Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா; ஆஸி.,யின் சோகம் தொடர்கிறது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி  3 – 0 புள்ளி கணக்கில் வென்றது. ஆஸி., அணியின் தோல்வி முகம் தொடர்ந்து வருவது, அந்நாட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்று உள்ளது. நேற்று (செப். 24) மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நடந்தது.

இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியா அணியில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கார்ட்ரைட் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆரோன் பின்ச், ஹேன்ஸ்ட்கோம்ப் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

ஆரோன் பின்ச் சதம்:

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் முதல் விக்கெட்டுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். வார்னர் 42 ரன்களில் அவுட் ஆனார். அவரை ஹர்திக் பாண்ட்யா வெளியேற்றினார். அபாரமாக ஆடி எட்டாவது சதம் அடித்த ஆரோன் பின்ச், ‘சைனா மேன்’ பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சுழலில் அவுட் ஆனார். அவர் 124 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்மித் 63 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சோபிக்கவில்லை.

மேக்ஸ்வெல் 5, டிராவிஸ் ஹெட் 4, ஹேன்ட்ஸ்கோம்ப் 3 ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸி., அணி 293 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் 27, ஆஷ்டன் ஏகர் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முதல் விக்கெட் ஜோடி அபாரம்:

பின்னர், 294 ரன்களை இலக்காகக் கொண்டு பேட்டிங்கை தொடங்கியது இந்திய அணி. முதல் விக்கெட் பங்காளிகளான ரோஹித் ஷர்மா, ரஹானே அருமையான தொடக்கம் தந்தனர். ரோஹித் ஷர்மா 71 ரன்களும், ரஹானே 70 ரன்களும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் கோஹ்லி, பெரிய ஸ்கோர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வழக்கமாக 5 அல்லது 6வது வரிசையில் விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த ஆட்டத்தில் 4வது வரிசையில் களம் இறக்கப்பட்டார். அதற்குரிய மரியாதையை, அவர் தனது அபாரமான பேட்டிங் மூலம் நிரூபித்துக் காட்டினார். சுழற்பந்து வீச்சில், தொடர்ந்து அவர் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். அவர் 78 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது அரை சதம் இதுவாகும்.

அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். மனீஷ் பாண்டே 36 ரன்களிலும், தோனி 3 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 47.5 ஓவர்களில் 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 புள்ளி கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

78 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றிய ஹர்திக் பாண்ட்யா, ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்காவது ஒரு நாள் போட்டி, வரும் 28ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது.