Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் வழக்கு: எதிர்தரப்பு கிடுக்கிப்பிடி; அரசுத்தரப்பு சாட்சிகள் திணறல்! #Gokulraj #day7

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் அரசுத்தரப்பு சாட்சிகள் சாட்சியம் அளிக்கும்போது தடுமாறினர். சில சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதியன்று மாலை நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

ஆணவக்கொலை:

திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருங்கிப் பழகி வந்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல் அவரை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என அப்போது தகவல்கள் பரவின.

 

இந்த வழக்கில் சந்தேகத்தின்பேரில், சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர்.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.

 

கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டிருந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான ஜோதிமணி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமுதரசு தலைமறைவாகிவிட்டார். இந்த இருவரையும் தவிர மற்ற 15 பேரும் தொடர்ந்து சாட்சி விசாரணையின்போது ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 

அரசுத்தரப்பு சாட்சி 11 – புஷ்பலதா:

 

முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் கல்லூரித் தோழி சுவாதி, அவருடைய தாயார் செல்வி ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்துள்ள நிலையில் அக்டோபர் 1, 2018ம் தேதி இதர சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பகல் 12.20 மணியளவில் விசாரணை தொடங்கியது.

 

முதல் சாட்சியாக, கோகுல்ராஜ் கொலைச் சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த புஷ்பலதா என்பவர் அழைக்கப்பட்டார். கோகுல்ராஜை கடத்திச் செல்லப்பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டிஎன் 41 எஸ் 1564 என்ற வெள்ளை நிற டாடா சஃபாரி கார் யார் பெயரில் பதிவாகி இருக்கிறது? என்று அரசுத்ததரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டார்.

 

அதற்கு அவர், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் யுவராஜ் பெயரில் பதிவாகவில்லை. அந்த வாகனம் திரிசூல் டிம்பர் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று சான்று வழங்கியதாக கூறினார். இந்த வாகனத்தின் பதிவு சான்றிதழின் நகல் அரசுத்தரப்பில் 12வது சான்று ஆவணமாக குறியீடு செய்யப்பட்டு உள்ளது.

சாட்சி 12 – வடிவேல், அச்சக உரிமையாளர்:

 

அவரை தொடர்ந்து அச்சக உரிமையாளர் வடிவேல், சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டார். யுவராஜ் தரப்பினர் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக வடிவேல் நடத்தி வந்த அச்சகத்தில்தான் ஒரு துண்டறிக்கையை அச்சிட்டு சங்ககிரி பகுதிகளில் ஒட்டியிருந்தனர். இதை அரசுத்தரப்பு 13வது சான்றாவணமாக சேர்த்துள்ளது.

 

அந்த நோட்டீஸை வடிவேலிடம் காட்டி, உங்கள் அச்சகத்தில்தானே அச்சிடப்பட்டது என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டார். அதற்கு வடிவேல், அந்த நோட்டீஸை யார் அச்சடித்தார்கள்? எங்கு வைத்து அச்சிட்டார்கள்? என்று எனக்குத் தெரியாது என்று பதில் அளித்தார்.

 

குற்றவாளி கூண்டில் இருக்கும் யுவராஜ் உள்ளிட்ட 15 பேரையும் காட்டி இவர்களை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கும், அந்த 15 பேரையும் தனக்குத் தெரியாது என வடிவேல் பதில் அளித்தார்.

வழக்கறிஞர் கருணாநிதி

மேலும், 4ம் எதிரி சங்கர், 6ம் எதிரி செல்வகுமார் ஆகியோர் கூறியதன்பேரில் நீங்கள்தான் அந்த நோட்டீஸை அச்சிட்டீர்கள் என்று கேட்டற்கும் அவர் இல்லை என்று மறுத்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களை காப்பாற்றும் நோக்கில் நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்கிறீர்கள் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் சொன்னதற்கும், அப்படி இல்லை என்று பதில் அளித்தார்.

