Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

35 வருடம் காத்திருந்து காதலியை கரம் பிடித்த சிக்கண்ணா! காலம் போட்டு வைத்த கணக்கு!

 

‘பிணியும் மூப்பும் இறப்பும் மானுடர்க்கே அன்றி காதலுக்கு ஒருபோதும் அல்ல’ என்பதை, 65 வயதிலும் தான் நேசித்த பெண்ணுக்காய் காதலை பசுமையுடன் பத்திரப்படுத்தி வந்திருக்கும் சிக்கண்ணா நிரூபித்திருக்கிறார்.

 

‘காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை; மணம் முடித்த
அனைவருமே சேர்ந்து வாழ்ந்ததில்லை’
என்ற கண்ணதாசனின் வரிகள்,
சிக்கண்ணா – ஜெயம்மாவுக்கு
ரொம்பவே பொருந்தும்.

 

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம்
ஒலேநரசிப்புராவில்
வசிக்கும் சிக்கண்ணாதான்,
கடந்த ஒரு வாரமாக இணையங்களில்
பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர்.
இத்தனைக்கும் இவர் இப்போதும்
மிகச்சாமானியர்தான்.

 

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு
மைசூருவுக்கு கூலி
வேலைக்காகச் சென்றிருந்தார்.
அப்போது அவருக்கும்,
அதே ஊரில் வசித்து வந்த
அவருடைய உறவுக்கார
பெண்ணான ஜெயம்மாவுக்கும் (60)
பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில்
கண்களால் பேசிக்கொண்டனர்.

 

”கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”

 

என்பதுபோல்,
விழிகளால் காதல் மொழிகளை
பரிமாறிக் கொண்டனர்.
‘வாழ்ந்தாலும் செத்தாலும்
உன்னோடுதான்’ என்ற வாய்மொழி
உத்தரவாதங்களை அப்போது
ஜெயம்மாவும் தந்திருக்கிறார்.
ஆனால், பெற்றோர் வழக்கம்போல்
குறுக்கே நிற்க, காதலில்
வெட்டு விழுந்தது.

 

பெண்களின் பிறவி சாபமோ என்னவோ…
அவர்கள் சார்ந்த முடிவுகளை
எப்போதுமே மற்றவர்கள்தான்
எடுக்கின்றனர். முதலில் பெற்றோர்,
பின்னர் கணவர், அதன் பிறகு பிள்ளைகள்…
அதன் பிறகு திரையும் நரையும் விழுந்து
பெண்களின் வாழ்க்கை
முற்றுப்பெற்று விடுகிறது.

 

பெற்றோர் வற்புறுத்தலால்,
வேறு வழியின்றி தன் மனதுக்கு
பிடிக்காத ஒருவருக்குக் கழுத்தை
நீட்டுகிறார், ஜெயம்மா.
இதயத்தில் சிக்கண்ணாவை
சுமந்து கொண்டு படுக்கையில்
இன்னொருவனுடன் எப்படி பங்கு
போட முடியும்?. சொல்ல முடியாமல்
தவித்திருக்கிறார்… பலநேரம்
கணவனை தவிர்த்திருக்கிறார்.

 

கணவரோ, அவர் எதற்கும் ஒத்துழைப்பதில்லை. அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால்தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று திராவகச் சொற்களை வீசினார். நான்கே ஆண்டுகளில் கணவரை பிரிந்து, தனி மனுஷியாக வாழத் தொடங்கினார் ஜெயம்மா.

 

இவரின் நிலை இப்படி என்றால், சிக்கண்ணாவோ காதலியையே நினைத்து நினைத்து உருகிப்போனார். ‘மணந்தால் ஜெயம்மாதான்’ என்ற உறுதியோடு தனி மரமாய் வாழ்க்கையைத் தொடர்ந்தார். கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார்.

‘காலம் போடும் கணக்குகள்
எப்போதும் தப்பாது’ என்பார்களே…
அப்படித்தான் இவர்கள் வாழ்க்கையிலும்
திடீர் திருப்பம் ஏற்பட்டது.
அண்மையில் ஜெயம்மாவின்
இருப்பிடம் குறித்தும்,
அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து
வருவதும் சிக்கண்ணாவுக்குத்
தெரிய வந்தது.

 

முகவரியை தேடிக்கண்டுபிடித்து
அவரை நேரில் சந்தித்தார்.
பிறகென்ன… ‘கண்கள் பனித்தன;
இதயங்கள் இனித்தன’ என்கிற
ரீதியில் இருவரும் காற்று இடையறுத்துச்
செல்லாதபடி அணைத்துக் கொண்டனர்.

 

இருவரிடத்திலும் வெகு நேரமாக பேச்சே எழவில்லை. 35 வருட காத்திருப்பையும், பரிதவிப்பையும், காதலையும் மவுனமொழிகளால் பரிமாறிக் கொண்டனர். இருவரிடையே எத்தனை ஆழமான காதல் என்பதை, ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?’ என்பதாக வெளிப்பட்டது.

 

அடுத்த சில நாள்களில்,
‘நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?,’
என்று சற்றே தயக்கத்துடன்
கேட்டிருக்கிறார் சிக்கண்ணா.
‘இதற்கெல்லாம் என்னிடம்
அனுமதி கேட்கலாமா?’ என
பட்டென ஜெயம்மா பதிலுக்குக் கேட்க,
அதற்கான ஏற்பாடுகளை நண்பர்கள்
செய்யத் தொடங்கினர்.

 

தனக்கான விருப்பத்தை பிறர்
குறுக்கீடின்றி நிறைவேற்றிக்கொள்ள
ஜெயம்மாவுக்கும் 60 ஆண்டுகள்
தேவைப்பட்டிருக்கிறது.

 

மண்டியா மாவட்டம்
மேல்கோட்டையில் நண்பர்கள்
முன்னிலையில் 35 ஆண்டு கால
காதலர்களான சிக்கண்ணாவும்,
ஜெயம்மாவும் கடந்த சில நாள்களுக்கு
முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

 

புதுமணத் தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் கரங்களை இறுக்கமாகப் பற்றி இருந்தனர். அந்த பிணைப்பு, 35 வருட காதலின் ஆழத்தைச் சொல்லாமல் சொன்னது.

 

– பேனாக்காரன்