Thursday, January 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு! சைகையால் மிரட்டிய யுவராஜ்…சீறிப்பாய்ந்தார் நீதிபதி…!!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ், குற்றவாளி கூண்டிற்குள் இருந்து கொண்டே அரசுத்தரப்பு சாட்சியை தலையசைவுகள் மூலம் மிரட்டியதும், அதற்கு நீதிபதி யுவராஜை கடுமையாக எச்சரித்ததும்தான் கடந்த வாய்தாவின் பரபரப்பு காட்சிகளாக அமைந்தன.

 

தண்டவாளத்தில் சடலமாக

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் சுவாதி. இவர்கள் இருவரும் கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.

 

நெருங்கிய நண்பர்களும்கூட. 23.6.2015ம் தேதியன்று, சுவாதியை சந்திப்பதற்காக திருச்செங்கோடு சென்ற கோகுல்ராஜை அடுத்த நாள் கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகத்தான் கைப்பற்றியது போலீஸ்.

 

கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல், அவரை திட்டமிட்டு ஆணவக்கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் கிளம்பின.

தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை

இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

 

வழக்கு நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கைதானவர்களில் ஜோதிமணி என்ற பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாகிவிட்டார். கடந்த 30.8.2018ம் தேதி முதல் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் நடந்து வருகிறது.

யுவராஜ் வகையறா தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூவும், அரசுத்தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியும் ஆஜராகி வாதாடி வருகின்றனர்.

 

கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30, 2018) நடந்த சாட்சி விசாரணையின்போது யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

 

அரசுத்தரப்பு சாட்சியான, சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த நெசவுத்தொழிலாளி குமார் (சாட்சி எண் 23) என்பவரை சாட்சி சொல்ல அழைத்தனர்.

 

கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட காலக்கட்டத்தில் தனது மாமனாருக்குச் சொந்தமான ஜெயசூர்யா காபி பாரில் வேலை செய்து வந்ததாகவும், அந்தக்கடையில் டீ, காபி மட்டுமின்றி பீடி, சிகரெட், சில மளிகைப் பொருள்கள், பேனா, பென்சில், மார்க்கர் உள்ளிட்ட எழுது பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக குமார் வாக்குமூலம் அளித்தார்.

 

ஒற்றை வார்த்தையில் பதில்

 

அந்தக் கடையில் பேப்பர் (காகிதம்) விற்கப்படுமா? என்று அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டதற்கு, பேப்பர் தவிர பிற எழுதுபொருள்களும் விற்கப்படும் என குமார் கூறினார்.

 

குற்றவாளி கூண்டில் நிற்பவர்களில் யாரையாவது தெரியுமா? எனக்கேட்டதற்கு, ‘யாரையுமே தெரியாது’ என கிளிப்பிள்ளைபோல் பதில் அளித்தார். இந்த வழக்கைப் பற்றி ஏதாவது தெரியுமா? என்றதற்கும் ‘தெரியாது’ என ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார்.

அவர் குற்றவாளி கூண்டில் இருக்கும் யுவராஜை பார்த்துப் பார்த்து பேசியதால், சந்தேகம் அடைந்த நீதிபதி கே.எச். இளவழகன், ‘நீங்கள் யாரைப் பார்த்தாவது பயந்துகொண்டு இப்படி சொல்கிறீர்களா?’ என்று கேட்டார். அதற்கு குமார், ‘இல்லீங்கய்யா’ என்று மிகவும் பவ்யத்துடன் கூறினார். ஆனாலும், சாட்சியம் அளித்து முடித்து, கூண்டை விட்டு இறங்கும் வரையிலும் அவர் இறுக்கமாகவே காணப்பட்டார்.

 

இந்நிலையில் குற்றவாளிகள் கூண்டில் நின்று கொண்டிருந்த முதல் குற்றவாளியான யுவராஜ், அரசுத்தரப்பு சாட்சி குமாரை பார்த்து தலையசைத்தார்.