 

சாட்சி 13 – சிரஞ்சீவி, பருத்தி குடோன் உரிமையாளர்:

 

அரசுத்தரப்பில் 13வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள சிரஞ்சீவிக்குச் சொந்தமாக கொங்கணாபுரத்தில் உள்ள பருத்தி குடோனில்தான் அப்போது யுவராஜ் தரப்பினர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதற்காக அச்சிடப்பட்ட துண்டறிக்கையிலும்கூட அந்த குடோனில்தான் கூட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

பல்டி சாட்சியம்:

 

அக்டோபர் 1ம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தபோது, தன்னிடம் இருப்பது பருத்தி குடோனே அல்ல. அந்த இடம் பருத்தி அரைக்கும் இடம். அந்த இடத்தில் போய் யாராவது கூட்டம் நடத்த வாடகைக்கு விட முடியுமா? நான் யாருக்கும் வாடகைக்கு விடவில்லை என்று பல்டி சாட்சியம் அளித்தார்.

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி யுவராஜ் தரப்பு வெளியிட்டிருந்த துண்டறிக்கையில் உங்களுக்குச் சொந்தமான பருத்தி கிடங்கில்தான் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கும் இடமாக குறிப்பிடப்பட்டு உள்ளதே என்று கேட்டார்.

 

அதற்கு சிரஞ்சீவி, துண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் இருக்கும் இடம் எனக்குச் சொந்தமான பருத்தி அரைக்கும் இடம்தான். அந்த இடம் எப்படி துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது என்பது எனக்குத் தெரியாது என பதில் அளித்தார்.

 

எதிரிகள் சங்கர், செல்வகுமார் ஆகியோர் உங்கள் பருத்தி குடோனை எடுத்து, அதில் 7.6.2015ம் தேதியன்று தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினர்.

 

இதற்காக அன்று காலை 8 மணிக்கு உங்களிடம் இருந்து குடோன் சாவியை வாங்கிய அவர்கள், கூட்டம் முடிந்த பிறகு மதியம் 2 மணியளவில் உங்களிடம் சாவியை ஒப்படைத்தனர் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டார். அதற்கும் வடிவேல் இல்லை என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்தார்.

 

இதையடுத்து, சங்கர், செல்வகுமார் ஆகியோரின் புகைப்படங்களைக் காட்டி, அந்தப் படங்களின் மீது இருந்த கையெழுத்தைக் காட்டி, எதிரிகளை நீங்கள் அடையாளம் காட்டியதற்கு ஆதாரமாகத்தான் சிபிசிஐடி போலீசார் உங்களிடம் இந்தக் கையெழுத்தப் பெற்றனர் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டார். அதற்கும் வடிவேல், இல்லை என்றார்.

 

பொய் சாட்சி:

 

குற்றவாளி கூண்டில் இருக்கும் யுவராஜ் உள்ளிட்ட 15 பேரையும் காட்டி, அவர்களை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கும் அவர் தெரியாது என்று பதில் அளித்தார்.

 

பின்னர் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, ”யுவராஜூம் நீங்களும் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் முன்பு சொன்ன சாட்சியத்தை மறைத்து இப்போது பொய் சாட்சி சொல்கிறீர்கள் என நான் சொல்கிறேன்” என்றார்.

 

அதற்கு, நாங்கள் எல்லோரும் மனசாட்சியுடன்தான் உண்மையை சொல்கிறோம் என்று சிரஞ்சீவி சொன்னார். எல்லோரும் என்று சொல்லும்போது கையை உயர்த்தி, எல்லோரும் என கையை வளைத்துச் சொன்னார். அதற்கு கருணாநிதி, எல்லோரும் என்பதை விடுங்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கேட்டார். அதற்கு சிரஞ்சீவி, தவறு என்று பதில் அளித்தார்.

 

சாட்சி 14 – நவீன்ராஜ், யுவராஜ் தோட்டத்தின் பக்கத்து நிலத்துக்காரர்:

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, குற்றவாளி கூண்டில் உள்ளவர்களைக் காட்டி அங்கே இருப்பவர்களை உங்களுக்கு முன்பே தெரியுமா எனக்கேட்டார். அதற்கு நவீன்ராஜ், முதலாவது எதிரி யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை (7ம் எதிரி) ஆகியோரை தெரியும் என்று பதில் அளித்தார்.

 

அப்போது அவரிடம் யுவராஜ் பற்றியும், இந்த என்ன வழக்கு என்பது பற்றியும் உங்களுக்கு ஏதாவது தெரியுமா? என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டார்.

 

அதற்கு நவீன்ராஜ், ”யுவராஜ் மீது நான் ஒரு காசோலை வழக்கு போட்டேன். அவர் மீதும், அவருடைய தம்பி மீதும் ஒரு கொலை வழக்கு உள்ளது. அந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் என்னிடம் விசாரித்தபோது, எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டேன்,” என்றார்.

