Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘ஆண்டவர்’ ஆட்டம் ஆரம்பம்!

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் குதித்து விட்டாரா இல்லையா? என்று இன்னும் காட்சி ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்கேற்ப அவரும், ‘இன்னும் சமையல் வேலை முடியவில்லை’ என்பார்; அல்லது, ‘ஓட்டுப் போடும்போதே அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என்பார். இப்படி பூடகமாக பேசுவதும், ‘ட்வீட்’ போடுவதிலும் கமல் பி.ஹெச்டி., முடித்தவர்தான்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 3) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு கமலின் அரசியல் என்ட்ரி உறுதியானது பற்றி தெளிவாக புரிந்திருக்கும். அவர் நடிகர் சக்தியிடம் பேசுகையில், ”இனிமேல் நான் அரசியல்வாதிகளை நக்கல் செய்ய முடியாது. எனக்கு இனி முகமூடி தேவையில்லை,” என்பார்.

இப்படி குறியீடுகள் வாயிலாக பேசுவது கமலுக்கே உரித்தானது. அவருடைய பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி, அரசியல் நுழைவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இளைஞர்கள் மீது எப்போதும் தனி கவனம் செலுத்துவார். அவருடைய உத்தியைத்தான் இப்போது கமலும் பின்பற்றுகிறார் என்பது என் தனிப்பட்ட கருத்து. நடிகர் சங்க, தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்களில் விஷால், கார்த்தி தலைமையிலான இளைஞர்கள் பக்கம் நின்றதை வைத்து மட்டும் இப்படிச் சொல்லவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசும்போதுகூட, ”நாளைய பெரியவர்கள் நீங்கள்தான். இப்போதே அதற்கான பயிற்சியை ஆரம்பியுங்கள்,” என்று இளைஞர்களை நோக்கி நகர்வதைக் காண முடியும். ”இந்த உலகம் என்னைத் தாங்கிப்பிடிக்கும் என்று நம்புகிறோம். வாருங்கள். நான் தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்,” என்று நம்பிக்கையூட்டும் விதமாக பேசி வருகிறார்.

வரலாற்றில் நிறைய புரட்சியாளர்கள் இருந்துள்ளனர். ஆனால் சேகுவேராவை மட்டும் உலகம் கொண்டாட முக்கிய காரணம், அவர் மட்டுமே தீர்வை நோக்கி பயணித்தார். அதனால்தான் சேகுவேரா, இளைஞர்களின் எழுச்சி நாயகனாகத் திகழ்கிறார். அத்தகைய தீர்வை நோக்கிச் செல்லுங்கள் என்றும் இளைஞர்களை உசுப்பி விடுகிறார் கமல்ஹாசன். இத்தகைய தெளிவு, ரஜினியிடம் இருக்குமா? என்று தெரியவில்லை.

”தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை; போருக்கு தயாராக இருங்கள்” என்று ரஜினிகாந்த் மறைமுகமாக தனது அரசியல் உள்ளக்கிடக்கையை சொல்லி இருந்தார். எனினும், ரஜினியைவிட கமல் மீதான எதிர்பார்ப்பே மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் கமல், ரஜினி இருவரில் அரசியல் மேடையை அலங்கரிப்பார் என்ற எதிர்பார்ப்பில் கமல் முன்னிலையில் இருக்கிறார் என்றே தெரிகிறது.

ஆளுங்கட்சி மீதான கடும் விமர்சனங்களை கமல்ஹாசன் தொடர்ந்து முன்வைக்கிறார். பொதுவெளியிலும் அவருடைய விமர்சனங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அனிதாவின் தற்கொலை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு போன்றவை குறித்து கமல் முன்வைக்கும் விமர்சனங்கள், கருத்துகள் ஒவ்வொன்றும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

”அனிதாவின் மரணம் குறித்து ரஜினி வருத்தம் மட்டும் தெரிவித்தார். ஆனால் கமலுக்கு வந்திருப்பது கோபம்” என்று அவருடைய ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளனர். ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில், ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா… வேட்டிய போட்டு தாண்டவா’ என்று ஒரு பாடல் வரும். அதிலிருந்து கமல்ஹாசனை ரசிகர்கள், ‘ஆண்டவர்’ என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் கமலை ‘ஆண்டவர்’ என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.

”சுயநலவாதிகளுக்கு முடிந்தால் புத்தி சொல்வோம்; இல்லாவிட்டால் நகர்த்தி வைப்போம்” என்று அவரின் சவுக்கடி வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆளுங்கட்சிக்கு எதிரானதாக மட்டுமே புரிந்து கொள்ள முடியாது. அது ஒட்டுமொத்த சுயநல அரசியல் கூட்டத்தையும் புறக்கணிப்பதற்கான சமிக்ஞை.

கமல்ஹாசன், ”மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள்” என்று அறைகூவல் விடுத்துள்ளார். இந்த அறைகூவலை, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாகத்தான் பார்க்க வேண்டும். அன்னா ஹசாரே, அரவிந்த் கேஜரிவாலும் இந்த அறைகூவலை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

நடிகர் திலகம் சிவாஜியின் அரசியல் முடிவுதான் கமலுக்கும் ஏற்படும் என்று கடந்த கால அனுபவங்களை வைத்து கமலை எச்சரிப்போருக்கும் அவருடைய ரசிகர்கள் டிவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற விமர்சனங்களுக்கு, ”கமல், சிவாஜி மாதிரி தோற்று விடுவார்னு சொல்கின்றனர். கமலுக்கு ஸ்கிரிப்ட் எழுதவும் தெரியும். மக்களுக்கேத்த ஸ்கிரிப்ட் எழுதவும் தெரியும்; மசாலா தரவும் தெரியும்,” என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

”இது என்ன பெரிய சுதந்திர போராட்டமா? ஆம். இதுவும் அதுதான். ஒன்று கூடுவோம். ஒரு நல்ல தலைவனை உருவாக்குவோம். ஆண்டவர் இருக்கிறார்,” என்று சுடச்சுட டிவிட்டர் பக்கங்களை கொதிநிலையில் வைத்திருக்கின்றனர் கமலியன்ஸ்.

இப்போது, கேரளா முதல்வர் பினராயி விஜயனை கமல் திடீரென்று சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. அதற்கு முன்பே அவர், ‘என் நிறம் காவி அல்ல’ என்று மறைமுகமாக பாஜகவை நகையாடியிருந்தார். தட்டையாக இல்லாமல் இடதுசாரி சித்தாந்தங்களும், திராவிட சிந்தனைகளும் கலந்த ‘கமலிஸம்’ ஆக அவருடைய அரசியல் பாதை இருக்கலாம் என்பது என் கருத்து.

கமல், ‘ஆண்டவர்’ அன்று; ஆளப்போகிறவர்!

– இளையராஜா சுப்ரமணியம்.
தொடர்புக்கு: selaya80@gmail.com