 

போட்டுக்காட்டட்டுமா?
நீதிபதி கே.எச்.இளவழகன்

அதை நுட்பமாகக் கவனித்துவிட்ட நீதிபதி கே.எச்.இளவழகன், ”இப்படி சாட்சியைப் பார்த்து தலையை எல்லாம் ஆட்டி மிரட்டிக்கொண்டிருந்தால் கடுமையாக ஆக்ஷன் எடுக்க வேண்டியது வரும். நீங்கள் அங்கிருந்து கொண்டு என்னென்ன செய்கிறீர்கள் என்பதெல்லாம் ரெக்கார்டு ஆகிக்கொண்டுதான் இருக்கிறது.

 

எனக்கு மேலே பாருங்க…. கேமரா இருக்குதா? (அப்போது யுவராஜ், கேமரா இருக்கிறது என்பதைச் சொல்லும் விதமாக தலையசைத்தார்) நீங்கள் சாட்சியைப் பார்த்து தலையை ஆட்டியதெல்லாம் போட்டுக்காட்டட்டுமா?” என கடுமையாக எச்சரித்தார்.

 

அதற்கு யுவராஜ், ‘சரிங்கய்யா… அப்படி எதுவும் பண்ணமாட்டேங்கய்யா…’ என அதையும் தலையை இருபுறமும் ஆட்டியபடி பதில் சொன்னார். இதனால் விசாரணை அரங்கத்தில் ஓரிரு நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

 

கிங் சைஸ் சிகரெட்

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, ‘உங்கள் கடைக்கு எதிரி அருண் என்பவர் அடிக்கடி வந்து சிகரெட் வாங்குவதன் மூலம் அவர் உங்களுக்கு அறிமுகம் ஆனார்?,’; அருண் உங்கள் கடைக்கு எப்போது வந்தாலும் கிங் சைஸ் எனப்படும் சிகரெட்டுதான் வாங்கிச்செல்வார்?; 23.6.2015ம் தேதியன்று உங்கள் கடைக்கு வந்த அருண், இரண்டு பேனா தருமாறு கேட்டார்.

 

அதற்கு நீங்கள் எப்போதும் கிங் சைஸ் சிகரெட்டுதானே வாங்குவீங்க? இப்போது என்ன இரண்டு பேனா கேட்கிறீர்கள்? எனக்கேட்டுவிட்டு அவரிடம் இரண்டு பேனா கொடுத்தீர்கள். அதற்கு அவரிடம் இருந்து பத்து ரூபாய் பணமும் பெற்றுக்கொண்டீர்கள்? ஆகிய கேள்விகள் கேட்கப்பட்டன. அவை அனைத்திற்குமே குமார், ‘தெரியாது’ என்றே பதில் அளித்தார்.

 

எதிரிகளுக்கு பயந்தும், அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலும் நீங்கள் இப்போது பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டார். அதற்கு குமார், இல்லை என்று பதில் அளித்தார். குமார், பிறழ் சாட்சியம் அளித்ததால் அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவில்லை.

 

பிறழ் சாட்சியம்

 

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு அரசுத்தரப்பு சாட்சியான கவுரிசங்கர் (சாட்சி எண் 27) சாட்சியம் சொல்ல கூண்டில் ஏற்றப்பட்டார். இவரை சிபிசிஐடி போலீசார் மிக முக்கிய சாட்சியாக கருதினர். யுவராஜ் தனது காருக்கு போலி பதிவு எண் ஸ்டிக்கரை இவர் பணியாற்றி வந்த கடையில்தான் ஒட்டப்பட்டது என்றும், அந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொடுத்தது கவுரிசங்கர்தான் என்பதால் அவரை முக்கிய சாட்சியாக கருதினர்.

 

ஆனால் உணவு இடைவேளையின்போதே அவர், நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த யுவராஜ் ஆதரவாளர்ளுடன் சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். அதனால் அவர் பிறழ் சாட்சியம் ஆகிவிடுவாரோ என கலக்கம் அடைந்தனர்.