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர்: கடந்த 23.6.2015ம் தேதியன்று மாலை 6.30 மணிக்கு சேலம் சங்ககிரி நெடுஞ்சாலையில் உள்ள டிவிஎஸ் மேம்பாலம் அருகே நீங்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, யுவராஜ் அவருடைய எம்எம் 540 ஜீப்பை நிறுத்தினார். அவருடைய டிஎன் 41 எஸ் 1564 என்ற டாடா சஃபாரி காரை ஹைமாஸ்ட் லைட் அருகில் நிறுத்தினார்.

 

அதில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த காரில் சிவப்பு, பச்சை நிற கொடி கட்டப்பட்டு இருந்தது. அதில் ஒல்லியாக நீல நிற சட்டை போட்டிருந்த ஒரு நபரை காரில் இருந்து ஜீப்பின் பின்பக்கத்தில் ஏற்றினார்கள் என்ற விவரங்களை போலீசார் உங்களிடம் விசாரித்தபோது கூறியுள்ளீர்கள்….?

 

நவீன்ராஜ்: இல்லை.

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர்: நீங்களும் எதிரிகளும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை காப்பாற்றும் நோக்கில் பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள்…

 

நவீன்ராஜ்: தவறு.

 

அரசுத்தரப்பு: டிஎன் 41 எஸ் 1564 டாடா சஃபாரி கார் யுவராஜிக்கு சொந்தமானதுதானே?

 

நவீன்ராஜ்: தெரியாது.

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர்: யுவராஜீக்கு நீங்கள் பத்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்து இருந்தீர்கள். அவர் கொடுத்த காசோலை செல்லாததால் அதன் மீது வழக்கு தொடர்ந்தீர்கள். அந்த வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததா?

 

நவீன்ராஜ்: ஆமாம்.

 

(அரசுத்தரப்பு வழக்கறிஞர் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால் நீதிபதி அந்த ஆட்சேபனையை ஏற்கவில்லை)

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர்: இப்போது யுவராஜ் தரப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தால்தான் காசோலை வழக்கில் அவர்கள் உங்களுக்கு பணத்தை திருப்பித் தருவார்கள் என்பதால்தான் அவர்களுக்கு ஆதரவாக பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள்…

 

நவீன்ராஜ்: தவறு.

 

(இப்போது மீண்டும் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. குறு¢கீடு செய்து, காசோலை வழக்கை தொடர்ந்தது நவீன்ராஜின் அண்ணன்தான். அவருக்குதான் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது என்றார். அந்த கருத்தும் பதிவு செய்யப்பட்டது.)

 

இதையடுத்து மதியம் 1.15 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. பின்னர் 2.20 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

 

சாட்சி 15 – கார்த்திக், ரயில்வே கேட் கீப்பர்:

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர்: இந்த வழக்கைப் பற்றி உங்களு¢கு என்ன தெரியுமோ அதை சொல்லலாம்…

 

கார்த்திக்: நான் ஜூன் 2015ல் இருந்து ஆலம்பாளையம் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறேன். ஆலம்பாளையம் ரயில்வே கேட் எண்: எல்.சி. 120ஏ. கடந்த 24.6.2015ம் தேதியன்று, ரயில்வே துறை சார்பில் எனக்கு அந்தப் பகுதியில் முள் புதர்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை ஒதுக்கி இருந்தனர்.

 

அப்போது குப்பை பொறுக்கும் நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சடலம் கிடப்பதாக என்னிடம் சொன்னார். அப்போது கீமேன் ராஜன் என்பவர் நான் இருக்கும் இடத்திற்கு வந்தார். நானும் கீமேன் ராஜனும் ஆனங்கூரில் இருந்து காவேரி செல்லும் வழியில் சுமார் ஒரு கிமீ. தூரம் நடந்து சென்றோம். அங்கே ரயில் தண்டவாளத்தில் சடலம் கிடந்தது.

