Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆணவக்கொலை: கோகுல்ராஜின் சட்டையில் இருந்தது மனித ரத்தமா? தடய அறிவியல் நிபுணர் பரபரப்பு சாட்சியம்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில்,
அவருடைய சடலத்தில் இருந்து
கைப்பற்றப்பட்ட சட்டை, உள்ளாடைகளில்
இருந்தது மனித ரத்தமா? இல்லையா?
என்பது குறித்து தடய அறிவியல்
ஆய்வக பெண் அதிகாரி
நாமக்கல் நீதிமன்றத்தில்,
திங்கள்கிழமையன்று
(பிப்ரவரி 18, 2019) பரபரப்பு
சாட்சியம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாதி ஆணவப்படுகொலைகளுள் கோகுல்ராஜின் கொலை வழக்கும் ஒன்று. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தி இன்ஜினியரிங் பட்டதாரியான கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். உடன் படித்து வந்த, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகியதால் அவர் கொல்லப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

கடந்த 24.6.2015ம் தேதியன்று மாலையில், நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

சம்பவம் நடந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில் கடந்த 30.8.2018 முதல், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கோகுல்ராஜ் வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. நீதிபதி இளவழகன் முன்பாக விசாரணை நடக்கிறது. அமுதரசு, ஜோதிமணி தவிர ஏனைய 15 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 

இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமையன்று (பிப்ரவரி 18, 2019) சாட்சிகள் விசாரணை நடந்தது.

முதல் சாட்சியாக திருவள்ளூர் மாவட்ட தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் நளினா ஆஜராகி சாட்சியம் அளித்தார். சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் அவர் ரத்த மாதிரிகளை பகுப்பாய்வு செய்யும் நிபுணராக பணியாற்றி வந்தார். அவர் அளித்த சாட்சியத்தின் விவரம்:

 

”கோகுல்ராஜின் சடலத்தில் இருந்து
கைப்பற்றப்பட்டதாக டிரவுசர் (பேன்ட்) (1),
சட்டை (2), பணியன் (3), ஜட்டி (4),
கிழிந்த நிலையில் கிடந்த
பணியன் துண்டுகள் சில (5),
சடலம் கிடந்த இடத்தில் ரத்தம்
தோய்ந்திருந்த சில கற்கள் (6)
ஆகிய ஆறு தடயங்களை
திருச்செங்கோடு நகர காவல்துறையினர்
தடய அறிவியல் ஆய்வக
பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவற்றில் 3, 4, 5 ஆகிய மூன்று
இனங்களில் படிந்திருந்த ரத்தக்கறைகள்
பகுப்பாய்வுக்கு உட்படுத்த முடியாத
வகையில் அவற்றின் தன்மையை
இழந்து இருந்தன.

 

மேலும், 1 மற்றும் 6 ஆகிய
இனங்களில் படிந்திருந்த ரத்தக்கறைகள்
மனித இனத்தைச் சார்ந்ததுதான். என்றாலும்,
அவை என்ன வகை ரத்தம் என்று
எங்களால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை.
இனம் 2ல் (சட்டை) படிந்திருந்த ரத்தக்கறை,
மனித ரத்தம்தான். அது, ‘ஓ குரூப்’ வகையைச்
சார்ந்தது எனவும் கண்டறியப்பட்டது.
இந்த வகையும், இந்த வழக்கில்
தொடர்புடைய இறந்த நபரின் (கோகுல்ராஜ்)
ரத்த மாதிரியும் இரண்டும் ‘ஓ குரூப்’
என்ற ஒரே வகையைச் சேர்ந்தது
என்றும் ஆய்வில் தெரிய வந்தது.

இதுகுறித்த அறிக்கை ஒவ்வொன்றுக்கும்
தனித்தனி எண்கள் இடப்பட்டு 26.10.2015ம் தேதி,
மூடி முத்திரையிடப்பட்ட காகித
உறை மூலம் திருச்செங்கோடு நகர காவல்துறை,
ஈரோடு ரயில்வே காவல்துறை,
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம்
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
சட்டம் சார்ந்த மருத்துவர் ஆகியோருக்கும்
அனுப்பி வைக்கப்பட்டது,”
என்றார் நளினா.

 

இதையடுத்து ஓமலூரைச் சேர்ந்த ரங்கநாதன், பாஸ்கரன், செல்வமணி என்ற பெண், மாதேஷ் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர். இவர்களில் அரசுத்தரப்பு சாட்சியமான மாதேஷ் மட்டும் பிறழ் சாட்சியம் ஆனார்.

 

குற்றவாளி கூண்டில் இருப்பவர்களில் யாராவது அடையாளம் தெரிகிறதா? என்று அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி மாதேஷிடம் கேட்டார். அதற்கு அவர், தான் கண்ணாடி அணிந்து கொள்ளலாமா? என்று நீதிபதியிடம் அனுமதி கேட்டார். பின்னர் மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு குற்றவாளி கூண்டில் இருந்த அனைவரையும் பார்த்துவிட்டு, அவர்களில் யாரையும் அடையாளம் தெரியாது என்று பல்டி அடித்தார்.

 

பின்னர், அவரிடம் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி குறுக்கு விசாரணை நடத்தினார். இதையடுத்து சாட்சிகள் விசாரணையை நாளை மறுநாளைக்கு (பிப்ரவரி 20ம் தேதி) ஒத்திவைத்தார் நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

 

– பேனாக்காரன்