Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி, கொடி அறிமுகம், கொள்கை விளக்க மாநாடு என்று நின்று நிதானமாக, டெஸ்ட் கிரிக்கெட் போல ஆடத் தொடங்கி இருக்கிறார். 

கடந்த அக். 27ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த, த.வெ.க., மாநாட்டில், கட்சியின் கொள்கை விளக்கம் குறித்து பேசினார், விஜய்.

அந்த மாநாட்டில்,
”தந்தை பெரியார், அண்ணா
பெயரைச் சொல்லிக்கொண்டு,
திராவிட மாடல் என்ற பெயரில்
தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடிக்கிறது
ஒரு குடும்பம். அந்த சுயநலக்
கூட்டம்தான் நமது அரசியல் எதிரி,”
என திமுகவின் பெயரைச்
சொல்லாமலேயே சம்மட்டி அடி
கொடுத்தார் விஜய்.

அதேபோல,
”சாதி, மதத்தின் பெயராலே
பெரும்பான்மை, சிறுபான்மை
பயத்தைக் காட்டும் பிளவுவாத
அரசியல் செய்பவர்கள்தான்
நமது கொள்கை எதிரி,” என்று
பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்களின்
மண்டையிலும் ‘பொளேர்’ என
ஒரு போடு போட்டார்.

”பெரியாரின் கடவுள் மறுப்புக்
கொள்கையை ஏற்க மாட்டோம்.
ஆனால் அவருடைய சமூகநீதி,
பகுத்தறிவு, பெண்ணுரிமை
கொள்கைகளை ஏற்கிறோம்.
திராவிடமும் வேண்டும்;
தமிழ்த்தேசியமும் வேண்டும்.
அவை இரண்டும் நமது இரு கண்கள்.
அண்ணாவின் இருமொழிக் கொள்கையையும்,
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
கோட்பாடும் நமது கட்சியின் கொள்கை,”
என்றார்.

அவருடைய படங்களைப் போலவே
எல்லா மசாலாக்களையும் கலந்து கட்டி
கொள்கை பொட்டலமாகத் தந்திருக்கிறார்.
உண்மையில், தமிழகத்தில் யார் கட்சித்
தொடங்கினாலும் திமுகவை எதிர்த்து
அரசியல் செய்வதும், திராவிடக் கட்சிகளின்
சித்தாந்தங்களை அடியொற்றி கொள்கைகளை
வகுத்துக் கொள்வதும் தொடரும்
நடைமுறைதான். அந்த பாதையில்
இருந்து விஜய்யும் பெரிதாக
விலகிச் செல்லவில்லை.

ஆனால்,
கட்சித் தொடங்கிய முதல் அடியிலேயே,
தன்னுடன் கூட்டணி வைக்கும்
கட்சிகளுக்கு ஆட்சியிலும்
அதிகாரத்திலும் பங்கு தரப்படும்
என்று முழங்கியதுதான் இன்றைக்கு
தமிழகத்தில் அனைத்து அரசியல்
கட்சிகளின் தூக்கத்தையும் கலைத்துள்ளது.
குறிப்பாக ஆளும் திமுக தரப்பில்
இருந்து ஆர்.எஸ்.பாரதி முதல் அமைச்சர்கள்
வரை விஜய்க்கு எதிர்வினையாற்றினர்.
விசிக, காங்கிரஸ் கட்சிகள் விஜயை
வாழ்த்திவிட்டு, மென்மையான
விமர்சனங்களையும் முன்வைத்தன.

த.வெ.க., கட்சியிடம் புரட்சிகர
கோட்பாடுகள் இல்லை என்று விசிக,
நாதக ஆகிய கட்சிகள் மட்டம்
தட்டிப்பேசினாலும், தமிழக அரசியல்
களத்தில் கூட்டணி கட்சிகளுக்கும்
அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்பது
இதுவரை சொல்லப்படாதது.
நம்முடைய களத்திற்கு இது
துணிச்சலான சிந்தனை.

கொள்கை அறிவிப்பு குறித்து
முதல் நாளில் கருத்து கூறிய
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,
த.வெ.க.,வின் கொள்கை கோட்பாடுகளில்
உள்ள சில முரண்களை மட்டும்
சுட்டிக்காட்டிவிட்டு கடந்து சென்றார்.
அதேபோல, விசிக தலைவர் திருமாவளவனும்
பெரிதாக எதிர்மறை விமர்சனங்களை
வைக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க, விஜய்யின் அரசியல் வருகையால், நாம் தமிழர் கட்சிக்குச் சென்று வந்த திமுக, பாஜக எதிர்ப்பு வாக்குகள், இனி தவெகவுக்கு மாறக்கூடும் என்று பேச்சுகள் எழுந்தன.

