Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 13, 2019) தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையைத் திறந்து வைத்தார்.

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கேஆர்எஸ், கபினி ஆகிய இரு முக்கிய அணைகளும் நிரம்பின. தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கர்நாடகாவின் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சத்து 39200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அபரிமிதமான நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

நேற்று முன்தினம் மேட்டூர்
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு
1.25 லட்சம் கன அடியாக
இருந்த நிலையில்,
நேற்று இரவு (ஆக. 12)
2.40 லட்சம் கன அடியாக
அதிகரித்தது. கடந்த 9ம் தேதி
மேட்டூர் அணையின் நீர் மட்டம்
54 அடியாக இருந்தது.
வரலாறு காணாத நீர்வரத்தால்,
நான்கு நாள்களில் மேட்டூர்
அணையின் நீர்மட்டம்
மேலும் 40 அடி உயர்ந்தது.
நீர் வரத்து அதிகரித்து வருவதால்,
விரைவில் அணையின்
முழு நீர்த்தேக்க அளவான
120 அடியை எட்டும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா பாசனத்திற்காக கடந்த ஆண்டு ஜூலை மத்தியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்தாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் அணை திறக்கப்படவில்லை. அதன் பின்னர் கர்நாடகா, கேரளாவில் பெய்து வரும் கன மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர் இருப்பும் உயர்ந்தது. இதையடுத்து, டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்று இன்று காலை மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்தது. முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையில் சிறப்பு பூஜைகள் செய்ததுடன், தண்ணீரில் மலர்களைத் தூவியும் வழிபட்டனர்.

 

இன்று அதிகாலை
4.30 மணியளவில் மேட்டூர்
அணையின் நீர் மட்டம்
100.03 அடியை எட்டியது.
அணையின் முழு நீர் கொள்ளளவு
93.47 டிஎம்சி.
தற்போதைய நீர் இருப்பு
63.144 டிஎம்சி ஆக உள்ளது.
அணைக்கு தற்போது
2 லட்சத்து 58582 கன அடி
தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பாசன
வசதிக்காக முதல்கட்டமாக
வினாடிக்கு 1000 கன அடி நீர்
திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை திறப்பின் மூலம்
16 லட்சம் ஏக்கர் நிலங்கள்
பாசன வசதி பெறும்.
மேட்டூர் அணை கட்டியதில்
இருந்து இதுவரை 65வது
முறையாக நீர்மட்டம்
100 அடியை எட்டியிருப்பது
குறிப்பிடத்தக்கது.

விழாவில், மேட்டூர் அணையைத் திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கிறேன். ஏழுமலையான், ஜெயலலிதா ஆகியோரின் அருளாசியால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை திறப்பின் மூலம் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேற்கு, கிழக்கு கால்வாய்
பாசனத்திற்காகவும் இன்று முதல்
137 நாள்களுக்கு தண்ணீர்
திறந்து விடப்படும்.
அவற்றின் மூலம் 45 ஆயிரம்
ஏக்கர் நிலம் பயன்பெறும்.
விவசாயிகள் தண்ணீரை
சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான
இடுபொருள்கள் தயார்
நிலையில் உள்ளன.
தேவையான நேரத்தில் அவை
வழங்கப்படும்.
மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு
85 ஆண்டுகள் ஆன நிலையில்,
அணையின் நீர்ப்பிடிப்பு
பகுதிகளில் படிந்துள்ள வண்டல்
மண்ணை விவசாயிகளுக்கு
இலவசமாக வழங்கும்
திட்டத்தை ஏற்கனவே துவக்கி
வைத்தேன். இதன்மூலம்
ஏராளமான விவசாயிகள்
2.70 லட்சம் கன மீட்டர்
அளவுக்கு வண்டல் மண்
எடுத்து பயன்
அடைந்துள்ளனர்.

 

காவிரி – கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இத்திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரப்பப்படும். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது,” என்றார்.