Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: தொழிலை விட்டு வெளியேறிய 40% ஆட்டோ ஓட்டுநர்கள்! கந்து வட்டிக்காரர்களிடம் வாகனங்கள் சரண்டர்!

 

அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தால், ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சவாரியின்றி பெரும் நலிவைச் சந்தித்துள்ளனர்.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது,
திமுக ஆட்சிக்கு வந்தவுடன்
அரசு நகரப் பேருந்துகளில்
பெண்களுக்கு இலவச பயணத் திட்டம்
செயல்படுத்தப்படும் என்று
தேர்தல் அறிக்கையில் அக்கட்சி
தெரிவித்து இருந்தது.
ஆட்சிக்கு வந்த கையோடு,
அத்திட்டத்தை அமலுக்கு கொண்டு
வந்தது திமுக அரசு.

 

இதற்கு பெண்களிடம் பெரும்
வரவேற்பு கிடைத்தது. சேலத்தை அடுத்த
பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த பொன்னம்மாள்
என்ற பெண் விவசாயி, ”கீரைக்கட்டுகளை
எடுத்துக்கொண்டு தினமும்
சேலம் மார்க்கெட்டுக்கு சென்று வர
பஸ் செலவு மட்டும் தினமும்
30 ரூபாய் ஆகிவிடும்.

 

கூவிக்கூவி விற்பதால் காலையில்
சீக்கிரமாகவே பசியெடுக்கும். அதற்காக
ஏன் செலவு செய்ய வேண்டும் என்று
பட்டினியுடன் கீரையை விற்றுவிட்டு
வீட்டுக்கு வந்த பிறகுதான்
சாப்பிடுவேன்.

 

தமிழக முதல்வர் ஸ்டாலின்,
பெண்களுக்கு அரசு பஸ்களில்
இலவச பயணம் திட்டத்தை
கொண்டு வந்ததால், அதில் மீதமான
பணத்தில் தினமும் காலையில்
மார்க்கெட்டிலேயே தக்காளி சாதம்
வாங்கி சாப்பிட்டு விடுவேன்,” என்கிறார்.

 

கீரைக்கார பொன்னம்மாள் போன்ற
உழைக்கும் பெண்களின் கருத்துதான்,
இத்திட்டத்திற்கு கிடைத்த
வரவேற்பிற்கான சான்று.

 

அதேநேரம்,
ஆட்டோ தொழிலாளர்கள் போன்ற
மற்றொரு தரப்பு உழைக்கும் வர்க்கத்தின்
தலையில் இத்திட்டம், பேரிடியாக
இறங்கியிருக்கிறது என்ற குமைச்சலும்
பரவலாக கிளம்பியிருக்கிறது.

 

இது தொடர்பாக
சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்
பிரகாஷ் கூறுகையில்,
”தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா
ஆட்டோக்களுமே ஷேர் ஆட்டோக்கள்
போலதான் இயக்கப்பட்டு வருகின்றன.
காலை, மாலை வேளைகளில்
வேலைக்குச் செல்லும் பெண்களை
நம்பித்தான் ஷேர் ஆட்டோக்காரர்கள்
பிழைப்பு ஓடுகிறது.

பிரகாஷ்

இந்நிலையில்,
அரசு நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு
இலவச பயணம் திட்டத்தால்,
ஆட்டோக்களுக்கு பெண் பயணிகள்
வருகை என்பது 95 சதவீதம் குறைந்துவிட்டது.
டீசல், உதிரி பாகங்கள் விலை உயர்வு,
பராமரிப்புச் செலவு கூடியது என பல வகையில்
ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,
பெண்களுக்கு இலவச பேருந்து
பயண திட்டத்தால் மேலும்
நலிவடைந்து விட்டது.

 

கொரோனா ஊரடங்கால்
கடந்த ஒன்றரை ஆண்டாக ஆட்டோக்கள்
முழுமையாக இயக்க அனுமதிக்கப்படவில்லை.
அதிலிருந்தே மீளாத நிலையில்,
அரசின் புதிய திட்டத்தால்
ஷேர் ஆட்டோக்காரர்களின்
குடும்பங்கள் வறுமை நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளன.