 

சடலம் கிடந்த இடம் 383 / 11–&13 ரயில்வே அப்லைன். குப்புற படுத்த நிலையில் சடலம் கிடந்தது. முகம் நசுங்கி, மாஸ்க் போட்டதுபோல் இருந்தது. சடலத்தின் அருகே ஒரு ஜோடி செருப்பு கிடந்தது. புளூ கலர் பேண்ட், கத்திரி பூ நிறத்தில் சட்டையும் இறந்து கிடந்தவர் அணிந்திருந்தார். கிரே கலர் பணியனும் அணிந்திருந்தார். அதன்பிறகு நான் முள் வெட்டும் பணிக்கு வந்துவிட்டேன். ராஜன் புகார் கொடுப்பதற்காக ஈரோடு ரயில்வே போலீஸ் நிலையத்திற்குச் சென்றுவிட்டார்.

 

இவ்வாறு ரயில்வே கேட் கீப்பர் கார்த்திக் கூறினார். சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பேண்ட், சட்டை, பணியன் ஆகிய உடைகளை கார்த்திக்கிடம் காட்டி அடையாளம் காட்டச் சொல்லப்பட்டது. அவற்றை அவரும் அடையாளம் காட்டினார்.

 

இதையடுத்து அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார்.

 

ஜிகே: சடலத்தைப் பார்த்ததாகச் சொல்லப்பட்ட நாளில் நீங்கள் பணியில் இருந்தீர்கள் என்றால் அதற்கான மஸ்டர் ரோலில் கையெழுத்து இருக்கும்தானே?

 

கார்த்திக்: ஆமாம்.

 

ஜிகே: உங்களுக்கு அன்று என்ன பணி ஒதுக்கப்பட்ட விவரமும் அதில் இருக்கும்தானே?

 

கார்த்திக்: மஸ்டர் ரோலில் பணி ஒதுக்கீடு விவரம் இருக்காது. அந்த விவரம் ஜே.இ. முருகனின் டைரியில்தான் இருக்கும்.

 

ஜிகே: கோகுல்ராஜின் ரத்தக்கறை படிந்த ஜல்லிக்கற்கள் இவைதானா? (நீதிமன்றத்தில் ரத்தம் தோய்ந்த சில ஜல்லி கற்கள் காட்டப்பட்டன)

 

கார்த்திக்: ஆமாம்.

 

ஜிகே: இந்த மாதிரியான ஜல்லி கற்கள் ரயில் தண்டவாளத்தில் மட்டுமின்றி வீடு கட்டும்போதும் பயன்படுத்தப்படும் அல்லவா?

 

கார்த்திக்: ஆமாம். பேஸ்மென்ட் போடுவதற்காக பயன்படுத்துவார்கள்.

 

ஜிகே: மேற்படி தேதியில் நீங்கள் ரயில் தண்டவாளத்தில் வேலை பார்க்கவில்லை. சடலத்தையும் பார்க்கவில்லை. நிர்ப்பந்தத்தின்பேரில் இவ்வாறு சாட்சியம் அளித்திருக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன்…

 

கார்த்திக்: தவறு

 

ஜிகே: சாட்சியம் வேண்டும் என்பதால் காவல்துறையினர் சொல்லிக்கொடுத்து இவ்வாறு சாட்சியம் அளிக்கிறீர்கள்…

 

கார்த்திக்: தவறு

 

சாட்சி 16 – உஷா பிரியா, கிராம நிர்வாக அலுவலர்:

 

விஏஓ உஷாபிரியா, கடந்த 9.10.2015ம் தேதியன்று சங்ககிரி அருகே உள்ள ஐவேலி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அன்று, சிபிசிஐடி போலீசார் யுவராஜ் வீட்டில் சோதனை செய்வதற்காக உஷாபிரியாவையும், உதவியாளர் ஆண்டிமுத்து என்பவரையும் அழைத்துச் சென்று இருந்தனர்.

 

யுவராஜ் வீட்டில் இருந்து ஒரு ஆப்பிள் ஐபோன் கைப்பற்றப்பட்டதாக உஷாபிரியா சாட்சியம் அளித்தார். அவரிடம் அந்த ஐபோனைக் காட்டி அடையாளம் காட்டுமாறு கோரப்பட்டது. அவரும் அடையாளம் காட்டினார்.

 

சாட்சி 17 – ரவீந்திரன், கிராம நிர்வாக அலுவலர்:

 

கடந்த 9.10.2015ம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்ட சங்கர் என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோரணம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ரவீந்திரன், உதவியாளர் கோபால் ஆகியோரும் சோதனை நடந்த வீட்டிற்கு போலீசார் உடன் சென்று இருந்தனர்.

