Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்!

கந்த சஷ்டி கவசத்திற்கு 

கருப்பர் கூட்டம் யூடியூப்
சேனலின் பொழிப்புரை ஒருபுறம்;
கோவையில் பெரியார் சிலை
மீது காவிச்சாயம் ஊற்றப்பட்டு
உள்ளது, மற்றொருபுறம்.
பெரியார் சிலை அவமதிப்பு
என்பது, கருப்பர் கூட்டத்தின்
செயலுக்கு எதிர்வினையாகவே
கருத முடியும்.

 

தமிழர் நாகரிகம்,
ஆரியப் பார்ப்பனர்
படையெடுப்புக்குப் பின்னர்
பெருமளவில் சிதிலமடைந்து
இருக்கிறது. இப்போதுள்ள
தமிழர்கள், முற்றாக
ஆரிய டிஎன்ஏ ஆகவும்
இல்லாமல், பழந்தமிழரின்
டிஎன்ஏ ஆகவும் இல்லாமல்
புதிய மூலக்கூறுகளுடன்
இருக்கிறார்கள்.
சோறு என்பது சாதம்
ஆனபோதே தமிழர்கள்
ஆரியத்தின்பால் மூழ்கி
விட்டார்கள் என்பதாக
புரிந்து கொள்ளலாம்.

அதனால்தான் அவர்களுக்கு
தமிழ்க்கடவுள் முருகன் யார்?
ஆரியக்கடவுளான
ஸ்கந்தன் (கந்தன்),
சுப்ரமணியஸ்வாமி யார்
என்பதில் எல்லாம்
பெருங்குழப்பம்
காணப்படுகிறது.

 

உண்மையில்,
பழந்தமிழர் நாகரிகத்தில்
ஆரியர்களைப் போன்ற
கடவுள் வழிபாட்டு முறைகள்
என்பதே கிடையாது.
தமிழர்கள் இயற்கையை
வழிபட்டனர். சூரியனைப்
போற்றினர். அதன்பின்னர்,
அவர்கள் தங்களின்
குடும்பத்திற்காகவும்,
ஊர் நன்மைக்காகவும்
உழைத்து மரித்த
முன்னோர்களுக்கு நடுகற்கள்
எழுப்பி வழிபட்டனர்.
படையிலிட்டனர்.
பகிர்ந்து உண்டனர்.

 

இதற்கு சான்றாக நாம்,
புதிய அகராதியில் ஏற்கனவே
பலமுறை புறநானூற்றுப் பாடல்
ஒன்றையும் சுட்டிக்காட்டி
இருக்கிறோம்.

 

”அடலருந் துப்பின்….”

 

என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலில்,

 

”ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”

என்று பதிவு செய்கிறார், மாங்குடி கிழார். இடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட பாடல் இது.

 

போரில் சண்டையிட்டு,
யானையின் தந்தத்தால்
குத்துப்பட்டு, குடிகளுக்காக
உயிர்த்தியாகம் செய்த
வீர மறவனுக்கு நடப்படும்
நடுகல்லே, கடவுள். மற்றையன
எதுவும் கடவுள் அல்ல.
அந்த வீர மறவனின்
நடுகல்லுக்கு நெல்மணிகளைத்
தூவி வழிபட்டு வந்துள்ளனர்
தமிழர்கள்.

 

எது சிறந்த உணவு,
எவை எல்லாம் சிறந்த மலர்கள்,
நான்கு குடிகள் எவை
என்பதற்கும் இப்பாடலில்
சான்றுகள் உள்ளன.

 

இன்றைக்கும்
தமிழர்களுக்கு விருப்பக்
கடவுள் என்போர் யாராக
வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் குலதெய்வம் என்பது
பாப்பாத்தி அம்மன், பெரியாண்டிச்சி
அம்மன், முனியப்பன், அழகப்பன்,
கருப்பண்ண சாமி, தீப்பாய்ந்த
அம்மன் இப்படியான
தெய்வங்களை கும்பிடுகிறோமே….
இவர்கள் கடவுளர்கள் அல்லர்.
இவர்கள் அனைவருமே
நம் குலம் தழைக்க
ரத்தமும் சதையுமாக
வாழ்ந்து, உயிர்த்தியாகம்
செய்த முன்னோர்கள்.

 

அதன் நீட்சிதான், பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகளுக்கு சிலைகள் எழுப்பப்படுவது. ஒரு சாரார், ‘கடவுள் இல்லை என்போர் பெரியார் சிலைக்கு மட்டும் மாலை அணிவிப்பது மூடநம்பிக்கை ஆகாதா?,’ எனக் கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு பதில், நாம் மேலே சொல்லப்பட்டதுதான். புரட்சியாளர்களுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் சிலை வடிவம் என்பது நடுகல்லின் நீட்சிதான்.

 

வீரமங்கை வேலுநாச்சியார் படையில் பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமையேற்று செயல்பட்ட குயிலிதான், முதல் மனித வெடி குண்டு என்று கருதப்படுகிறார். அவருடைய உயிர்த்தியாகத்தால் எழுந்ததுதான், இன்றும் நாம் வழிபட்டு வரும் தீப்பாய்ந்த அம்மன் என்றொரு கருத்தாக்கமும் உண்டு.