 

இப்போதைய நிலையில்
சேலம் போன்ற நகரங்களில்
டீசல் செலவு, பராமரிப்பு செலவு போக
ஒரு நாளைக்கு ஒரு ஆட்டோக்காரர்
மொத்தமாக 200 ரூபாய் சம்பாதிப்பதே
குதிரைக் கொம்புதான்.

 

சேலத்தில், கொரோனா ஊரடங்குக்கு
முன்பு வரை 30 குழந்தைகளை மூன்று
நடையில் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும்
ஆட்டோக்காரர் ஒருவரால்
மாதம் 18000 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

 

ஊரடங்கால் தனியார் பள்ளிகளில்
படித்து வந்த பல குழந்தைகள்
அருகில் உள்ள அரசுப்பள்ளிகளில்
சேர்க்கப்பட்டதால், குழந்தைகளை பள்ளிக்கு
அழைத்துச் செல்வதன் மூலம் கிடைத்த
வருமானமும் பறிபோயுள்ளது.

 

அரசு நகரப் பேருந்துகளில்
பெண்களுக்கு இலவச பயணம்,
ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால்
பல ஆட்டோ ஓட்டுநர்கள் கடன் வாங்கி
பிழைப்பு நடத்தும் நிலைக்குத்
தள்ளப்பட்டு உள்ளனர். இதனால்
ஆட்டோ தொழிலை விட்டுவிட்டு
பலர் உணவகங்களில் சப்ளையராகவும்,
கட்டுமானத் தொழிலாளியாகவும்,
பெயிண்ட அடிக்கும் தொழிலுக்கும்
சென்றுவிட்டனர்.

 

அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு முற்றிலும் இலவசம் என்பதால் அதிக ஊதியம் பெறக்கூடிய அரசுப் பெண் ஊழியர்கள் கூட அரசுப் பேருந்துக்காக காத்திருந்து பயணிக்கின்றனர்.

 

பெண்களுக்கு முற்றிலும் இலவசம் ரத்து செய்வதுடன், 50 சதவீத கட்டணச் சலுகை என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதன்மூலம் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்களை மட்டுமின்றி இத்தொழிலை நம்பியிருக்கும் மெக்கானிக்குகள், உதிரிபாக கடைக்காரர்கள் குடும்பத்தினரையும் வறுமையில் இருந்து ஓரளவு மீட்க முடியும்,” என்றார்.

 

சேலம் செவ்வாய்பேட்டை ஆட்டோ ஸ்டேண்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜோதி நம்மிடம் பேசினார்.

ஜோதி

”சேலம் நகரில் மட்டும் 5 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன.
பெண்களுக்கு பேருந்துகளில் இலவச
பயணம் திட்டம் வந்ததை அடுத்து,
நாளொன்றுக்கு எல்லா செலவுகளும் போக
500 வரை சம்பாதித்து வந்த ஆட்டோ
ஓட்டுநர்கள் இப்போது 200 முதல் 300
ரூபாய்தான் சம்பாதிக்கின்றனர்.

 

இதுவும் கூட சொந்த ஆட்டோ
ஓட்டுபவர்களுக்குதான். இதுவே
தினசரி வாடகைக்கு ஆட்டா எடுத்து
ஓட்டுவோருக்கு கிடைக்கின்ற வருமானத்தில்
150 முதல் 250 ரூபாய் வரை ஆட்டோ
உரிமையாளருக்கு வாடகையாக கொடுத்து
விட வேண்டும். அவர்களின் பாடு
இன்னும் திண்டாட்டம்தான்.

 

இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். வீட்டு வாடகை, மின்கட்டணம், சாப்பாட்டு செலவுகளை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.

 

ஆட்டோக்கள் ஓட்டம் இல்லாததால்,
அதன் மீது கடன் வாங்கிய பலர்,
கடனை செலுத்த முடியாததால்
கடன் வழங்கிய நிதி நிறுவனங்களிடமே
வாகனங்களை சரண்டர் செய்துவிட்டனர்.
சேலம் மாநகரில் மட்டும் தற்போது
2000 ஆட்டோக்கள் கடன் கொடுத்த
பைனான்சியர்களின் குடோன்களில்
முடங்கிக் கிடக்கின்றன.