 

இந்த நிலையில்தான் சாட்சி கூண்டில் ஏறிய கவுரிசங்கரிடம், குற்றவாளி கூண்டில் நிற்கும் யுவராஜ் உள்ளிட்ட 15 பேரையும் காண்பித்து அவர்களைத் தெரியுமா? என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டதற்கு, யாரையும் தெரியாது என கவுரிசங்கர் தடாலடியாக பிறழ் சாட்சியம் அளித்தார்.

 

ஞாபகம் இல்லை

 

”23.6.2015ம் தேதியன்று யுவராஜ், நீங்கள் வேலை செய்து வந்த ரமேஷ் ஸ்டிக்கர்ஸ் கடையின் பின்பக்கமாக எம்எம் 540 என்ற எண்ணுள்ள ஜீப்பை நிறுத்திவிட்டு, அதில் ஸ்டிக்கர் ஒட்டச்சொன்னாரா?,” என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டதற்கு, ‘எனக்கு ஞாபகம் இல்லை’ என்று கவுரிசங்கர் பதில் அளித்தார்.

 

”யுவராஜ் தனது ஆர்சி புத்தகத்தை மறதியாக வீட்டிலேயே வைத்துவிட்டேன். நாளை எடுத்து வந்து தருகிறேன். இப்போது, டிஎன் 30 ஏஎக்ஸ் 6169 என்ற பதிவெண் ஸ்டிக்கரை ஒட்டச்சொன்னாரா?,” என்றதற்கு, ”ஆர்சி புத்தகம் இல்லாமல் பதிவெண் ஸ்டிக்கர் ஒட்டமாட்டோம்,” என்றார் கவுரிசங்கர்.

கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிஆர்பிசி பிரிவு 164ன் கீழ் நாமக்கல் ஜேஎம்-2 நீதிமன்றத்தில் கவுரிசங்கர் வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த வாக்குமூலத்தில் அவர் கையெழுத்திட்டிருந்தார். அதைக் காண்பித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், சாட்சி குறியீடு செய்யும்படி நீதிபதியிடம் கோரினார்.

 

யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, வாக்குமூலத்தில் உள்ள சாட்சியின் கையெழுத்தை குறியீடு செய்ய முடியாது என கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார். அதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர் சிஆர்பிசி பிரிவு 80ன் கீழ் கையெழுத்தை குறியீடு செய்ய முடியும் என்றார்.

 

புத்தகத்தை புரட்டிப்பார்த்த நீதிபதி

 

இருதரப்பு கருத்துகளையும் கவனித்துக்கொண்டிருந்த நீதிபதி கே.எச். இளவழகன், தனக்கும் அது தொடர்பாக சந்தேகம் இருக்கிறது என்று கூறினார். மேலும் தனது மேஜை மீது வைத்திருந்த இந்திய சாட்சிகள் சட்டம் தொடர்பான புத்தகத்தை எடுத்து புரட்டிப்பார்த்த நீதிபதி, கையெழுத்தை குறியீடு செய்ய முடியாது எனக்கூறினார். இதனால் விசாரணை மன்றம் ஐந்து நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

 

ஏற்கனவே போலீசார் விசாரணையின்போது உண்மையைக் கூறிவிட்டு, இப்போது எதிரிகளுக்கு பயந்தும், அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலும் பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள் என்ற கூற்றையும் கவுரிசங்கர் தவறு என்று மறுத்தார்.

 

இதைத்தொடர்ந்து கவுரிசங்கரிடம், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அவர், நீங்கள் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவரா? எனக்கேட்டதற்கு, ‘ஆமாம்’ என்று பதில் அளித்தார்.

 

ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த தலைவர்கள் கூறியதன்பேரில் போலீசார் உங்களை சாட்சியாகப் போட்டார்களா? என்று கேட்டதற்கும், கவுரிசங்கர் ‘ஆமாம்’ என்று பதில் சொன்னார். போலீசார் உங்களை அழைத்து எப்படி சாட்சி சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததன்பேரில்தான் முன்பு சாட்சியம் அளித்தீர்கள் என்றதற்கும் அவர் ‘ஆமாம்’ என்று கூறினார்.

