Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை!

வாகன ஓட்டிகள், வாகனங்களில் செல்லும்போது அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அது தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, வாகன ஓட்டுநர்கள் உரிய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், சீருடை அணிந்த காவல்துறையினர் வாகன தணிக்கை செய்யும்போது, அசல் உரிமத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் (பிரிவு 130) என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், செப்டம்பர் 1ம் தேதி (இன்று) முதல் அனைத்து வகை வாகன ஓட்டிகளும், வாகன பயணத்தின்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அவ்வாறு அசல் உரிமம் இல்லாவிட்டால், மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இவை இரண்டு சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது. இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ரேஷன் கடைகள் வரை ஸ்மார்ட் கார்டுகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையில் தமிழக அரசு, ஓட்டுநர் உரிமம் விவகாரத்தில் தொழில்நுட்ப ரீதியில் பின்னோக்கிச் செல்வதாக விமர்சனங்கள் எழுந்தன. ஒரு சாரார், நடுவண் அரசின் டிஜி லாக்கர் சிஸ்டம் மூலமாக அசல் உரிமத்தை பதிவு செய்து வைத்துக் கொண்டால் போதுமானது என்றும் கருத்துகளை கூறினர். அசல் உரிமம் தொலைந்து போனாலோ, சேதம் அடைந்தாலோ மீண்டும் அதைப் பெறுவதில் உள்ள செலவுகள், நடைமுறை சிக்கலையும் மக்கள் கூறினர்.

ஆனாலும், இதுபோன்ற கருத்துகளுக்கு சற்றும் செவி சாய்க்காத தமிழக அரசு, அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவில் கடுமையாக இருந்தது. சாலை விபத்துகளை தடுக்க இதுபோன்ற சட்டம் அவசியம் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.

இதையடுத்து இன்று (1.9.17) காலை முதலே வாகன ஓட்டிகள் வீட்டில் வைத்திருந்த அசல் ஓட்டுநர் உரிமங்களை அதற்கென சிறிய பிளாஸ்டிக் பைக்குள் போட்டு எடுத்துச் செல்வதில் மும்முரமாக இருந்தனர். எனினும், நகர பகுதிகளில் காவல்துறையினரும் தீவிரமாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். சேலம் மாநகரில் காலை 11 மணிக்குள் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாத 350க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உரிமத்தின் நகல் வைத்திருப்போருக்கு ரூ.200ம், எந்த ஆவணமும் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.500ம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் தொடர்ந்த பொது நல வழக்கின் மீது இன்று விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, மோட்டார் வாகன சட்டம் பிரிவு 139-ன் கீழ், வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவு தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கின் மீதான தொடர் விசாரணை, இன்று மதியத்திற்கு மேல் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மதியம் மீண்டும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், வரும் 4ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.