 

சங்கர் வீட்டில் இருந்து கேஎஸ்ஆர் கல்லூரி டைரி, சங்கரின் டிரைவின் லைசென்ஸ், பாஸ்போர்ட் நகல், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டு, எஸ்பிஐ வங்கிக் கணக்கு புத்தகம், 5 கையடக்க சிறு டைரிகள், ஏர்செல் சிம் கார்டு, பிஎஸ்என்எல் ஈஸி செய்யும் சிம் கார்டு, சங்கரின் புகைப்படம், அவர் மைக்ரோமேக்ஸ் செல்போன் வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட 21 பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ரவீந்திரன் தங்கு தடையின்றி ஒவ்வொன்றாக பட்டியலிட்டார். இவற்றில் யுவராஜ் எழுதிய கடிதம் ஒன்றும் உள்ளதாக கூறினார்.

 

(அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே, யுவராஜ் எழுதிய கடிதம் என்றதற்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், அதை அரசு சான்று ஆவணமாக குறியீடு செய்யக்கூடாது என்றும் கூறினார். அந்த ஆட்சேபனையை நீதிபதி கே.ஹெச். இளவழகன் நிராகரித்ததுடன், அதற்கு தீர்ப்பு வழங்கும்போது ஆட்சேபனைக்கு பதில் அளிக்கப்படும் என்றார்).

 

இவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே குறுக்கு விசாரணை நடத்தியபோது கொஞ்சம் கெடுபிடி காட்டினார். அப்போது சங்கர் வீட்டில் சோதனையின்போது கைப்பற்றிய பொருள்களை, அதன்பின்பு இன்றுதான் நீதிமன்றத்தில் வைத்து பார்க்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு விஏஓ ரவீந்திரன் ஆமாம் என்று பதில் அளித்தார்.

 

மிக கவனமாக ரவீந்திரன் சாட்சியம் அளித்தாலும், எதிர்தரப்பு வழக்கறிஞரின் மற்றொரு கேள்விக்கு இடறலாக பதில் அளித்தார்.

 

வழக்கறிஞர் ஜிகே, ‘சிபிசிஐடி போலீசார் விசாரணையின்போது மேற்படி சான்று பொருள்கள் அங்கு இருந்ததா?,’ என்று கேட்டதற்கும் ரவீந்திரன் ஆமாம் என்று பதில் அளித்து சற்றே முன்னுக்குப்பின் முரணாக சொன்னார்.

 

சாட்சி 18 – பூபதிராஜன், புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர்:

 

கடந்த 24.6.2015ம் தேதியன்று நானும், கிராம நிர்வாக அலுவலர் குருதேவன் என்பவரும் கிழக்கு தொட்டிபாளையம் குக்கிராமத்திற்கு அலுவலக பணிக்காகச் சென்றிருந்தபோது, ரயில்வே தண்டவாளத்தில் ஒரு பிரேதம் கிடப்பதாக ஒரு பெரியவர் எங்களிடம் தகவல் சொன்னார். பிரேதமானது குப்புற படுத்த நிலையில் முண்டம் மட்டும் தனியாக கிடந்ததாகவும், இரண்டு அடி தூரத்தில் தலை முகமூடி போட்டதுபோல் கிடந்ததாகவும் கூறினார்.

 

அந்த பிரேதத்தைப் புரட்டி பார்த்தபோது, கேஎஸ்ஆர் கல்லூரி அடையாள அட்டை டேக்குடன் இருந்தது., தற்கொலை கடிதம் இருந்தது என்று கோகுல்ராஜின் சடலம் குறித்து சாட்சியம் அளித்தார். அவரிடமும் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே குறுக்கு விசாரணை நடத்தினார்.

 

மறு அழைப்பு:

 

காலையில் சாட்சியம் அளித்த அச்சக உரிமையாளர் வடிவேலிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மேலும் சில கேள்விகள் கேட்க வேண்டியிருந்ததால் அவர் மீண்டும் அழைக்கப்பட்டார். அவரிடம் யுவராஜ் தரப்பு வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு நோட்டீஸைக் காட்டி, அதில் குறிப்பிட்டிருப்பது உங்கள் கையெழுத்தா? என்று கேட்டார். அதற்கு இல்லை என வடிவேல் கூறினார்.