சேலத்தில் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் கந்து வட்டிக்காரர் ஒருவரின் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களின் ஒரு பகுதி.

எனக்குத் தெரிந்த பல ஆட்டோக்காரர்கள்
வாட்ச்மேன் ஆகவும், ஜவுளிக்கடைகளிலும்,
தறிப்பட்டறைகளிலும் வேலைக்குச்
சேர்ந்து விட்டனர். வருமானம் குறைந்து
போனதால் நானும் கூட மனைவியுடன் சேர்ந்து
பிளாட்பாரத்தில் சீம்பால்
கடை வைத்திருக்கிறேன்.

 

நகரப்பேருந்துகளில் 60 வயதுக்கு
மேற்பட்ட பெண்களுக்கு மட்டும்
இலவச பயணம் என்றும்,
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள
பெண்களுக்கு மட்டும் இலவசம் என்றோ
திட்டத்தில் மாற்றம் செய்தால்
நன்றாக இருக்கும்,” என்கிறார் ஜோதி.

 

அரசு நகரப் பேருந்தில் இலவசப் பயணம்
என்பது பெண்களை கவர்ந்த திட்டம்
என்பதைக் காட்டிலும், இன்னொரு
சமூகப்பிரச்னைக்கும் இத்திட்டம்
வித்திட்டிருப்பதாகச் சொன்னார்
வட்டாரப் போக்குவரத்து
அலுவலர் (ஆர்டிஓ) ஒருவர்.

 

”ஆண்கள் மளிகைக்கடைகள், வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று வந்த நிலையில், இதே வேலைகளை இப்போது மனைவிமார்களை செய்யும்படி கணவர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

 

அரசுப் பேருந்துகளில் டிக்கெட் இல்லை என்பதையே சாக்கிட்டு குடும்பத்தலைகளின் தலையில் மேலும் பாரத்தைச் சுமத்துகின்றனர். இதுவும் பல இடங்களில் புதுவிதமான குடைச்சலைக் கொடுத்துள்ளது.

 

அரசின் இந்த நலத்திட்டத்தால் ஷேர் ஆட்டோ தொழில் மட்டுமின்றி தனியார் நகரப் பேருந்துகள், சிற்றுந்து தொழிலையும் பெருமளவு பாதித்துள்ளது. இதனால், பல நகரப் பேருந்துகள் மறுவிற்பனை செய்வது அதிகரித்துள்ளது,” என்றார் அந்த ஆர்டிஓ.

 

”வீட்டில் இருக்கும் பெண்கள்
இப்போதெல்லாம் வீட்டு வேலைகளை
முடித்துவிட்டு, ஓய்வு நேரங்களில்
அரசுப் பேருந்துகளில் கோயில்,
நகைக்கடைகள் என ஜாலி டூர்
கிளம்பி விட்டனர். சொல்லப்போனால்
அரசுப் பேருந்துகள், பெண்களுக்கு
கோயில் தலங்களுக்கு இலவச யாத்திரை
அழைத்துப் போகும் வேலையைத்தான்
செய்கின்றன,” என்றார்
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.

 

”நகரப் பேருந்தில் ஓசி பயணம்
என்பதால் சிலர் சேலத்தில் இருந்து
அடுத்தடுத்து நகரப் பேருந்துகளைப் பிடித்து
சமயபுரம் வரை கூட சென்று வந்தததாக
தங்களிடம் சொன்னதாக,” என்கிறார்கள்
ஷேர் ஆட்டோக்காரர்கள் சிலர்.