சீமான் கட்சியில் உள்ள இளைஞர்களில் கணிசமானோர் விஜய் ரசிகர்கள்தான் என்றும், இப்போது தங்களுக்கென ஒரு தலைவன் வந்துவிட்டதால் சீமான் பக்கம் நின்ற அவர்கள் இனி விஜய் பக்கம் வந்து விடுவார்கள் என்றும் பேசப்பட்டது.

இளைஞர் பட்டாளம்தான் நா.த.க.,வின் வலிமையான அடித்தளம் என்ற சீமானின் நம்பிக்கையில் விரிசல் விழுந்து விடுமோ என்று அவரும் நம்புகிறார் போலும். அதனால்தான், தவெக மாநாடு நடக்கும் நாள் வரை, ‘விஜய் என் தம்பி. அவன் எனக்கு எதிராக அரசியல் செய்தாலும் நான் அவரை எதிர்க்க மாட்டேன்,’ என்று ஒரு தாய் மக்கள் போல பாசமழை பொழிந்து வந்த சீமான், கடந்த இரு நாள்களாக அவர் மீது பாய்ந்து பிராண்டி கொண்டிருக்கிறார்.

நவ. 1ஆம் தேதி, சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் விழா கூட்டத்தில் பேசிய சீமான், ”தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றா? அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல. கூமுட்டை. ஒண்ணு… சாலையில் அந்த ஓரத்தில் நில்லு. அல்லது, இந்த ஓரத்தில் நில்லு. நடு ரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு செத்துப் போய்டுவ தம்பீ. இது நடுநிலை இல்லை; கொடுநிலை.

‘வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ…’ நான் கருவிலேயே என் எதிரி யார்? என்று தீர்மானித்துவிட்டு பிறந்தவன். நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் இல்லை. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். இது பஞ்ச் டயலாக் இல்லை தம்பீ… இது நெஞ்சு டயலாக்.

நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். நாங்கள் அதை படித்து பிஹெச்.டி., பட்டம் வாங்கி விட்டோம். நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தில், இலக்கியம் எங்கு இருக்கிறது என்று தேட வேண்டும்,” என கிழி கிழி என்று கிழித்தெடுத்தார்.

அப்போதும் சீமானின் கோபம் தீரவில்லை. நவ.2 ஆம் தேதி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோதும், விஜயை விளாசித் தள்ளினார். இரு மொழிக் கொள்கை தேவை இல்லை; நமது தாய்மொழி தமிழே போதும் என்றார்.

தவெக., மாநாட்டிற்கு வந்த கூட்டம் குறித்து கேட்டதற்கு, ‘நயன்தாரா கடைத்திறப்பு நிகழ்ச்சிக்குக்கூட 4 லட்சம் பேர் வருகிறார்கள்,’ என்று கீழ்மைப்படுத்திப் பேசினார்.

மூச்சுக்கு முந்நூறு முறை தமிழ் தமிழ் என்று கழுத்து நரம்பு புடைக்க பேசுகிற சீமான், தன் மகனை உயர்தர கான்வென்ட் பள்ளியில்தான் படிக்க வைக்கிறார். கேட்டால், தமிழ்நாட்டில் தமிழ்வழிப்பள்ளிகளே இல்லை என பச்சைப்பொய் பேசுகிறார். ‘போடுவது ஏழைப் பங்களான் வேடம்; பயணம் என்னவோ ஒன்றரை கோடி ரூபாய் மகிழுந்தில்’ என்பது முரண் அல்லவா?

எல்லாம் தெரிந்த சீமானுக்கு, கடந்த மக்களவைத் தேர்தலின்போது தனது சின்னத்தையே இழக்க வேண்டிய நிலை வந்தது ஏன்? 10 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் களத்தில் இருக்கும் சீமானால், இன்று வரை வாக்குச்சாவடிகளில் முகவர்களை அமர வைக்க முடியவில்லையே ஏன்?

பெரியார், அண்ணா, சங்க இலக்கியங்களை எல்லாம் கரைத்துக் குடித்து முனைவர் பட்டம் பெற்றுவிட்டதாக விஜயை மட்டம் தட்டும் சீமான், ‘வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு’ என்ற வள்ளுவன் பாட்டிற்குப் பொருள் அறிவாரா?

