிமுக ஆதரவாளர் என்ற ஒரே காரணத்தால்தான் இந்த வழக்கு பெரிசாச்சு.

 

புதிய அகராதி: சம்பவத்திற்கு ஒரு வாரம் முன்பு, ராம்குமார், முட்டை ராஜா உள்ளிட்டோர் வேறு ஒரு பிரச்னையில் மணிகண்டனை துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர். அதுகுறித்து புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காமல் போயிருக்குமே?

 

டிஎஸ்பி சண்முகம்: இல்லை. அப்படி ஒரு புகார் வந்ததாக எனக்கு எந்த தகவலும் இல்லை. நான் அந்த ஜூரிஸ்டிக்ஷனுக்கு புதுசு. அப்போது அங்கு வந்து மூன்று மாதம்தான் ஆகியிருந்தது.

 

புதிய அகராதி: எப்ஐஆர்-ல் மணிகண்டனுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாக அவருடைய தாயார் சொல்லி இருக்கிறார். இப்போது அதை அடியோடு மறுக்கிறாரே?

 

டிஎஸ்பி சண்முகம்: அவர்கள் இப்போது தங்கள் தரப்புக்கு ஆதரவாக அதைத்தான் மாற்றி பேசுகிறார்கள். நாங்களே எழுதிக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

 

புதிய அகராதி: எவ்வளவு காலம் இரும்பாலை காவல் நிலையத்தில் பணியில் இருந்தீர்கள்?

 

டிஎஸ்பி சண்முகம்: ஆறு மாதம்தான் அங்கு பணியில் இருந்தேன். அதன்பிறகு அங்கிருந்து கோவை சரகத்திற்கு மாற்றப்பட்டேன்.

 

புதிய அகராதி: இந்த வழக்கு விவகாரத்தில்தான் மாற்றப்பட்டீர்களா?

 

டிஎஸ்பி சண்முகம்: இல்லை இல்லை. சுய விருப்பத்தின்பேரில்தான் மாறுதலில் சென்றேன்.

 

புதிய அகராதி: சம்பவத்திற்கு முதல் நாள், மணிகண்டன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக லதாவும், அவருடைய தாயாரும் இரும்பாலை காவல்நிலையத்தில் வாய்மொழியாக புகார் அளித்ததாகச் சொல்கிறார்களே?

 

டிஎஸ்பி சண்முகம்: அதைப்பற்றிய தகவலும் எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை. இதெல்லாம் சின்னச்சின்ன விஷயங்கள். அதனால், அங்கு பணியில் இருந்தவர்கள் இன்ஸ்பெக்டர் லெவலில் கொண்டு வராமல் போயிருக்கலாம்.

 

புதிய அகராதி: இப்போது சிபிசிஐடி விசாரிக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக உங்களுடன் அப்போது பணியாற்றிய எஸ்.ஐ.க்களிடம் ஏதாவது இப்போது பேசினீர்களா?

 

டிஎஸ்பி சண்முகம்: இல்லை. நாம் ஒண்ணும் தப்பு பண்ணல. அதுவும் இல்லாமல், அந்த ஸ்டேஷனும் சேலம் மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டு விட்டது. யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரியாது.

 

புதிய அகராதி: வழக்கமாக சர்ச்சைக்குரிய மரணங்களில் ‘விஸ்ரா’ ரிப்போர்ட் வந்த பிறகே எப்ஐஆர் திருத்தம் செய்யப்படுவது உண்டு. அப்படி தடய அறிவியல் ஆய்வு முடிவுகள் வருவதற்கு முன்பே, சிஆர்பிசி 174 (3) பிரிவில் இருந்து இதச பிரிவு 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி அப்போது ஏதேனும் வெளிப்புற அழுத்தங்கள் வந்ததா?

 

டிஎஸ்பி சண்முகம்: அழுத்தங்கள் எதுவும் இல்லை. ஆனால் அப்போது மணிகண்டனின் உறவினர்கள், கட்சிக்காரர்கள் சாலை மறியல் பண்ணுவாங்க என்ற சூழல் இருந்தது. அவர்களை திருப்திப்படுத்த இவ்வாறு எப்ஐஆர்-ல் திருத்தம் செய்யவில்லை. என் விசாரணையில், மணிகண்டனை அடிச்சிந்திருந்தது மட்டும் தெரிந்தது. அதன் தொடர்ச்சியாக அவன் இறந்துவிட்டான். அடித்தது உண்மைதான். அந்த அடியால் இறந்தானா என்பதுதான் ‘இஷ்யூ’வே. நம்மால் சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக அப்போது இதச பிரிவு 302ன் கீழ் வழக்கு மாற்றி பதிவு செய்யப்பட்டது.

 

புதிய அகராதி: கொலை வழக்காக மாற்றுகிறோம். அதற்கான முகாந்திரம் இருப்பதாக உங்கள் உள்ளுணர்வுக்குத் தோன்றியதா?

