Sunday, July 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கருணாநிதி மரணம்… தலைவராகும் தளபதி… எதையும் இழக்கத் தயாரான ஸ்டாலின்! கண்ணீர்மயமான திமுக செயற்குழு!!

 

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த எட்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 14, 2018), அக்கட்சி செயற்குழுவின் அவசரக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. நேற்றைய தினம் மு.க. அழகிரி, ”கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என் பின்னால் இருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கின்றனர்,” என்று சரவெடி கொளுத்திப் போட்டார்.

இதனால் இன்றைய அவசர செயற்குழுக் கூட்டத்தில் அனல் பறக்கும் என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் நிலவியது. 325 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்ட அரங்கம், ஆரம்பத்தில் இருந்தே இறுக்கமாக காணப்பட்டது. எவர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் தென்படவில்லை.

 

மேடையின் பின்னணியில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் ஸ்டாலின் முகமும் அச்சிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்பே அத்தகைய பேனர் அங்கே வைக்கப்பட்டு இருந்தாலும், கருணாநிதி மறைவுக்குப் பிறகு தொண்டர்கள் அந்தப் படத்தை பார்த்தபோது, மாபெரும் திராவிட இயக்கத்தின் தகுதி வாய்ந்த வாரிசு ஸ்டாலின்தான் என்று மனதில் நிறுத்திக் கொண்டதுபோல் தெரிந்தது.

 

மேடையில் பேராசிரியர் அன்பழகன் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். அவருடைய இடப்புறத்தில் மு.க.ஸ்டாலின், ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரும், வலது பக்கத்தில் துரைமுருகன், வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அவசர செயற்குழுக் கூட்டம் தொடங்கியதுமே, கருணாநிதியின் உருவப்படத்திற்கு பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைமுருகன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

டி.கே.எஸ். இளங்கோவன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதன் நகல் எல்லா உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்திய நாட்டுக்கு பல நலத்திட்டங்களை கருணாநிதி அறிமுகப்படுத்தினார். அவற்றில் பல திட்டங்கள் இன்னும் பல மாநிலங்களில் அமலில் உள்ளன. மக்களுக்காக கடைசி வரை உழைத்தவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தவர். 33 சதவீதம் இட ஒதுக்கீடு, மாநில சுயாட்சி கொள்கைகளை கொண்டு வந்தவர் என இரங்கல் தீர்மானத்தில் சொல்லப்பட்டு இருந்தது.

 

கருணாநிதி பேசும்போது, ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…’ என்று சொல்லிவிட்டு பேச்சைத் தொடங்குவார். மு.க.ஸ்டாலினும் இன்று தந்தையைப் போலவே, ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று சொல்லி பேசத் தொடங்கினார். அப்போது அரங்கத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

செயற்குழுவின் நேரடி அஜண்டா, கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிப்பது என்றாலும், செயல் தலைவரான ஸ்டாலினை கட்சித் தலைவராக கோடி காட்டுவதுதான் ஹிடன் அஜண்டா. அந்த வேலையை, ஸ்டாலினின் மனசாட்சியான துரைமுருகன் செவ்வனே செய்து முடித்தார்.

 

மேடையில் பேசிய துரைமுருகன், ”திமுகவை வழிநடத்த தளபதி என்னும் ஆலம் விழுதை கலைஞர் விட்டுச் சென்றிருக்கிறார். நாம் அனாதைகள் அல்ல. நாம் கலைஞரின் வார்ப்படங்கள். அவருடைய ஒளிக்கீற்று இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் எல்லா ஆற்றலும் உங்களிடத்திலே இருக்கிறது.

 

அண்ணாவின் இதயம், கலைஞரின் இதயம், துடிப்பாக உழைக்கும் உங்கள் இதயம் என மூன்று இதயங்களைப் பெற்றிருக்கும் உங்களால் எதையும் செய்ய முடியும் செயல் தலைவர் அவர்களே…. விரைவில் தலைவராகப் போகும் தலைவரே…. எங்கள் மீது கலைஞர் காட்டிய அதே பாசம், அதே நேசம் உங்களிடத்திலும் இருக்கிறது. எங்களை எல்லாம் நீங்கள்தான் அரவணைத்துக் கொள்ள வேண்டும்,” என்று ‘பாகுபலி’ கட்டப்பா ரேஞ்சில் விசுவாசத்தை பொழிந்தார் துரைமுருகன்.

