Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வு: பலன் அடைந்தவர்கள் யார்?

நீட் தேர்வினால் பலன் அடைந்தவர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், முற்பட்ட வகுப்பினர் பெருமளவிலான எம்பிபிஎஸ் இடங்களை கபளீகரம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

நீட் எனப்படும் மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு தமிழகம் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், ஜெயலலிதாவுக்குப் பிறகு வலுவான அரசியல் தலைவர்கள் இல்லாத நிலையில், இந்தாண்டு தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைந்துவிட்டது. அந்த தேர்வு முடிவின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடத்தி முடித்திருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பிறகு நீட் தேர்வுக்கு எதிரான உக்கிரம் மாநிலம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டம் பரவலாக வலுத்து வருகிறது.

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை முடிந்து, கடந்த 4ம் தேதி முதல் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மற்றும் பட்டியலின மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள் புள்ளி விவரங்களுடன் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ் பிரிவில் 2652 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள மருத்துவ படிப்புக்கான இடங்களில் 69 சதவீதம் வழக்கமான இட ஒதுக்கீடு அடிப்படையிலும், மீதமுள்ள இடங்கள் 31 சதவீத இடங்கள் பொதுப்போட்டி அடிப்படையிலும் நிரப்பப்படும். பொதுப்போட்டியில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு, அதிக மதிப்பெண் பெற்றிருக்கும் பட்டியல் சாதியினர் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இந்த சமூகநீதியில் இந்தாண்டும் எந்த சுணக்கமும் ஏற்படவில்லை. பிறகெப்படி நீட் தேர்வால் சமூகநீதி பாதிக்கப்படும் என்று ஓலமிடுகிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்?

கடந்த கல்வி ஆண்டில், தமிழகம் மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றிருந்தது. அந்தாண்டு எம்பிபிஎஸ் முதலாண்டில் பொதுப்போட்டியில் 4.6 சதவீதம், அதாவது 48 பேர் மட்டுமே சேர்ந்தனர். பொதுப்போட்டி என்பது பிராமணர்கள், பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார் போன்ற முற்பட்ட வகுப்பினருக்கானது என்று புரிந்து கொள்ளலாம்.

நடப்பு ஆண்டில், நீட் தேர்வுக்கு தமிழகமும் இரையானது. இந்தாண்டு, முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 6.7 சதவீத மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அவர்களில் 8 சதவீதம் பேர், மொத்தமுள்ள 2652 எம்பிபிஎஸ் இடங்களில் 211 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த ஆண்டில் வெறும் 48 பேர் மட்டுமே முற்பட்ட வகுப்பினர் என்பதை நினைவில் கொள்க. இது, நீட் தேர்வால் சாத்தியமானது.

இந்தாண்டு நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ் சேர்க்கை பெற்ற மாணவர்களில் 63 சதவீதம் பேர் மாநில பாடத்திட்டத்தின்படி படித்தவர்கள். எஞ்சியுள்ள 37 சதவீதம் பேர், சிபிஎஸ்இ உள்ளிட்ட வேறு பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள். பொதுவாகவே, தமிழகத்தில் 98 சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே படிக்கின்றனர். வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே வேறு பாடத்திட்டத்தின்கீழ் படிப்பவர்கள். எனில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 98 சதவீத மாணவர்ளுக்கு 63 சதவீத எம்பிபிஎஸ் இடங்களும், வெறும் 2 சதவீதமே உள்¢ள பிற பாடத்திட்ட மாணவர்களுக்கு 37 சதவீத இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்குப் பெயர்தான் சமூக நீதியா? சமத்துவமா?

இது மட்டுமல்ல. நீட் தேர்வு காரணமாக பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ளவர்கள்கூட சொற்ப கட்டணத்தில் படிக்கும் நிலையும் உள்ளது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க ஆண்டுக்கு ரூ.13600ம், பல் மருத்துவம் படிக்க ரூ.11600ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க ரூ.4 லட்சமும், பல் மருத்துவம் படிக்க ரூ.2 லட்சமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீடாக இருந்தால், ரூ.12 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

கிராமப்புற மாணவர்கள் பிளஸ்-2வில் அதிக மதிப்பெண்கள் பெற்றாலும், நகர்ப்புற மாணவர்களோடு போட்டிப்போட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு லட்சக்கணக்கில் செலவழித்து படிக்க முடியாது. அத்தகைய சூழலில் அவர்களின் மருத்துவர் கனவு, நிரந்தரமாக கானலாகி விடும் சூழலும் இருக்கிறது. சமூகநீதி என்பது சாதி ரீதியிலானது மட்டும் என்றில்லாமல் பொருளாதார ரீதியிலும் சமத்துவம் காக்கப்பட வேண்டும்.

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் ஆட்சியாளர்கள், அங்கெல்லாம் ஒரே நுழைவுத்தேர்வு என்ற நிலை இல்லை என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். டெக்சாஸ், நியூயார்க், கலிஃபோர்னியா, வாஷிங்டன் என ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொருவிதமான கல்விக்கொள்கையே பின்பற்றப்படுகிறது.

நீட் பிரச்னைகளில் இருந்து சமூகநீதி காக்க, பொதுப்பட்டியலில் உள்ள கல்வியையும், மருத்துவத்தையும் முதலில் விரைந்து மாநில பட்டியலுக்கு மீட்கப்பட வேண்டியதே அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும்.

– அகராதிக்காரன்.