Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

அரசியல் களத்தில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ரிபப்ளிக் டிவி என்ற ஹிந்தி சேனலுக்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டி இன்று (நவம்பர் 12, 2017) பகல் 11 மணிக்கு ஒளிப்பரப்பப்பட்டது.

நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி, நம்ம ஊர் தமிழ் சேனல்களில் சொல்வதுபோல் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் அர்த்தம் தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தார். கமல்ஹாசனை, இந்து விரோதி என்பதை சித்தரிக்க ரொம்பவே மெனக்கெட்டார். லஷ்கர்-இ-தொய்பா வரை வம்பில் சிக்கிவிடவும் முயற்சித்தார்.

அர்னாப் கோஸ்வாமி மோடியின் பக்கவாத்தியம்போல பேசியதையும், இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி போல பேசியதையும் அவதானிக்க முடிந்தது. அவர் எதிர்பார்த்த பதில்களைப் பெற முடியாமல், ஒருகட்டத்தில் ஏமாற்றம் அடைந்ததையும் காண முடிந்தது. கமல்ஹாசன் எல்லாவற்றுக்கும் சாதுர்யமாக பதில் அளித்தார்.

அந்தப் பேட்டியின் சுருக்கம்…

உங்கள் கருத்துகளில் அடிக்கடி முரண்படுகிறீர்களே ஏன்?

கமல்: ஓர் அரசியல்வாதியாக பார்ப்பதால்தான் என்னைச்சுற்றி இவ்வளவு சர்ச்சைகள் உருவாகின்றன. ஆனால், நான் ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் பேசி வந்திருக்கிறேன். இப்போது புதிய பொறுப்புகள் வந்துவிட்டதால், இன்னும் ரொம்பவே ஜாக்கிரதையாக பேச வேண்டியது அவசியமாகிறது.

இந்து பயங்கரவாதம் (அர்னாப் கோஸ்வாமி, ‘ஹின்டு டெரரிஸம்’ என்றே குறிப்பிட்டார்) என்று சொல்கிறீர்கள். அரசியல் அழுத்தம் காரணமாக அப்படிச் சொன்னீர்களா?

கமல்: நான் இந்து பயங்கரவாதம் என்று சொல்லவில்லை. ‘இந்து தீவிரவாதம்’ பற்றித்தான் ஒரு தமிழ் வார இதழில் கட்டுரை எழுதியிருந்தேன். அதை தவறாக புரிந்து கொண்டார்கள். அது புரியவில்லை என்று மக்கள் சொல்கிறார்களா என்ன? அவரவர் மொழிப்புலமையைப் பொறுத்து அந்த வார்த்தை மீதான கருத்துகள் மாறுகின்றன.

தமிழில் சொன்னதை ஊடகங்கள் மொழிபெயர்ப்பு செய்ததில் ஏற்பட்ட பிழையாக இருக்கலாம். தவறான மொழிபெயர்ப்புகூட ரொம்பவே ஆபத்தானதுதான். மத சித்தாந்தங்களை அரசியலுக்குள் அல்லது அரசியல்வாதிகள் தங்களுக்குள் புகுத்திக் கொள்வதைத்தான் அப்படி குறிப்பிட்டேன். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் அது சரியான நடைமுறை ஆகாது. தீவிரவாதம் எந்த வடியில் இருந்தாலும் அது விரும்பத்தக்கது அல்ல.

இந்து தீவிரவாதம் பற்றிய உங்கள் கருத்துக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ்ஐஎஸ் பற்றி எல்லாம் நீங்கள் ஏன் விமர்சிப்பது இல்லை?

கமல்: கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி ஏன் பேசவில்லை ஏன்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் தமிழில் இந்து தீவிரவாதம் குறித்து ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். அது எந்த சாதியில் இருந்தாலும், எந்த மதத்தினர் செய்தாலும் விரும்பத்தகாததுதான்.

இந்து தீவிரவாதம் பற்றி பேசுகிறீர்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கிறீர்கள். நீங்கள் சிறுபான்மையினருக்கான அரசியலை முன்னெடுக்கிறீர்களா?

கமல்: அப்படி இல்லை. நான் அவர்கள் இருவரையும் (பினராயி விஜயன் மற்றும் மம்தான பானர்ஜி) சந்தித்ததை வைத்து இவன் இடதுசாரி அல்லது வலதுசாரி அரசியலை பேசுகிறானா என மக்கள் சற்று குழப்பம் அடைந்திருக்கலாம் என நினைக்கிறேன். நான் எந்தப்பக்கமும் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதைத்தான் விரும்புகிறேன். பெரும்பான்மையான மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

நான் சொல்ல வருவது, கம்யூனிஸ்ட் தலைவர்கள், மம்தா பானர்ஜி ஆகியோரை சந்திப்பதன் மூலம் நீங்கள் பாஜகவுக்கு எதிரானவர்போல் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள் என்கிறேன்…

கமல்: அப்படி இல்லை. என்னுடைய திட்டம் என்ன என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. நீங்கள் சொல்வதுபோன்ற (பாஜகவுக்கு எதிரானவர்) நிறம் இருப்பின், அடுத்தடுத்து நான் சந்திக்கும் தலைவர்கள் மூலமாக அந்த நிறமும் மாறி விடும்.

என் நோக்கம் எல்லாம் தமிழ்நாடு சரியான பாதையில் முன்னேற வேண்டும் என்பதுதான். நாட்டை நிர்மாணிக்க வேண்டும் என்பதும்தான். மம்தாஜி அழைத்து இருந்தார். அதனால் அவரை நேரில் சந்தித்தேன். பினராயி விஜயனை சந்திக்க வேண் டும் என்று என்பது என் விருப்பமாக இருந்ததால் அவரை சந்தித்தேன்.

