Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் ரத்து – ஹைகோர்ட்

சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சேலத்தை அடுத்த பள்ளிக்கூடத்தானூரை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகள் வளர்மதி. சேலம் பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். இயற்கை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் சேலம் மாவட்ட பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்த அமைப்பின் சார்பில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன், கதிராமங்கலம் ஓஎன்ஜிசி ஆகிய திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்ததுடன், துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அருகே இத்திட்டங்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறையினர், அரசுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டி விடுவதாகவும், ஆட்சேபகரமான துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வருவதாகவும் கூறி, அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது ஜூலை 17ம் தேதி, குண்டாஸ் சட்டத்தின் கீழும் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

வளர்மதியின் தந்தை மாதையன் தன் மகள் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யும்படி, ஆகஸ்ட் 2ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்கும்படி சேலம் மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப். 5) விசாரணைக்கு வந்தது. கலையரசன் பொன்னுசாமி உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு, மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து உத்ததரவிட்டது.

சிறைத்துறை நடைமுறைகள் முடிந்து ஓரிரு நாளில் வளர்மதி விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது. இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது காவல்துறையினர் மூலம் குண்டர் சட்டம் போடுவது தொடர்ந்து வந்த நிலையில், வளர்மதியை குண்டாசில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டிருப்பது அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.