Thursday, July 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

ஒரு பெண் குழந்தையின்
விலை இரண்டு லட்சம் ரூபாய்
என்றும், குண்டான, அழகான,
அமுல் பேபி மாதிரியான
ஆண் குழந்தை நாலேகால் லட்சம்
ரூபாய் என்றும் குழந்தைகளை
தரம் பிரித்து விற்பனை செய்து
வரும் ராசிபுரம் செவிலியர்
உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

 

மாறி வரும் உணவுப்பழக்கவழக்கம், மேற்கத்திய கலாச்சாரம் போன்றவற்றால் இன்றைக்கு ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட இருபாலருக்குமே 50 சதவீதம் வரை மலட்டுத்தன்மை குறைபாடு இருக்கிறது என்கிறது மருத்துவத்துறை. இந்நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருந்தாலும், அதற்காகும் அதிகபட்சமான செலவுகள் காரணமாக குறுக்கு வழியில் பலர் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

‘காரா’ (CARA – Central Adoption Resource Authority) மூலம் சட்டப்படி குழந்தைகளை தத்து எடுக்கலாம். எனினும், அதற்கான சட்ட நடைமுறைகளும், கெடுபிடிகளும் அதிகம். அதனாலும் பலர், குறுக்கு வழியை நாட வேண்டியதிருக்கிறது.

 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா என்ற ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் ஒருவர், சட்ட விரோதமாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வரும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமுதாவும், குழந்தையில்லாத தம்பதி தரப்பில் தர்மபுரியைச் சேர்ந்த சதீஸ் என்பவரும் செல்போனில் பேசிய உரையாடல் சமூக ஊ-டகங்களில் வெளியானது.

 

அந்த உரையாடலின்போது அமுதா,
குழந்தைகளை விற்பதும், கடத்துவதும்
அல்லது சட்டத்திற்குப் புறம்பாக
குழந்தையை ஒரு பெற்றோரிடம்
இருந்து இன்னொரு பெற்றோர் வசம்
ஒப்படைப்பதும் குற்றம் என்ற உணர்வே
இல்லாமல் பேசுவது புலப்படுகிறது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவர்
இவ்வாறு செய்து வருவதாகவும்
சொல்கிறார். அதனால்கூட
அவருக்கு குற்ற உணர்வு
இல்லாது போயிருக்கலாம்.

அடுத்து, கால்நடைச் சந்தையில்
ஆடு, மாடுகளை பேரம் பேசுவதுபோல்
குழந்தைகளுக்கும் விலை நிர்ணயம்
செய்கிறார். பெண் குழந்தைகளுக்கும்,
கருப்பான குழந்தைகளுக்கும் இப்போதும்
சந்தை மதிப்பு குறைவுதான் போலிருக்கிறது.
பெண் குழந்தைகள் அதிகப்பட்சம்
2.70 லட்சம் வரை விலை போகும்
என்கிறார் அமுதா. அதேநேரம்,
ஆரோக்கியமான, குண்டான,
கொழு கொழுவென்று அமுல் பேபி போல
இருக்கும் ஆண் குழந்தைகள் என்றால்
4.25 லட்சம் ரூபாய் வரை போகும்
என்கிறார். கருப்பான ஆண்
குழந்தைகள் எனில் 3 லட்சம்தானாம்.

 

குழந்தைகள் கைமாற்றப்பட்ட பிறகு,
ராசிபுரத்தில் தங்கி பிரசவ சிகிச்சை
செய்து கொண்டதுபோல, ராசிபுரம்
நகராட்சியில் பிறப்புச்சான்றிதழ்
பெற்றுக் கொடுத்து விடுவதாகவும்,
அதற்காக 70 ஆயிரம் ரூபாய் செலவாகும்
என்றும் உரையாடலின்போது
கூறியிருக்கிறார் அமுதா.
இதற்காக ஒரு மாதம்
அவகாசம் தேவை என்கிறார்.

