வீடுகளில் பயன்படுத்தப்படும்
14.2 கிலோ எடை கொண்ட
மானியமில்லா எல்பிஜி சிலிண்டர்
விலை, நடப்பு மாதத்தில் மூன்றாவது
முறையாக ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் சேலத்தில், நடப்பு மாதத்தில்
காஸ் சிலிண்டர் விலை 803ல்
இருந்து 828 ரூபாயாக
ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில்
நிலவும் கச்சா எண்ணெய் விலை,
டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின் மதிப்பு, இந்தியாவில் காஸ்
சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன்
உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில்
மாதந்தோறும் காஸ் சிலிண்டர்
விலையை எண்ணெய் நிறுவனங்களின்
கூட்டமைப்பு நிர்ணயம்
செய்து வருகிறது.
அதன்படி,
ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில்,
அதற்கு அடுத்த மாதத்திற்கான
புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது
நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக
இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும்
மேற்பட்ட முறை காஸ் சிலிண்டர்
விலையை மறு நிர்ணயம் செய்யும்
நிலை உருவாகி உள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும்
14.2 கிலோ எடை கொண்ட
மானியமல்லா எல்பிஜி சிலிண்டர்
விலை நடப்பு பிப். மாதத்திற்கு
வழக்கமான நடைமுறையை மீறி
4ம் தேதியன்று நிர்ணயம் செய்யப்பட்டது.
அன்று 25 ரூபாய் உயர்த்தி
அறிவிக்கப்பட்டது. அதனால்
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்
விலை 710ல் இருந்து 735 ரூபாயாகவும்,
சேலத்தில் 728ல் இருந்து 753 ரூபாயாகவும்
அதிகரித்தது. டெல்லி மற்றும் மும்பை
நகரங்களில் இதன் விலை 719 ஆகவும்,
கொல்கத்தாவில் 745.50 ஆகவும்
நிர்ணயிக்கப்பட்டது.
அப்பாடா…
இத்துடன் விலையேற்றம்
முடிந்து போனது என்று நடுத்தர
வர்க்கத்தினர் நிம்மதி பெருமூச்சு
விட்டனர். ஆனால், திடீரென்று
பிப். 15ம் தேதி காஸ் சிலிண்டர்
விலை மேலும் 50 ரூபாய்
உயர்த்தப்பட்டது. இதனால்
சேலத்தில் எல்பிஜி சிலிண்டர்
விலை 753ல் இருந்து 803 ரூபாயாக
உயர்ந்தது. சென்னையில் 735ல் இருந்து
785 ரூபாயாக அதிகரித்தது.
திடீர் திடீரென்ற காஸ் சிலிண்டர்
விலையேற்றத்தால், பொதுமக்கள்
மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு மாதத்தில்
மூன்றாவது முறையாக வியாழனன்று
(பிப். 25) எல்பிஜி சிலிண்டர் விலை
மேலும் 25 ரூபாய் திடீரென்று
உயர்த்தப்பட்டது.
இந்த திடீர் விலையேற்றத்தால்
சேலத்தில் எல்பிஜி சிலிண்டர்
விலை 803ல் இருந்து 828 ரூபாயாகவும்,
டெல்லி, மும்பையில் 794 ரூபாயாகவும்,
கொல்கத்தா நகரில் 820.50
ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
அதேநேரம்,
வணிக பயன்பாடுக்கான 19 கிலோ
எடை கொண்ட வர்த்தக காஸ்
சிலிண்டர் விலையே கடந்த மாதத்தைக்
காட்டிலும் பிப்.25ம் தேதியன்று
5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
நடப்பு மாதம் பிப். 1ம் தேதி,
வர்த்த காஸ் சிலிண்டர் விலை
தடாலடியாக 191 ரூபாய் உயர்த்தப்பட்ட
நிலையில், இரண்டு தவணைகளில்
மொத்தம் 24 ரூபாய் விலை குறைத்துள்ளனர்.
மேலும், வீட்டு உபயோக
காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில்
மூன்று தவணைகளில் மொத்தம்
100 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இது, அனைத்து தரப்பு மக்களையும்
பெரிய அளவில் அதிருப்தி
அடையச் செய்துள்ளது.
காஸ் சிலிண்டருக்கான
மானியத்தொகையும் நுகர்வோரின்
வங்கி கணக்கில் முறையாகச்
செலுத்தப்படுவதில்லை என்ற
புகாரும் எழுந்துள்ளது. இந்நிலையில்,
காஸ் சிலிண்டர் விலை உயர்வு,
தேர்தல் களத்திலும் தாக்கத்தை
ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
– பேனாக்காரன்