 

ஒரே நாளில்  5 பேர் பிறழ் சாட்சியம்

 

கடந்த 30ம் தேதி, மொத்தம் பத்து பேர் சாட்சியம் அளித்தனர். அதில் முக்கிய சாட்சியான கவுரிசங்கர் உள்பட 5 பேர் ஒரே நாளில் பிறழ் சாட்சியம் அளித்தனர். இதனால், சிபிசிஐடி போலீஸ் தரப்பு கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் 9.11.2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.எச். இளவழகன் உத்தரவிட்டார்.

 

ஒரு பாடம் புகட்டணும்

 

தேவூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வரும் பாஷ்யம், அரசுத்தரப்பில் கடைசி சாட்சியாக அழைக்கப்பட்டார். கோகுல்ராஜ் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் 23.6.2015ம் தேதியன்று சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழித்தடத்தில் நின்று கொண்டிருந்ததாகவும். அப்போது டாடா சபாரி காரில் வந்த யுவராஜ், அங்கே நின்று கொண்டிருந்த தன் தம்பி தங்கதுரையிடம் பேசியதாகவும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

 

அப்போது யுவராஜ், ‘நம்ம ஜாதி பிள்ளைக்கிட்ட கீழ் ஜாதி பையன் ஒருத்தன் வம்பு பண்ணிக்கிட்டு இருக்கான். கீழ் சாதிக்கார மக்களுக்கு ஒரு பாடம் புகட்டணும்,’ என்று தங்கதுரையிடம் சொன்னதாகவும், பிறகு தன்னுடைய செல்போனை வைத்திருக்கும்படி தங்கதுரையிடம் கொடுத்ததாகவும் சாட்சியம் அளித்தார்.

 

நீதிபதி தடாலடி

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, யுவராஜ் என்ன காரில் வந்தார் என்பதை அடையாளம் காட்ட முடியுமா? என்றார். அதற்கு பாஷ்யம், காட்ட முடியும் என்றார். ஆனால் அன்று காரை போலீசார் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரவில்லை.

 

இதையடுத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன், வீடியோவைப் பார்த்து காரை அடையாளம் சொல்கிறீர்களா? என்றார். அதற்கு எதிர்தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜூ, அது தேவை இல்லாதது என்று ஆட்சேபித்தார். அதற்கு நீதிபதி, அது தேவையா இல்லையா என்பதை அப்புறம் பார்க்கலாம் என்று தடாலடியாகச் சொன்னார்.

 

இன்று என்ன சொல்லப்போகிறார் பாஷ்யம்?

 

மேலும் அவர், கார் கொண்டு வரச்சொல்லட்டுமா? அதுவரை உங்களுக்கு அவகாசம் இருக்கிறதா? என்று எதிர்தரப்பு வழக்கறிஞர்களைப் பார்த்து கேட்டார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

 

மேலும், அடுத்த வாய்தாவின்போது நேரடியாக நீங்கள் குறுக்கு விசாரணையைத் தொடங்கலாம் என்று கூறினார். அதன்பிறகே அவர், நவம்பர் 9ம் தேதிக்கு (இன்று, வெள்ளிக்கிழமை) வழக்கை ஒத்தி வைத்தார்.

 

சிறப்பு எஸ்ஐ பாஷ்யம் இன்று என்ன சொல்லப்போகிறார்? என்பதை அரசுத்தரப்பினரும், அவரை எப்படி வீழ்த்தலாம் என்ற முஸ்தீபுகளுடன் எதிர்தரப்பினரும் களத்தில் இறங்குவதால் இன்றைய குறுக்கு விசாரணை, பரபரப்பு திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கலாம் எனத்தெரிகிறது.

 

– செங்கழுநீர்.