 

அப்போது அரங்கமே பலத்த கரவொலியால் அதிர்ந்தது. கரவொலிகள் அடங்க நீண்ட நேரமானது. ‘தளபதி வாழ்க…’ என்ற முழக்கங்களும் எழுந்தன. வழக்கமாக ஷேவ் செய்து ‘பளீச்’ என்று இருக்கும் ஸ்டாலின், இன்றைய கூட்டத்தில் லேசான நரைத்த தாடியுடன் வழக்கத்திற்கு மாறான தோற்றத்தில் கலந்து கொண்டார். அவர் முகத்தில் ஆரம்பம் முதலே செழுசெழுப்போ உற்சாகமோ இல்லை. தொண்டர்கள், ‘தளபதி வாழ்க’ என முழங்கியபோதும்கூட அவர் முகத்தில் சின்ன சலனம்கூட இல்லை.

 

கூட்டத்தில் அழகிரி பற்றிய விவாதமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அரங்கத்தில் ஒருவர்கூட அழகிரி பற்றி பேசவில்லை. பேராசிரியர் அன்பழகனே கேட்டுக்கொண்டதன்பேரில், அவரும் பேச அழைக்கப்படவில்லை.

 

துரைமுருகன் பேசிய பிறகு, மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

”நீங்கள் எல்லாம் தலைவரை மட்டும்தான் இழந்து இருக்கிறீர்கள். நான் தலைவரை மட்டுமல்ல… தந்தையையும் இழந்து தவிக்கிறேன்,” என்று ஸ்டாலின் குறிப்பிடும்போது அவரையும் மீறி குரல் தழுதழுத்தது. அதன்பிறகு அவர் பேசி முடிக்கும்வரை தழுதழுத்தக் குரலிலேயே பேசினார்.

”ஒருமுறை நம்முடைய கட்சியின் பெயர், சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்ற மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது. இதுபற்றி தேர்தல் கமிஷனில் விசாரணை நடந்தது. தீர்ப்பு நமக்கு சாதமாக வந்தது. அப்போது தலைவர் கலைஞர், ‘இந்த தீர்ப்பு சாதகமாக வராமல் போயிருந்தால், அண்ணா சமாதி அருகில் நான் புதைக்கப்பட்டிருப்பேன். நீங்கள் எல்லோரும் எனக்கு மலர் வளையம் வைத்திருப்பீர்கள்,’ என்று சொன்னார்.

 

அதே நிலைதான் இப்போது தலைவர் கலைஞரின் உடலை அண்ணா சமாதி அருகில் நல்லடக்கம் செய்ய உயர்நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்தபோது எனக்கும் ஏற்பட்டது. ஒருவேளை அந்த தீர்ப்பு மட்டும் சாதகமாக வராவிட்டால், கலைஞரின் சமாதி அருகே என்னையும் புதைக்க வேண்டியதிருந்திருக்கும்,” என்று ஸ்டாலின் கூறும்போது மொத்த அரங்கமும் ஒருவித இறுக்கமான சூழ்நிலையில் மூழ்கிப் போயிருந்தது.

 

கலைஞரின் உடலை மெரினாவில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய, தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் அவர் பேசினார்.

 

”தலைவர் கலைஞரை நல்லடக்கம் செய்ய மெரினாவில் அனுமதிக்க வேண்டி முதல்வரை நேரில் சென்று பார்த்தோம். கட்சியின் முன்னோடிகள் சிலர், முதல்வரை சந்திக்க நீங்கள் வரவேண்டாம் எனத்தடுத்தனர். ஆனாலும் மானம், மரியாதை, கவுரவம் என எனக்கு எதுவும் முக்கியமல்ல. தலைவர் கலைஞருக்காக நான் எதையும் இழக்கத் தயார் எனக்கூறிவிட்டுத்தான் முதல்வரை சந்திக்கச் சென்றேன்.

 

ஆனால் சட்ட சிக்கல் உள்ளதாகக்கூறி மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் மறுத்துவிட்டார். இன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன்…. அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்கித்தருமாறு முதல்வரின் கைகளைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டேன். மன்றாடினேன். ‘பார்க்கலாம்’ என்று மட்டும் சொன்னார்.

 

பிறகுதான் நம்முடைய வழக்கறிஞர் வில்சன் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதில் நமக்கு சாதகமாக தீர்ப்பும் கிடைத்தது. அவ்வளவு பெரிய சோகத்தில் இருந்தபோது, அந்த நேரத்தில் நமக்கு கிடைத்த சிறு மகிழ்ச்சி அதுதான். தலைவர் கலைஞர், இறந்த பிறகும் போராடி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றி, நம்முடைய வழக்கறிஞர் அணிக்குதான் மு-ழுக்க முழுக்கப் போய்ச்சேர வேண்டும். கலைஞர் வழிநின்று நாம் கடமை ஆற்றுவோம்,” என்றார்.

 

இத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. திமுக தலைவராக மு.க. ஸடாலின் முடிசூடும் நாள் வெகுவிரைவில் எதிர்பார்க்கலாம்.

 

– நாடோடி.