Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

‘மெர்சல்’ படத்திற்கு விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து ஆட்சேபனையில்லா சான்றிதழ் இன்னும் பெறப்படாததால், திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி கூட்டணியில் சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. ஸ்ரீதேனாண்டால் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி படத்தை தயாரித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேஜிக் கலைஞராகவும் முதன்முதலாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வரும் 18ம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் 3292 திரையரங்குகளில் ‘மெர்சல்’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநாளில் தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு, வெளியாகிறது.

இதற்கிடையே, கடந்த மாதம் சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படத்தலைப்பை பதிவு செய்திருப்பதால், அதே தொனியில் அமைந்துள்ள மெர்சல் படத்தின் தலைப்புக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜேந்திரன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த தடையில் இருந்து தப்பித்த படக்குழு, இப்போது மீண்டும் ஒரு புதிய சிக்கலில் மாட்டியிருக்கிறது. படத்தில் விலங்குகள், பறவைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அதற்கு விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம்.

‘மெர்சல்’ படத்தில் ஒரு காட்சியில் ராஜநாகம் பாம்பு இடம் பெறுகிறது. பறவைகள் பறக்கும் காட்சிகளும் வைக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக விலங்குகள் நலவாரியத்தில் சான்றிதழ் கேட்டு மனு செய்த படத்தயாரிப்பு நிறுவனம், படத்தில் பயன்படுத்தப்பட்ட ராஜநாகம் பாம்பை, நாகப்பாம்பு என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

மேலும், பறவைகள் பறக்கும் காட்சிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டு இருந்தது. ஆனால், விலங்குகள் நல வாரியம் அதை ஏற்க மறுத்துவிட்டது. கிராஃபிக்ஸ் காட்சிகள் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

இதனால் விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து சான்றிதழ் கிடைப்பதில் மேலும் சில நாள்கள் ஆகும் எனத் தெரிகிறது. ஒருவேளை, சான்றிதழ் கிடைக்காவிட்டால் திட்டமிட்டபடி தீபாவளியன்று படத்தை ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் படத்தயாரிப்பு நிறுவனம் செய்வதறியாது திணறி வருகிறது.

– வெண்திரையான்.