 

இன்னொரு ஆண் பயணி ஒருவர்,
”சேலத்தில் இருந்து மேட்டூருக்கு அரசு
நகரப் பேருந்தில் சென்றிருந்தோம்.
மொத்தம் 71 பேர் பயணம் செய்த
அந்தப் பேருந்தில் 6 வயது ஆண் குழந்தை
உள்பட 3 பேர்தான் ஆண் பயணிகள்.
68 பெண்களிடம் டிக்கெட் எடுக்காத நடத்துநர்,
6 வயது ஆண் குழந்தையிடம் அரை டிக்கெட்
வாங்கியே தீர வேண்டும் என கறாராக
கேட்டு கட்டணம் வசூலித்தார்.

 

பெண்களுக்கு இலவசம் என்ற திட்டம்,
ஒரே பேருந்தில் ஆண்களை இரண்டாம்தர
குடிமக்கள் போல உணர வைக்கிறது.
வேண்டுமானால் குறிப்பிட்ட நேரங்களில்
பெண்களுக்கென தனி பேருந்துகளை
இயக்கலாம்,” என்றார்.

 

இது தொடர்பாக சிஐடியு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜனிடம் கேட்டோம்.

எஸ்.கே.தியாகராஜன்

”பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில்
இலவச பயணத் திட்டத்தை
நாம் குறை சொல்ல முடியாது.
அதேவேளையில், தமிழகம் முழுவதும் உள்ள
சுமார் 3.50 லட்சம் ஆட்டோ தொழிலாளர்களை
பாதுகாப்பதும் அரசின் முக்கிய கடமையாகும்.

 

பெண்களுக்கு இலவச பயணம்
என்பதால் ஷேர் ஆட்டோ தொழில்
முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் காக்காபாளையம் ஸ்டேண்டில்
30 ஆட்டோக்கள் ஓடுகின்றன.
அவர்கள் பவர்லூம் பட்டறைகளுக்கு
வேலைக்குச் செல்லும் பெண்களை
சவாரி ஏற்றிச்சென்று வந்தனர்.

 

இப்போது பெண்களுக்கு
பேருந்துகளில் இலவசம் என்பதால்,
அங்குள்ள ஆட்டோக்களுக்கு சவாரி
அடியோடு நின்று விட்டது.
இதுதான் மாநிலம் முழுமைக்குமான நிலைமை.
ஆட்டோ தொழிலை பாதுகாக்க
டீசல் விலையில் சலுகை அளிக்கலாம்.
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு
அரசு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்.

 

கேரளாவில் ஓலா, ஊபர் போல
மாநில அரசே ஆட்டோ, டாக்சி சேவையை
இணையவழியில் இயக்கும் திட்டத்தை
அமல்படுத்த உள்ளது. அதுபோல
தமிழக அரசும் செயல்படுத்தலாம்,”
என்றார் எஸ்.கே.தியாகராஜன்.

 

”எந்த ஒரு நலத்திட்டத்தையும்
வாக்குகளை குறிவைத்து மட்டுமே
செயல்படுத்தாமல் அதன் சாதக,
பாதங்களையும் தீர ஆலோசித்து செயல்படுத்த வேண்டும்.
பெண்கள் எல்லோருக்கும் அரசு நகரப்
பேருந்துகளில் இலவசம் எனும்போது
மாதம் 80 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும்
அரசுப் பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட
அரசு நகரப் பேருந்துகளுக்காக காத்திருந்து
செல்லும் நிலை உள்ளது. இத்திட்டம்,
அரசே நவீன பிச்சைக்காரர்களை
உருவாக்குவதுபோல் இருக்கிறது.

 

கூட்டுறவு வங்கிகளில்
40 கிராமுக்கு மேல் அடமானம்
வைத்துள்ளவர்களுக்கு நகைக்கடன்
தள்ளுபடி கிடையாது என்று கட்டுப்பாடு
கொண்டு வந்ததுபோல், பெண்களுக்கு
இலவச பயணம் என்பதிலும்
சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த
வேண்டும்,” என்கிறார்கள்
ஆட்டோ ஓட்டுநர்கள்.

 

வாக்கு வங்கிக்காக கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்காமல், எந்த ஒரு திட்டத்தையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்துவது அவசியம். இல்லாவிட்டால் விடியலுக்கான அரசு என்பது ஒரு தரப்பினருக்கானதாக அமைந்து விடும்.

 

– பேனாக்காரன்