 

அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டது உங்கள் செல்போன் நம்பர்தானா? என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்று பதில் சொன்ன வடிவேல், தான் அந்த நோட்டீஸை அச்சடித்து கொடுக்கவில்லை என்று மீண்டும் கூறினார்.

 

அத்துடன் சாட்சி விசாரணை முடிந்தது. அப்போது மாலை 5.30 மணி. இதையடுத்து சாட்சிகள் மீதான அடுத்தக்கட்ட விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி கே.ஹெச்.இளவழகன் கூறினார்.

 

அக்டோபர் 1ம் தேதியன்று, ஒரே நாளில் 8 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. அரசுத்தரப்பில் அரசு ஊழியர்களாக உள்ளவர்கள் தவிர மற்ற சாட்சிகளான சிரஞ்சீவி, வடிவேல், நவீன்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து பல்டி சாட்சியம் அளித்ததால், சிபிசிஐடி போலீசார் கடும் அதிருப்தி அடைந்தனர்.

 

கிடுக்கிப்பிடி குறுக்கு விசாரணை:
வழக்கறிஞர் ஜிகே

விஏஓ உஷாபிரியாவிடம், யுவராஜ் வீட்டில் இருந்து ஒரே ஒரு ஆப்பிள் ஐபோன் மட்டும்தான் சோதனையின்போது கைப்பற்றப்பட்டதா என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே கேள்வி எழுப்பினார். அதற்கு ஆமாம் என்று பதில் அளித்த உஷாபிரியா, சார்ஜரும்தானே கைப்பற்றப்பட்டது. அதைப்பற்றி பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லையே ஏன்? என்றதற்கு பதில் சொல்ல தடுமாறினார்.

 

சான்றாவணங்கள் குறித்த பதிவேட்டில் உஷாபிரியாவின் கையெழுத்து, கார்பன் காப்பியில் தெளிவில்லாமல் இருப்பதாக ஜிகே சொல்ல, அதற்கு உஷாபிரியா, அந்தக் கையெழுத்தும், அதில் உள்ள விவரங்களும் எனக்குத் தெளிவாக தெரிகிறது என்றார்.

 

அதற்கு ஜிகே, உங்களுக்குத் தெரிந்தால் போதாது. எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்றபோது, உஷாபிரியாவின் முகத்திற்கு நெருக்கமாக தனது கையை நீட்டியபடி ஆவேசமாக பேசினார். அப்போது உஷாபிரியாவும் பதில் சொல்ல சற்றே திணறினார்.

 

மற்றொரு அரசுத்தரப்பு சாட்சியான விஏஓ ரவீந்திரன் மிகுந்த ஜாக்கிரதையாக சாட்சியம் அளித்தாலும், ஒரு கேள்வியில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அந்த விவரம், மேலே குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ‘அவுட்!’:
இன்ஸ்பெக்டர் பிருந்தா

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த ஆகஸ்ட் 30, 2018ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அரசுத்தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக கருணாநிதி நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

அதற்கு முன்னதாக இந்த வழக்கை மற்றொரு வழக்கறிஞர் பத்து நாள்கள் விசாரித்து வந்தார். என்ன காரணத்தாலோ அந்த வழக்கறிஞர் கழற்றிவிடபட்டு கருணாநிதி நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்த வழக்கு குறித்த விவரங்களை விளக்கி, சாட்சி விசாரணையின்போதும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பிருந்தா.

 

அவரும் இந்த வழக்கில் அரசுத்தரப்பில் ஒரு சாட்சியாக உள்ளார். இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதியன்று, திடீரென்று எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே, சாட்சி விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் பிருந்தா நீதிமன்ற விசாரணை அரங்கத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், அது விசாரணையை பாதிக்கும் என்றும் ஆட்சேபம் தெரிவித்தார்.

 

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கே.ஹெச். இளவழகன், இன்ஸ்பெக்டர் பிருந்தாவை விசாரணை அரங்கத்தைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவு, அரசுத்தரப்புக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

– பேனாக்காரன்.

 

இந்த வழக்கின் முந்தைய சாட்சி விசாரணைகள் செய்திகளை படிக்க கீழே உள்ளவற்றை சொடுக்கவும்…

 

#Day1  #Day2   #Day3   #Day4   #Day5   #Day6    #Day6   #Day7