Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜியோ விளம்பரத்தில் மோடி; ஆர்டிஐ தலைவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடும் எச்சரிக்கை!

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் ரிலையன்ஸ் ஜியோ விளம்பரங்கள் வெளியிடப்பட்டது குறித்த விவகாரத்தில், இந்திய தகவல் ஆணையத் தலைவர் ஆர்.கே. மாத்தூர், பிரதமர் அலுவலகத்தை கடுமையாக எச்சரித்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் அதிபர் முகேஷ் அம்பானி ஓராண்டுக்கு முன்பு, ஜியோ நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தினார். அது தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய ஜியோ விளம்பரங்கள் நாடு முழுவதும் உள்ள முன்னணி நாளிதழ்கள், டிவி சேனல்களில் தொடர்ந்து வெளியாகின.

அம்பானி, அதானி போன்ற தொழில் அதிபர்களுக்காகவே பிரதமர், வேலை செய்வதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இந்த விளம்பரங்கள் மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.

ஜியோ விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படம் வெளியிட முறையான அனுமதி வழங்கப்பட்டதா? என்பது குறித்து, நீரஜ் ஷர்மா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திற்கு மனு அனுப்பி இருந்தார். அந்த மனுவில், பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய விளம்பரத்தால், ரிலையன்ஸ் ஜியோ என்பது அரசு நிறுவனம் என மக்கள் கருதுகின்றனர் என்றும் தெரிவித்து இருந்தார்.

அவர் விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் அவருடைய கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை. ஆனால், பிரதமர் அலுவலகத்திற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஒருமுறை பதில் அளித்திருந்தனர். பிறகு நீரஜ் ஷர்மா, மேல்முறையீடு செய்தார். அப்போது அவருக்கு, இந்த கேள்வி நுகர்வோர் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையது என்று பதில் அளித்ததோடு, அந்த துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும் பதில் அளித்தது.

இதனால் பொறுமை இழந்த மனுதாரர், இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்தார். அதற்கும் பதில் இல்லாததால், இந்திய தலைமை தகவல் ஆணையத்திற்கு மனு செய்தார்.

இது தொடர்பான விசாரணையின்போது நேரில் ஆஜரான நீரஜ் ஷர்மா, ”தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. இந்த சட்டத்தின் கீழ் இடைக்கால பதில் அளிப்பது குறித்து எங்கேயும் குறிப்பிடாதபோது, இடைக்கால பதில் என ஒரு தகவலை அனுப்பியுள்ளனர்.

என் மனுவை தாமதப்படுத்துவதற்கு தந்திரமான உத்திகளை அதிகாரிகள் கையாள்கின்றனர். பிரதமரின் புகைப்படத்தை ஒரு தனியார் நிறுவனம் பயன்படுத்தும்போது அந்த நிறுவனத்தை வெகுசன மக்கள் கண்மூடித்தனமாக நம்பிவிட வாய்ப்பு இருக்கிறது. என் கேள்வி, பொதுமக்கள் நலன் சார்ந்தது,” என்று முறையிட்டார்.

ஆர்கே.மாத்தூர்

இதை விசாரித்த இந்தியத் தகவல் ஆணையத் தலைவர் ஆர்கே.மாத்தூர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அதற்கென உரிய காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.

காலதாமதம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இடைக்கால தகவல்களை அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று, பிரதமர் அலுவலகத்தை கடுமையாக எச்சரித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்கள் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி என்ற வரிசையில் ஒற்றைத் தலைமையை மட்டும் நரேந்திர மோடி விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. அதனால்தான், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட காவிரி மேலாண்மை வாரியம், லோக்பால் அமைப்புகளை ஏற்படுத்தாமல் காலம்தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், பொதுத்தகவல் ஆணையத்தையும் முடக்கும் வேலைகளிலும் பாஜக அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருவதையே, நீரஜ் ஷர்மாவின் மேல்முறையீட்டு விசாரணை தெளிவுபடுத்துகிறது.

 

– நாடோடி.