Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆசிரியர், மாணவிகள் உள்ளம் கவர்ந்த ஆட்சியர் ரோகிணி! காலில் விழுந்து வணங்கினார்… கேக் ஊட்டினார்… கைகுலுக்கினார்…! #CollectorRohini

 

ஆசிரியர்கள் தினத்தன்று ஒட்டுமொத்த மாணவிகள், ஆசிரியர்களின் உள்ளங்களையும் கவர்ந்து சென்றார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.

 

கடந்த ஆண்டு, ஊதிய உயர்வு கேட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் இணைந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆத்தூரில் அலுவல் நிமித்தம் சுற்றுப்பயணம் சென்றிருந்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி. கருமத்தம்பாளையம் அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் யாருமே இல்லாத நிலையில், குழந்தைகள் கரும்பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்தத் தருணத்தில் என்ன நினைத்தாரோ ரோகிணி, உடனடியாக வகுப்பறைக்குள் சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார். மற்றொரு நாள், அய்யந்திருமாளிகையில் அன்னை சத்யா பெண் குழந்தைகள் காப்பக வளாகத்தில் செயல்படும் பள்ளியிலும் அதிரடியாக ஆய்வு செய்து, குழந்தைகளுடன் வாஞ்சையுடன் கொஞ்சி மகிழ்ந்தார். இன்னொரு நாள் அரசுப்பள்ளி குழந்தைகளுடன் தானும் சேர்ந்து கொண்டு உணவு அருந்துகிறார்.

 

பள்ளிக்குழந்தைகளைக் கண்டாலே அவருக்கும் ஒருவித ஈர்ப்பு இருப்பது என்பது என்னவோ உண்மைதான். அதேநேரம், ‘இதெல்லாம் விளம்பர ஸ்டன்ட்டுப்பா…’ என்போரும் உண்டு. ஆனால் தொடர்ச்சியாக ஒருவர் ஒரேபோன்ற செயல்களில் ஈடுபடும்போதும் அத்தகைய வாதம் எடுபடாமல் போய்விடக்கூடும்.

இன்று (செப்டம்பர் 5, 2018) சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவிகளின் உள்ளங்களையும் ஆட்சியர் ரோகிணி கவர்ந்து சென்றார் என்றே சொல்லலாம்.

 

ஆசிரியர் தினத்தையொட்டி, கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆட்சியர் ரோகிணி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். என்ன நினைத்தாரோ… சட்டென்று பள்ளித் தலைமை ஆசிரியையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். ஓர் ஆட்சியர்… ஆசிரியையின் காலில் விழலாமா என்ற சிறு சலனம்கூட அவர் முகத்தில் தென்படவில்லை. அடுத்தடுத்த சிறப்பு செய்யும் பணிகளில் அவர் மூழ்கிப்போனார்.

அப்போது எழுந்த பள்ளி மாணவிகளின் கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று. அவர்களும் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தகைய பதவியில் இருந்தாலும் கற்றுக்கொடுக்கும் குருவை வணங்க வேண்டியது முதல் கடமை என்பதை ரோகிணி சொல்லாமல் செயலில் காட்டினார்.

 

இதையடுத்து அந்தப் பள்ளியின் அனைத்து ஆண், பெண் ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்ராஜ் ரோஜா பூச்செண்டு எடுத்துக்கொடுக்க, அதை ஆசிரியர்களுக்கு வழங்கியும், நற்சான்றிதழ் அளித்தும் கவுரவித்தார்.

இதையடுத்து, கேக் கொண்டு வரப்பட்டது. ஆட்சியர் ரோகிணி, தன்னை மூத்த மாணவி என்று நினைத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் மூத்த ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் சிலரையும் கேக் வெட்ட மேடைக்கு அழைத்தார். அவர்களுடன் தானும் சேர்ந்து கொண்டு ஒரே கத்தியால் கேக் வெட்டினார். முதல் கேக் துண்டை, மூத்த ஆசிரியைகளுக்கு அவர் தன் கையாலேயே ஊட்டிவிட்டார். பிறகு, மற்றொரு கேக் துண்டை எடுத்து அருகில் இருந்த மாணவிகளுக்கும் ஊட்டிவிட்டார்.

 

பதிலுக்கு மாணவிகளும் போட்டிக்கொண்டு ஆர்வத்துடன் ஆட்சியருக்கு கேக் ஊட்டினர். மாணவிகள் எட்டிக்கொண்டு கேக் ஊட்ட தடுமாறியபோது அவர்கள் உயரத்திற்கு கீழே குனிந்து கேக்கை பெற்றுக்கொண்ட போது, அந்த நிமிடத்தில் அவரும் குழந்தையாகிப் போனார்.

 

இதைப்பார்த்த ஆசிரியைகளும் ஆளுக்கு ஒரு துண்டு கேக் எடுத்து ஆட்சியருக்கு ஊட்டிவிட்டனர். யாரிடமும் மறுப்போ முகச்சுழிப்போ காட்டாமல், புன்னகைத்தவாறே அனைவரிடமும் வாஞ்சையுடன் சிறிதளவு கேக்கை பெற்றுச் சாப்பிட்டார். அந்த மேடையில், அந்த தருணத்தில் அவர் போலி பாசாங்குத்தனங்களையும் தகர்த்தெறிந்தார்.

விழாவில் ஆட்சியர் ரோகிணி பேசுகையில், ”இன்று நீங்கள் (மாணவிகள்) இந்த வளாகத்தில் இருக்கின்றீர்கள். நாளை பெரிய உயரத்திற்குச் செல்வீர்கள். எல்லோருக்கும் அம்மாதான் முதல் ஆசிரியர். ஆனாலும் நல்லொழுக்கங்களைக் கற்றுத்தருவது பள்ளிக்கூடமும், பள்ளி ஆசிரியர்களும்தான். ஆசிரியர்களும், பெற்றோர்களும் உங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முழு முயற்சிகளும் எடுக்க வேண்டும்,” என்று அறிவுரை வழங்கவும் தவறவில்லை.

விழா முடிந்து அவர் மேடையை விட்டு கீழே இறங்கியதும் மாணவிகள் அவரை சூழ்ந்து கொண்டு ஆசையுடன் போட்டிப்போட்டுக் கொண்டு கைகுலுக்க முயன்றனர். அவரும் சளைக்காமல் கைகுலுக்கினார். ஒருக்கட்டத்தில், அதிகளவிலான மாணவிகள் அவரை நெருங்கியதால் அவரால் அங்கிருந்து நகரவே இயலாத சூழல் நிலவியது. பின்னர் ஆசிரியர்கள், அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்துச்சென்று காரில் ஏற்றி வைத்தனர்.

பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரிகள் நெருங்கிச்செல்லும்போது அவர்களும் எதிர்காலத்தில் உயர் பதவிகளை எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற ஊக்கமும் ஒருங்கே பெற்றுவிடும் வாய்ப்பும் உள்ளதை ஆட்சியர் ரோகிணியின் இன்றைய அணுகுமுறை பறைசாற்றியது.

 

– இளையராஜா சுப்ரமணியம்.
படங்கள் உதவி: நாராயணன்.