Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அவமதிப்பு வழக்கு: பெரியார் பல்கலை பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

உதவி பேராசிரியர் ஒருவருக்கு
பதவி உயர்வு வழங்காமல், நீதிமன்ற
உத்தரவை அவமதித்த பெரியார் பல்கலை
பதிவாளரை மார்ச் 28ம் தேதி நேரில்
ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சேலத்தை அடுத்த சித்தனூரை சேர்ந்தவர்
வைத்தியநாதன். பெரியார் பல்கலையில்
பொருளியல் துறை உதவி பேராசிரியராக
பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழக
மானியக்குழு, பகுதி நேரமாக பி.ஹெச்டி.,
முனைவர் பட்டத்தை எந்த வகையிலான
விடுப்பும் எடுக்காமல் நிறைவு செய்யும்பட்சத்தில்,
அதற்குரிய காலத்தையும் கற்பித்தல்
அனுபவமாகக் கணக்கிட்டு, பதவி உயர்வின்போது
கருத்தில் கொள்ள வேண்டும் என்று
விதிகளில் கூறப்பட்டுள்ளது.

வைத்தியநாதன் – தங்கவேல்

ஆனால் உதவி பேராசிரியர் வைத்தியநாதனுக்கு
பதவி உயர்வின்போது மேற்சொன்ன
விதியை ஏற்காமல், அவருக்கு
பதவி உயர்வும் வழங்கவும்
பல்கலை நிர்வாகம் மறுத்துவிட்டது.

 

இதையடுத்து வைத்தியநாதன்,
தனக்கு போதிய கல்வித்தகுதி,
கற்பித்தல் அனுபவம் இருந்தும்
பதவி உயர்வு வழங்க மறுப்பதாக
பெரியார் பல்கலை மீது உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்
அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து.

 

ஆனாலும், பல்கலை நிர்வாகம்
அவருக்கு பதவி உயர்வு வழங்காமல்
தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தது.
இதனால் அவர் உயர்நீதிமன்ற உத்தரவை
அமல்படுத்துமாறு பல்கலை பதிவாளர்,
துணை வேந்தர் ஆகியோருக்கு பலமுறை
கடிதங்கள் வாயிலாகவும் முறையிட்டார்.
அதற்கும் பல்கலை மசியவில்லை.
இதைத்தொடர்ந்து அவர், நீதிமன்ற
உத்தரவை அவமதித்ததாக பல்கலை
பதிவாளர் தங்கவேல் மீது
உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு
தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு, வியாழக்கிழமை
(பிப். 28) நீதிபதி சுந்தர் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
தரப்பில் வழக்கறிஞர் ஜோதிமணி
ஆஜராகி வாதாடினார்.

 

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்,
நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாகக்கூறி,
பெரியார் பல்கலை பதிவாளர் தங்கவேலை
வரும் மார்ச் 28ம் தேதிக்கு நேரில் ஆஜராகி
விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால்
பல்கலை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

– பேனாக்காரன்