Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வு-2019 முடிவுகள் வெளியீடு! தமிழக மாணவர்கள் அபாரம்!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில்
சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள்
நேற்று (ஜூன் 5, 2019) வெளியாகின.
நாடு முழுவதும் 56.49 சதவீத மாணவர்கள்
தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 48.57 சதவீதம்
பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

 

இளங்கலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகியவற்றில் சேர்ந்து பயில தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மே 20ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேற்று (ஜூன் 5, 2019) மாலை அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 14 லட்சத்து 10755 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 7 லட்சத்து 97042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது நாடு முழுவதும் 56.49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 48.57 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 9.1 சதவீதம் உயர்வு ஆகும்.

 

இந்திய அளவில், ராஜஸ்தானைச் சேர்ந்த நளின் கண்டேல்வால் என்ற மாணவன் 701 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் இடம்பெறவில்லை. எனினும், டாப்&20 மாணவிகள் பட்டியலில், தமிழக மாணவி ஸ்ருதி 685 மதிப்பெண்கள் எடுத்து, பத்தாம் இடம் பிடித்துள்ளதோடு, தமிழக அளவில் முதல் மாணவியாகவும் சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் இவருக்கு 57வது இடம் கிடைத்துள்ளது.

 

வழக்கம்போல் நீட் தேர்விலும், மாணவர்களைக் (351278 பேர்) காட்டிலும் மாணவிகளே (445761 பேர்) அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

 

இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பகுதிகளில் இருந்து மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. இந்த ஆண்டு இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்குக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 134 ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி) மற்றும் எஸ்சி., எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 107 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீடு அல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் 120 மதிப்பெண்கள் குறைந்தபட்ச தேர்ச்சிக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த தேர்வை (அடைப்புக்குறிக்குள் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை) எழுதிய ஓபிசி பிரிவினரில் 375635 (631473) மாணவர்களும், எஸ்சி பிரிவினரில் 99890 (193188) மாணவர்களும், எஸ்டி பிரிவினரில் 35272 (86210) பேரும், இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினரில் 286245 (499884) மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம், நடப்புக் கல்வி ஆண்டில் பட்டியல் சமூகத்தினரிடையே எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 

இத்தேர்வு முடிவுகள் மூலம் நமக்கு
இன்னொரு உண்மையும் தெரிய வந்துள்ளது.
என்னவென்றால், முதல் 50 இடம்
பிடித்துள்ளவர்களில் ஒருவர் கூட
பட்டியல் சமூகத்தினர் இல்லை.
இதில் 7 பேர் ஓபிசி பிரிவினர். ஏனைய அனைவரும்
இட ஒதுக்கீடு அல்லாத முன்னேறிய வகுப்பினர்.
இதேநிலைதான் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள
மாணவ, மாணவிகள் பட்டியலிலும் நிலவுகிறது.
இந்தப்பட்டியலிலும் எஸ்சி., எஸ்டி பிரிவினர்
ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.

 

நீட் தேர்வுக்கு எதிராக
தமிழக அரசியல் எதிர்க்கட்சிகள்
மேற்கொண்டு வரும் பரப்புரைகளால்
அத்தேர்வு குறித்த விழிப்புணர்வைக் காட்டிலும்,
அதன் மீதான எதிர்மறை சிந்தனையே
மாணவர்களிடம் பரவிக்கிடக்கிறது.

 

அதனால்தானோ என்னவோ
தென்னிந்தியாவில் தமிழகத்தைக் காட்டிலும்
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்
நீட் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆந்திராவில் 70.72 சதவீதம் பேரும்,
கர்நாடகாவில் 63.25 சதவீதம் பேரும்,
கேரளாவில் 66.59 சதவீதம் பேரும்,
தெலங்கானாவில் 67.44 சதவீதம் பேரும்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரியின் தேர்ச்சி விழுக்காடு
48.70 ஆக உள்ளது.

 

மருத்துவப்படிப்புகளுக்கான இடங்களில் அந்தந்த மாநில ஒதுக்கீட்டின்படி 85 சதவீத இடங்களும், தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டின்படி 15 சதவீத இடங்களும் நிரப்பப்படும். இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு சற்று எளிமையாக இருந்ததால், தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளதாக மாணவர்கள் கூறினர்.

 

– பேனாக்காரன்