Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி யார்?; காவல்துறையையே கலங்கடித்தவர்!

ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி, போலீஸ் கமிஷனர் ஜார்ஜை கடுமையாக கண்டித்ததன் மூலம் பெரும் பரபரப்புக்கு உள்ளானார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். ஒரு மாதம் ஆகியும் அதற்கான அறிவிப்பு இல்லாதது குறித்து கடந்த 16ம் தேதி, நாமும், ‘ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே? செய்வீர்களா?’ என்ற தலைப்பில் புதிய அகராதி இணைய ஊடகத்தில் சிறப்புக் கட்டுரை எழுதி இருந்தோம்.

கடந்த சில நாள்களாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் பரபரப்பு சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இன்று (செப். 25) உத்தரவிட்டார்.

அரசியலில் திடீர் சர்ச்சை எழும்போதெல்லாம் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுவதும், பின்னர் அந்த குறிப்பிட்ட சர்ச்சை அப்படியே அமுங்கி விடுவதும் உண்டு. இப்போது அமைக்கப்பட்டு உள்ள ஆணையமும், ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களை நீர்த்துப் போகச்செய்து விடும் என்ற தகவல்களும் றெக்கை கட்டி பறக்காமல் இல்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, விசாரணை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள ஓய்வு பெற்ற நீதிபதியின் கடந்த காலத்தில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் சொந்த ஊர், கோயம்பத்தூர். 1952ல் பிறந்தார். 1974ல் சட்டப்படிப்பை முடித்து, வக்கீல் தொழிலை மேற்கொண்டார். 1986ல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்காடி வந்தார். அதன்பின்னர் 1991ல் துணை நீதிபதியாக பொறுப்பேற்றார். 1998ல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

இதன்பின்னர், 2009ம் ஆண்டில் அவர் சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை தலைவராக பொறுப்பேற்றார். 2014ம் ஆண்டில் பணி ஓய்வு பெறும்போது அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். 2016ம் ஆண்டு, மும்பையில் கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்தார். அதே ஆண்டு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை பெஞ்ச் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆறுமுகசாமி, நீதிபதியாக இருந்தபோது நிகழ்ந்த பரபரப்பு சம்பவம் வருமாறு:

சென்னை போலீஸ் கமிஷனர் என்பவர் ஓர் அரசு அதிகாரி, போலீஸ் அதிகாரி என்பவர் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியவர். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஒன்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி அல்ல என்று அப்போது கடுமையாக கண்டித்தார்.

டந்தது என்ன?:

பாப்புலர் போர்ஜ் என்ற நிறுவனம் சார்பில் ஸ்ரீதர் என்பவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஸ்ரீதர் புகார் செய்தார். அந்த புகாரில், தான் கொடுத்த ரூ.13 லட்சத்துக்கான வங்கி காசோலைகள், பாப்புலர் போர்ஜ் நிறுவனத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட ராஜாமணியும், பாப்புலர் போர்ஜ் நிறுவனத்தின் இயக்குனர்களும் தன்னை மோசடி செய்கின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், 9.5.2005 அன்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர், புகார்தாரர் ஸ்ரீதருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், வழக்கை முடித்து வைத்து, சென்னை சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த விவரம் தெரிந்தவுடன், தன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு கமிஷனருக்கு 26.5.2008 அன்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், மற்றொரு இன்ஸ்பெக்டர் வழக்கை விசாரித்து, இது சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது என்று கூறி வழக்கை மீண்டும் முடித்து வைத்து 21.3.2011 அன்று அறிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையை எதிர்த்தும் ஸ்ரீதர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், இந்த வழக்கை தகுந்த அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு 10.11.2011 அன்று உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் (கந்துவட்டி பிரிவு) உதவி கமிஷனர் முருகேசன், ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது போலீஸ் விசாரணைக்கு, ஸ்ரீதர் சார்பில் அவரது வக்கீல் கே.சம்பத்குமார் ஆஜராகி ஆதாரங்களை எல்லாம் கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த ஆய்வாளர் கருணாகரன், இந்த வழக்கை உதவி கமிஷனர் உத்தரவின்படி மீண்டும் முடித்து வைக்கப் போவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து உயர்நீதி்மன்றத்தில் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, கோர்ட் உத்தரவை மதித்து செயல்படும்படி போலீசாருக்கு எடுத்து கூறியும், அவர்கள் தொடர்ந்து இந்த வழக்கு சிவில் சம்பந்தப்பட்டது என்று கூறி 2 முறை வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர் என நீதிபதி அதிருப்தி வெளிப்படுத்தினார்.

இந்த வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, குற்றச்சாட்டுக்கு ஆதார ஆவணங்களை தாக்கல் செய்தும், கோர்ட் 2 முறை உத்தரவிட்டும் தொடர்ந்து சிவில் சம்பந்தப்பட்டது என்று கூறி போலீசார் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் முருகேசன் ஆகியோர் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழக அரசுக்கும், சென்னை போலீசுக்கும் கரும்புள்ளியாக அமைந்து விட்டது. போலீஸ் கமிஷனர் (ஜார்ஜ்) என்பவர் போலீஸ் கமிஷனர்தான். அவர் ஒன்றும் புனித ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி இல்லை என்றார் நீதிபதி.

ஒரு அரசு அதிகாரி என்ற விதத்தில், அவர் பொதுமக்களை சந்தித்து, புகாரை பெற்று, மக்களின் பிரச்சனை தீர்க்கும் விதமாக குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக புலன் விசாரணை மேற்கொள்ளவேண்டும். அவர் பாரபட்சம் இல்லாமல் செயல்படவேண்டும். பொதுமக்களின் குறைகளை கேட்க கமிஷனர் மறுப்பது நியாயம் இல்லை.

பொதுமக்களின் குறைகளை கேட்டால்தான், ஒரு புகார் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு தகுந்த முடிவினை மேற்கொள்ள முடியும். ஆனால், கமிஷனராக பதவி ஏற்ற நாள் முதல், கமிஷனர் ஜார்ஜ் பொதுமக்களை நேரில் சந்திக்காமல் இப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

எனவே, இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து எடுத்துக்கூற போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், வெள்ளிக்கிழமை இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டியது போலீஸ் அதிகாரியின் கடமையில் ஒன்றுதான். எனவே இதில் விலக்கு அளிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

இப்படி அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி ஆறுமுகசாமிதான் இன்றைக்கு, ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்த உள்ளார்.