Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?; சமூகவலைத்தளங்களில் வைரல்

பெருந்துறையில் உள்ள ஓர் உணவகத்தில், கழிப்பறையை பயன்படுத்திய வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் கட்டணமும், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், பார்சல் கட்டணமும் வசூலித்துள்ள நிகழ்வு, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காக பெரும்பாலான உணவகங்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, சில உணவகங்கள் கழிப்பறை பயன்பாட்டுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ருக்குமணி அம்மாள் ஹோட்டல் என்ற பெயரில் பிரபலமான ஓர் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம், ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர்களுக்குச் சொந்தமானது.

இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி வரியாக தலா 2.5 சதவீதம் வீதம் மொத்தம் 5 சதவீத வரியாக 50 பைசா வசூலித்துள்ளது.

அதை பார்சல் பில் கணக்குடன் அந்த உணவக நிர்வாகம் வசூலித்துள்ளதால், பார்சல் சேவைக்காக 50 பைசாவும் சேர்த்து மொத்தமாக 11 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளது.

இதை சிலர் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவிட, இப்போது ‘வைரல்’ ஆகியிருக்கிறது. பலர், இதை கிண்டலடித்தும், ஜிஎஸ்டி வரி விதித்த நடுவண் அரசைக் கண்டித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

”கக்கூஸ் போறதுக்கு 10 ரூபாய் பில்லும் கொடுத்து, அதுல 1 ரூபாய் ஜிஎஸ்டியும் போடுற அளவுக்கு இந்தியாவ வல்லரசு ஆக்கிட்டாங்கனு நினைக்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கு. ஆமா, ஜிஎஸ்டி ஓகே. அது என்ன பார்சல் சார்ஜ் 50 பைசா?,” என்று சுபாஷினி என்பவர் ட்விட்டர் பக்கத்தில் கேலியாக பதிவிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் கழிப்பறையைப் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிப்பது இல்லை. ஆனால், இந்தியாவில் பொது இடங்களில் அநாகரீகமாக 1க்கோ, 2க்கோ சென்றால் அதை யாரும் சட்டை செய்வதில்லை. அதே, பொதுக்கழிப்பறைக்குள் சென்றால், அதற்குக் கட்டணம் வசூலிக்கும் முரணான நடைமுறை உண்டு.

இப்போது சரக்கு மற்றும் சேவை வரி அமலில் உள்ளதால், கழிப்பறை பயன்பாட்டிற்குக் கட்டணமும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் போக்கும் பரவலாக நடைமுறைக்கு வந்துள்ளது.

ருக்குமணி உணவகத்தின் செயலை ஒருவர், ”கக்கா போக ஒருத்தன் காசு வாங்கினா அசிங்கம். அதால, ஏதோ ஃபுட் பார்சல் வாங்கின மாதிரி பில் போட்டு பணம் கரெக்டா வர அஸ்யூர் பண்ணிகிட்டான் போல,” என்று பதிவிட்டுள்ளார்.

நெல்லையார் என்ற பதிவர், ”கழிப்பறை பயன்பாட்டிற்கும் ஜிஎஸ்டி வரி பொருந்துமா? அப்படிச் செய்தால் அது இன்னும் மன உளைச்சலை அதிகரிக்கும்,” என்று அதிருப்தியை பதிவிட்டுள்ளார்.

”ஜூனியர் குப்பண்ணா உணவகம், கழிப்பறை பயன்பாட்டிற்கு கட்டணம் வசூலிக்கிறது. கழிப்பறை பயன்பாட்டிற்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது என்பதெல்லாம் சரி. ஆனால், பார்சல் சார்ஜ் எதற்காக? என்பதுதான் புரியவில்லை. யாராவது தெளிவுபடுத்துங்கள்,” என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘புதிய இந்தியா’ தத்துவம் இதுதான் போலருக்கு.

 

– நாடோடி.