விஜய், அரசியல் களத்திற்குதான் வந்திருக்கிறாரே தவிர, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதச் செல்லவில்லை. ஈழத்தில் யுத்தம் நடந்தபோது, இங்கே சீமான் யாருடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார் என நடிகை விஜயலட்சுமியிடம் கேட்டுச் சொல்வாரா? என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பினால் நாகரீகமாக இருக்காது.

கச்சத்தீவை தாரை வார்த்த காங்கிரஸ் பற்றி விஜய்யின் கருத்து என்ன? என கேட்கிறார். விட்டால், இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்னைக்குக்கூட விஜய்யிடம்தான் தீர்வு கேட்பார் போலிருக்கிறது.

சீமான் சொன்னதுபோல் பாஜக., இந்த மனித குலத்திற்கே எதிரி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அக்கட்சியை புறந்தள்ளுவோம். திமுக, தமிழ் இனத்தின் எதிரி எனக்கூறும் சீமான், அக்கட்சியை அரசியல் எதிரியாக பாவிக்கும் விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டுவதுதானே தோழமையாக இருக்க முடியும்?

தொழிலாளர் வர்க்க உரிமைக்காக வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்ட இடதுசாரி கட்சிகள், பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் காங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் ஒன்று சேர்ந்து தேர்தலைச் சந்திக்கின்றனர். அதேபோல திமுக எனும் பொது எதிரியை வீழ்த்த எதிரணியில் இருக்கும் கட்சிகள் ஒன்று சேர்வதுதானே யுத்த இலக்கணப்படி நியாயம் ஆகும்?

அல்லது, இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு, மாற்று அணியாக ஓரணியில் திரள்வதுதானே புத்திசாலித்தனம்?

தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் எனக்கூறும் சீமான், பச்சைத்தமிழரான எடப்பாடி பழனிசாமி ஆளுகையில், அவரை பா.ஜ.க.,வின் அடிமை என்கிறார். இதோ… இப்போது இன்னொரு தமிழனான விஜய் வந்து விட்டார். முளை விடும்போதே அவரை குட்டிக்குட்டி காயப்படுத்தும் சீமானின் மனநிலையை என்னவென்று சொல்வது? சீமானின் பாய்ச்சலைப் பார்க்கும்போது தமிழ் நண்டு கதைதான் நினைவுக்கு வருகிறது.

இரு நாள்களாக விஜய்யை போட்டு புரட்டி எடுத்து வரும் சீமானின் பேச்சைக் கூர்ந்து கவனித்தால், ஒருவேளை இவர் திமுகவின் ‘பி’ டீம் ஆக இருப்பாரோ என்ற ஐயமும் இயல்பாகவே எழுகிறது. எக்ஸ் தளத்தில், #கூமுட்டை_விஜய் என்ற ஹேஷ்டேக் பகிர்ந்து டிரெண்டிங் செய்துள்ளனர் நாதக தம்பிகள். இதை திமுகவின் ஐடி விங் கூலிப்படை அதிகளவில் பரப்பி வந்ததையும் கூர்ந்து கவனிக்க வேண்டியதாகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் நாதக 8.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதால், மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

வரும் தேர்தலில் நாதகவின் வாக்குகள் சரியும் பட்சத்தில் அக்கட்சி பழையபடி பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாறி விடும். மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்து விடும். அதனால் ஏற்பட்ட அச்சம்தான் விஜய்க்கு எதிராக சீமானை கடுமையாக பேச வைத்திருப்பதாக பார்க்கிறேன்.

சீமான் இப்படி என்றால், விசிக தலைவர் திருமாவளவனும் விஜயை காட்டமாக விமர்சிக்கிறார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை எல்லாம் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்துகிறார். யார், எப்போது, என்னென்ன கொள்கைகளைப் பேச வேண்டும் என்பதற்கெல்லாம் திருமாவளவன்தான் முடிவு செய்வார் போலிருக்கிறது.

பட்டியல் சமூக இளைஞர்கள் கணிசமாக விஜய் ரசிகர் மன்றங்களில் இருப்பதாகவும், அவர்கள் வாக்குகள் தவெகவுக்கு செல்லும்பட்சத்தில் விசிகவின் வாக்கு வங்கியிலும் சேதாரம் ஏற்படும் என்கிறார்கள். அதன் விளைவாகவே திருமாவளவனும், தவெக தலைவர் மீது பாயத் தொடங்கி இருக்கிறார்.

மண்டையில் கோளாறு என்றால் மருத்துவரிடம்தான் செல்ல வேண்டுமே தவிர, பார்ப்பவன் மீதெல்லாம் பாய்ந்து பிராண்டிக் கொண்டிருக்கக் கூடாது.

 

– பேனாக்காரன்

Leave a Reply