அடுத்து யாரை சந்திக்கிறேன் என்பது சர்ப்ரைஸ். சந்திரபாபு நாயுடு, கே.சந்திரசேகர ராவ் ஆகியோரைக்கூட சந்திக்கும் திட்டம் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்விலும், அரசியலிலும் எனக்கு தீண்டத்தகாதவர்கள் என்று யாருமே இல்லை.

அப்படியானால் மோடியை சந்திப்பீர்களா?

கமல்: நிச்சயமாக. பிரதருக்கு நேரம் இருக்குமேயானால் அவரையும் சந்திப்பேன். அவரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதுவேன்.

தனிக்கட்சி துவக்குவீர்களா? அல்லது ஏதேனும் ஒரு கட்சியில் இணைந்து செயல்படுவீர்களா?

நிச்சயமாக தனிக்கட்சிதான். தனித்துதான் இயங்குவேன். ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு நான் ஊடகமாக செயல்பட முடியாது. தமிழ்நாட்டை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவை நனவாக்குவதற்காக சமூக பரிசோதனையில் இறங்கியிருக்கிறேன். கொள்கை ரீதியில் ஒத்துப்போவோருடன் இணைந்து செயல்ப டுவதில் தவறில்லை. எனினும், அது சூழ்நிலையைப் பொருத்தது.

டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளன்று அவர் தனிக்கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்று தெரிகிறது. அதனால்தான் நீங்கள் உங்கள் கட்சியின் பெயரை அறிவிக்காமல் இருப்பதாக கருதலாமா?

கமல்: அவர் அரசியலுக்கு வரட்டும். அவருக்கு என் வாழ்த்துகள். அவர் கட்சி தொடங்குவதற்கும் நான் கட்சி பெயரை அறிவிப்பதற்கும் எந்த கால வரையறையும் வைத்துக் கொள்ளவில்லை.

நீங்களும் ரஜினியும் இணைந்து செயல்பட்டால் அரசியலில் சுனாமி அலை ஏற்படும். அவருடன் இணைந்து செயல்படுவீர்களா?

ஏன் கூடாது?. ரஜினியும் நானும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருக்கிறோம். என்னைப் பொருத்தவரையில் அவருடைய தத்துவங்கள், என் கொள்கைகளுடன் ஒத்துப்போகாது என நினைக்கிறேன். ஆனாலும் சூழ்நிலையும், வாய்ப்பும் அமைந்தால் நானும் ரஜினியும் இணைந்து செயல்படுவோம்.

நாங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று சிலர் நினைப்பதுபோல், நாங்கள் இருவரும் குத்துச்சண்டைக்காரர்கள் அல்லது கால்பந்தாட்டக்காரர்கள் போல மோதிக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர்.

ரஜினி தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது பாஜகவில் இணைவார் என்று நினைக்கிறீர்களா?

கமல்: அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது.

நீங்கள் இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து ரஜினியிடம் பேசியிருக்கிறீர்களா?

பேசியிருக்கிறோமா இல்லையா என்பதையெல்லாம் இந்த டெலிவிஷனில் சொல்ல முடியாது. (சிரிக்கிறார்).

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள்? உங்களால் 52 வினாடிகள் எழுந்து நிற்க முடியாதா?

கமல்: தேசிய கீதம் இசைக்கப்படும்போது என்னால் எழுந்து நிற்க முடியும். மற்றவர்கள் எழுந்து நிற்காதபோது அவர்கள் மீது எனக்கு வெறுப்பு வருகிறது. அவர்களிடம் சண்டையிட தோன்றும். ஆனால் அதை நான் விரும்பவில்லை.

என் மகள்கள் சுருதியும் அக்ஷராவும் அப்போது சின்ன பிள்ளைகள். கொட்டும் மழையில் நின்றுகூட நாங்கள் தேசிய கீதம் பாடியிருக்கிறோம். ஆகஸ்ட் 15 அன்று அப்படி இருக்கலாம். அதுவல்ல பிரச்னை. ஆனால், திரையரங்குகள், பூங்கா, கடற்கரை போன்ற பொதுவான இடங்களில் எல்லாம் தேச பக்தியை சோதிக்க வேண்டியதில்லை.

நீங்கள் சொல்வது போல திரையரங்குகள் ஒன்றும் பூங்காவோ, கடற்கரையோ கிடையாதே. அங்கு தேசிய கீதம் இசைக்கப்ப டுவதில் என்ன பிரச்னை?

கமல்: அப்படியல்ல. பொழுதுபோக்கிற்காகத்தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருகின்றனர். அங்கு சிலர் மது அருந்திவிட் டும் வரலாம். அரைக்கால் டிரவுசர் அணிந்திருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இடத்தில் தேசிய கீதம் இசைப்பதால் எல்லோரும் எழுந்து நிற்பார்கள் என்று சொல்ல முடியாது.

சிங்கப்பூர் நாட்டில் தினமும் இரவில் அந்த நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் தேசிய கீதம் இசைக்கிறார்கள். அந்த நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தேச பக்திதான் வேண்டுமெனில் இங்கும் அப்படியே செய்திடலாமே.

பணமதிப்பிழப்பு செய்தபோது பிரதமர் மோடிக்கு சல்யூட் என்றீர்கள். அண்மையில், அதற்காக மன்னிப்பு கேட்டதுடன், பிரதமரும் தோல்வியை ஒப்புக்கொண்டால் இன்னொரு சலாம் காத்திருக்கிறது என்றது ஏன்?

கமல்: கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடுதான். நானும் அந்த தளத்தில்தான் இயங்குகிறேன். பணமதிப்பிழப்பு செய்ததை தவறு எனக்கூறவில்லை. அதை செயல்படுத்திய விதம்தான் தவறு எனக் கூறுகிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.