 

ஏன் முருகனை
தமிழ்க்கடவுள் என்கிறோம்?
உண்மையில், அவன் ஒரு
குறிஞ்சி நிலத்தலைவன்.
வேட்டையாடி.
தமிழர்கள் குறிஞ்சி
நிலத்தில் வேட்டைச்சமூகமாக
இருந்தபோது, முருகன்
ஆகச்சிறந்த வேட்டையாடி.
ஊருக்கு சோறிட்டவன்.
அவனை வழிபடத் தொடங்கினோம்.
அவனே தமிழர்களின்
கடவுளானான். அவனே,
தமிழ்க்கடவுளானான்.

 

ஆனால்
இற்றை நாளில் சொல்லப்படும்
மயில் மீது பறந்து வரும்
முருகன், ஸ்கந்தன், சுப்ரமணியன்
எல்லோருமே ஆரியர்கள்
உருவாக்கிய கடவுளர்கள்.
தமிழர்களுக்கு அவர்கள்
இறக்குமதி பொருள்களே.
அதேபோல்தான், இந்த நாட்டில்
ஹிந்துக்கள் என்போர்
ஆரியப் பார்ப்பனர்கள்
மட்டுமே. தமிழர்கள்,
தனித்தேசிய இனம்.
அவர்களை ஆரியர்கள்
சாதி ஹிந்துக்களாக
பிரித்தாள்கிறார்களே தவிர,
தமிழர் மரபில்
சாதிப்பாகுபாடுகள் கிடையாது.
சாதிய பிளவுகள்
இடையில் வந்தது.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் இங்குள்ள கவுண்டர், முதலியார், வன்னியர், தேவர், பட்டியல் சமூகத்தவர் உள்ளிட்ட சாதி ஹிந்துக்கள், பேச்சிலும், நடையிலும் ஆரியப் பார்ப்பனர்களை நகல் எடுக்க விழைவதுதான். அதன் விளைவுதான், இல்லாத கடவுளர்களை இவர்களும் தங்களுக்குரியதாக்கிக் கொண்டுள்ளனர்.

 

அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளைப் புறந்தள்ளி, அறிவுக்குப் பொருந்தும் கருத்துகளை மட்டுமே ஏற்பதுதான், பகுத்தறிவு. ஹிந்து புராணங்களின்படி ஆறுமுகம் ஆகிய முருகனின் பிறப்பை ஆராய்ந்தோமானால், தர்க்க ரீதியில் கொஞ்சமும் ஏற்க இயலாது. அதை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. ஏனெனில், இங்கு ‘சூடோ ஸ்பிரிச்சுவல்’கள் அதிகம்.

 

மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்டால்தான் அரசியல் குட்டை குழம்பும். அதில் மீன்களைப் பிடிக்க முடியும். இந்த வித்தையை இங்குள்ள திராவிடக் கட்சிகள் ஏற்கனவே நன்கறியும். அதே உபாயத்தைத்தான் சங்கப்பரிவாரங்களும் இப்போது கையிலெடுத்திருக்கின்றன. இங்கே நிலைத்திருக்கும் ஒரு கைத்தடியை எப்பாடுப்பட்டாகிலும் முறித்து உடைத்தெறிந்தால் மட்டுமே அவர்களால் ஊடுருவ முடியும் என்கிற நிலை. துப்பாக்கிகளைக்கூட கடந்து வரும் வல்லமை கொண்டவர்களால் காய்ந்த மரக்கைத்தடியைக் கடக்க முடியவில்லை. எனில், பண்பாட்டு ரீதியிலும், மொழி வழியிலும் ஊடுருவது… இயலாதபோது சிதைப்பது. செல்லுமிடத்தில் எல்லாம் வள்ளுவனுக்கு குடை பிடிப்பதும்கூட அதன் துவக்க நிலைதான்.

 

சரி. என் உரையாடல் வேறு எங்கோ திசை மாறுகிறது. எடுத்துக்கொண்ட விவாதத்திற்கு வருகிறேன். உண்மையில் தமிழர்க்கென்று தனி கடவுள் இருக்க முடியுமா? என்பதும் கூட ஆய்வுக்கு உட்பட்டதுதான். ஆக்ஸ்போர்டு அகராதி, கடவுள் என்ற சொல்லுக்கு, ”பிரபஞ்சத்தை படைத்தவனும், அதை ஆட்சி செய்பவனும், அனைத்து தார்மீக அறத்தின் மூலமும் கடவுள்,” என்கிறது. அப்படியானால் பிரபஞ்சம் முழுவதற்கும் ஒரே ஒருவர்தான் கடவுளாக இருக்க முடியும். அவனும் தார்மீக அறத்தின் வழியில் மட்டுமே காப்பவனாகவும் இருக்க முடியும்.

 

அகராதியின் கூற்றுப்படி கொண்டால், தமிழர்க்கென்று ஒரு கடவுளோ, அராபியர்களுக்கென்று ஒரு கடவுளோ, ஜெருசலத்திற்கென்று தனி கடவுளோ இருக்க முடியாதுதானே?

 

மேலும், தார்மீக அறத்தின் மூலம் என்பதாகக் கொண்டாலும், நடப்பவை எல்லாம் அறத்தின் வழியிலா இருக்கிறது? அப்படியெனில் கடவுளும் பொய்தானே?

 

– பேனாக்காரன்

18.7.2020
04.00 மணி
வைகறை

www.puthiyaagarathi.com