 

டிஎஸ்பி சண்முகம்: அப்போது, போஸ்ட் மார்ட்டம் செய்த ஃபைனல் ரிப்போர்ட் வரவில்லை. அடிச்சதை கோவிந்தராஜூம் ஒப்புக்கொண்டான். அதில் மணிகண்டன் இறந்துவிட்டான். அதனால் 302வது பிரிவுக்கு மாற்றலாம் என எனக்குத் தோன்றியது. போஸ்ட் மார்ட்டம் செய்த ஃபைனல் ரிப்போர்ட் வந்த பிறகு எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம். அந்தச் சூழ்நிலையில் நமக்கு ஃபைனல் ரிப்போர்ட் என்னவென்று தெரியாது.

 

புதிய அகராதி: மீளவும் கேட்கிறேன். சந்தேக மரண வழக்கில், மரணத்திற்கான உறுதியான முடிவு தெரியாதபோது கொலை வழக்கு என்று எப்ஐஆர் பதிவு செய்யலாமா என சிந்திக்கவில்லையா? சாலை மறியல் சூழலை சமாளிக்கத்தான் அப்படி செய்தீர்களா?

 

டிஎஸ்பி சண்முகம்: சூழலைக் கையாள்வதற்காக அப்படி செய்தால் தப்பான முடிவாகி விடும். உண்மையில், கைதான கோவிந்தராஜ்தான் என் மீது அவமதிப்பு வழக்கிற்குப் போக வேண்டும். அதுதான் இதில் ‘காம்ப்ளிகேட்’ ஆக இருந்தது. என்னமோ சிபிசிஐடி விசாரிக்கிறார்கள். நல்லா விசாரிக்கட்டும்.

 

புதிய அகராதி: வேறு ஏதேனும் ஆதாயத்திற்காக இவ்வாறு எப்ஐஆர்-ல் திருத்தம் செய்தீர்களா?

 

டிஎஸ்பி சண்முகம்: இரும்பாலை ஜூரிஸ்டிக்ஷனில் ரெண்டு மூன்று வருஷம் இருந்திருந்தால்கூட ஏதோ மானிட்டரி பெனிஃபிட்டுக்காக அப்படி செய்திருக்கலாம் என்றுகூட சந்தேகிக்கலாம். ஆனால் அங்கு நான் பணியில் இருந்ததே கொஞ்ச காலம்தான். யாருடைய அழுத்தமோ, வேறு ஆதாயமோ 100 சதவீதம் இல்லீங்க.

 

இவ்வாறு டிஎஸ்பி சண்முகம் கூறினார்.

 

டிஎஸ்பி சண்முகத்தின் புலனாய்வு விசாரணை, சரியான திசையில் சென்றதாகவே கணக்கில் கொண்டால், கைதான கோவிந்தராஜ் கொலை குற்றவாளி பட்டத்தை தேவையில்லாமல் சுமக்க நேரிட்டதாகவே கருத வேண்டியதிருக்கிறது. ஒருவேளை, அந்த அவமானம் தாங்காமல் அவருடைய குடும்பமே சின்னாபின்னமாகி இருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

 

மேலும், வேதியியல் பரிசோதனை முடிவுகளின்படி மணிகண்டன் இதய நோயால் இறந்தார் என்கிறார். அதன்பிறகு, அவர் கொலை வழக்காக மாற்றியதை மீண்டும் குற்ற விசாரணைமுறைச் சட்டம் பிரிவு 174க்கு மாற்றிவிட்டதாக கூறுவதிலும் முரண் இருக்கிறது. இயற்கைக்கு மாறான மரணத்தின்போது மட்டுமே இப்பிரிவு பயன்படுத்தப்படுகிறது. இதய நோயால் இறந்துவிட்டார் எனச் சொல்லப்பட்டவருக்கும் இச்சட்டப்பிரிவு பொருந்துமா எனத் தெரியவில்லை.

 

யாரோ ஒருவரின் சிறு அலட்சியம் அல்லது சார்புத்தன்மையால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவிகள்தான். அதிகாரிகள் தவறே செய்தாலும் அவர்களுக்கு பணிக்கொடையோ, ஓய்வூதிய சலுகைகளோ நின்று விடப்போவதில்லை. சமூகத்தில் வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் விளிம்பு நிலை மக்களுக்கும் காவல்துறையினர் அளிக்க வேண்டியது அவசியம் என்பதை எப்போதும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

ஒரு காவல்துறை அதிகாரிக்கு, இறந்தவர் / கொலையுண்ட நபர் வி.ஐ.பி.யா அல்லது நாலாந்தர ரவுடியா என்ற பாகுபாடு தேவையற்றது. இறப்புக்கான காரணம், குற்றத்தின் தன்மை, குற்றவாளிகள் யார் என்பதே முக்கியம். அவ்வாறு அல்லாமல், சந்தேக மரணம் அடைந்த மணிகண்டன், பெரிய ஆள் இல்லை என் முன்முடிவுமே கூட இந்த வழக்கின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

 

இது தொடர்பான முந்தைய செய்தியை படிக்க…

கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!

– பேனாக்காரன்