 

இந்த உரையாடல் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 25) செய்தி சேனல்களில் வெளியானதை அடுத்து, இதுகுறித்து விசாரிக்குமாறு தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அருளரசு நேரடி மேற்பார்வையில் ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவன் தலைமையில் மூன்று தனிப்படை காவல்துறையினர், உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

 

முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

 

குழந்தைகள் விற்பனை குறித்து பேசும் அமுதா, நாமக்கல் மாவட்டம் விஐபி நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவருடைய கணவர் ரவிச்சந்திரன். நகர கூட்டுறவு வங்கி ஒன்றில் உதவியாளராக உள்ளார். அமுதா, கடந்த 2012ம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். ஆரம்பத்தில் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் திருச்செங்கோட்டிலும் பணியாற்றி வந்த அமுதா, கடைசியாக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அவர் செவிலியர் அல்ல. செவிலியர் உதவியாளர்.

 

குழந்தை வேண்டும் நபர்,
அமுதாவிடம் முழு தொகையையும்
கொடுக்கத் தேவையில்லை. முதலில்
முன்பணமாக 30 ஆயிரம் ரூபாய்
கொடுத்துவிட வேண்டும். அதன் பிறகே,
அவர் குழந்தையை கொடுக்க சம்மதிக்கும்
பெற்றோர்களை நாடிச்செல்கிறார்.
கொல்லிமலை போன்ற மலைப்பகுதிகளில்
இருந்து குழந்தைகளை சொற்ப
தொகைக்கு வாங்கி, அதை விற்பனை
செய்து வந்துள்ளார் அமுதா.
ஆனால், அதற்கான ஊர்ஜிதமான
தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை
என்கிறது காவல்துறை.

 

முதல்கட்ட விசாரணையில், இதுவரை இரண்டுமுறை மட்டுமே குழந்தைகளை விற்றுக் கொடுத்திருப்பதாக அமுதா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். அவற்றில் ஒரு குழந்தை, முறையாக தத்து கொடுக்கப்பட்டு, அதை பதிவுத்துறை மூலம் பதிவும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இன்னொரு குழந்தையை, 1.50 லட்சம் ரூபாய்க்கு விற்றதாகவும் தெரிவித்துள்ளார். அந்தக் குழந்தை, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கும், நாமக்கல் பேருந்து நிலையத்திற்கும் இடைப்பட்ட ஓர் இடத்தில் வைத்து குழந்தையில்லா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அப்போதும் வாடிக்கையாளர் (குழந்தையில்லா தம்பதியை அவர் அப்படித்தான் சொல்கிறார்) யார் என்று நான் நேரில் பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

இப்படி கைமாறிய இரண்டுமே பெண் குழந்தைகள்தான். இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், தானும் ஓர் இடைத்தரகர்தான் என்றும் அமுதா கூறியுள்ளார். முதல் குழந்தை, சட்டப்படி தத்து கொடுக்கப்பட்டதா என்பதற்கான ஆதாரத்தை பதிவுத்துறையில் சேகரிக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறது காவல்துறை. பல நேரங்களில் அமுதா, முன்னுக்குப் பின் முரணாகவே பேசியுள்ளார். 50 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைன் மூலம் பிறப்புச்சான்றிதழ் பெற்று விடலாம் என்ற நிலையில், அதற்காக அவர் 70 ஆயிரம் ரூபாய் பேரம் பேசியிருப்பது, ஏமாளிகளிடம் பணம் பறிப்பதற்கான நாடகம் என்கிறார் நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அருளரசு.

 

இதற்கிடையே, பள்ளிப்பாளையத்தில் பணியாற்றியபோது சில புகார்களின் பேரில்தான் அமுதா திருச்செங்கோடுக்கு மாற்றப்பட்டார் என்கிறது மாவட்ட சுகாதாரத்துறை. அவர்களும் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

இன்று மாலை விசாரணை முடிவில் அமுதாவை கைது செய்துள்ள ராசிபுரம் காவல்துறை, விரிவான விசாரணைக்காக அவரை மேலும் இரண்டு நாள்கள் காவலில் எடுக்கவும் முடிவு செய்திருக்கிறது. அப்போது மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் எனத்தெரிகிறது.

 

– பேனாக்காரன்.