Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்!

நீட் தேர்வில் தோல்வி, கலைந்து போன மருத்துவப் படிப்பு என விரக்தியின் உச்சத்தில் இன்று (செப்.1) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவே, நீட் அரக்கனுக்கு கடைசி பலியாக இருக்க வேண்டும். தரகு அரசியலில் கரைந்து போன இளம் மாணவியின் மரணம், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

அனிதா. 17 வயதே ஆன இளம் மாணவி. மனசு முழுக்க மருத்துவக் கனவுகளைச் சுமந்து கொண்டு இருந்தார். படிப்பு ஒன்று மட்டும்தான் தன்னையும், குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் நம்பிக்கையாக இருந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து எதிர்காலத்தில் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய திறமையான மருத்துவர் இன்று உயிருடன் இல்லை.

தற்கொலை, மன அழுத்தம், இருதய துடிப்பு நின்றது என பிரேத பரிசோதனை அறிக்கை என்ற பதத்தில் சொன்னாலும், அனிதாவின் பலிக்கு முதல் குற்றவாளி தரகர் ஆட்சி நடக்கும் தமிழக அரசும், நம்ப வைத்து கழுத்தறுத்த நடுவண் அரசும்தான்.

அனிதாவின் திறமையைக் கேட்டால் அவளுக்கு அப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது என்றே சொல்லத் தோன்றும். ஒன்டுக்குடித்தன ஓட்டு வீடு. அம்மா, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். அப்பா, சண்முகம்தான் துணை. நான்கு மகன்கள், ஒரு மகளை கரை சேர்க்க வேண்டுமே. சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கும் தொழிலாளி. வியர்வை சிந்தும் பிழைப்பு என்றாலும், பிள்ளைகளை படிக்க வைப்பதில் அவர் தோல்வி அடையவில்லை.

அனிதாவும் அப்பாவின் உழைப்புக்கு உரிய மரியாதை கொடுத்து இருக்கிறாள். ஆமாம். எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள். எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் அனிதா, 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். படிப்பில் படு சுட்டியான அனிதாவை, பிளஸ்-2வில் கட்டணமின்றி சேர்த்துக் கொண்டது ஒரு தனியார் பள்ளி. இலவசமாக விடுதி வசதியும் செய்து கொடுத்தது.

அந்தப் பள்ளிக்கு அனிதா செல்ல இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அவளது வீட்டில் தனி கழிப்பறை வசதி கிடையாது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் அனிதா 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ படிப்புக்கான கட்ஆ-ஃப் 196.5. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எந்த ஒரு முதன்மையான மருத்துவக் கல்லூரியிலும் அவருக்கு சீட் கிடைத்து விடும். அதாவது, கடந்த காலங்களைப்போல பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தியிருந்தால்.

இங்குதான் அவர் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்தாண்டு நீட் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை என்பதில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் சொல்லிவிட்டது. அதற்கு முன் அனிதாவும் நீட் தேர்வை எழுதியிருந்தார். அதில் அவர் 86 மதிப்பெண்களே பெற முடிந்தது. கூலித்தொழிலாளியின் மகளால் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி கோச்சிங் செல்ல முடியவில்லை.

நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று வழக்கு தொடுத்த நளினி சிதம்பரம் போன்றோருக்கு எதிராக, மிக துணிச்சலாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார் அனிதா. அரியலூரில் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினர் நடத்திய போராட்டத்தில்கூட அனிதா, வலியச்சென்று பங்கெடுத்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர்.

இத்தனை துணிச்சல் மிகுந்த அனிதான்தான், தற்கொலை எனும் துயரமான முடிவைத் தேடிக்கொண்டிருக்கிறார். நீட் தேர்வில் தோற்றாலும், அந்த தேர்வை மீண்டும் எழுத மேலும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை, அதில் அவர் வென்றிருக்கக் கூடும்; அவர் கனவு கண்டதுபோலவே மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்க முடியும்.

ஆனால், அதற்கான புறச்சூழலை நம்பிக்கைக்கு உகந்த வகையில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தமிழக அரசோ, புதுடில்லிக்கு காவடி எடுப்பதில்தான் கவனம் செலுத்தியது. தங்கள் மீது வழக்குகள் பாய்ந்து விடக்கூடாது; ஆட்சி அதிகாரம் பறிபோய்விடக்கூடாது என்பதில் காட்டிய அக்கறையில் ஒரு துளிகூட, மாணவர்களின் எதிர்காலத்தைக் காக்க வேண்டும் என்பதில் காட்டவில்லை.

போதாக்குறைக்கு நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் அவசர சட்டம் கொண்டு வந்தால் பரிசீலிக்கப்படும் என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போனார். மத்திய, மாநில அரசுகளின் நாடகங்களை அப்பாவி அனிதாக்கள் நம்பியதே பெருங்குற்றம். அவசர சட்டம் கொண்டு வாருங்கள் என்றவர்கள், கொல்லைபுறமாக கோர்ட்டுக்குச் சென்று அவசர சட்டத்தை ஏற்க முடியாது என்று சொல்ல வேண்டும்?

ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் ஒரு தற்கொலைக்கு தூண்டுதல் நடவடிக்கை இருக்கும். அப்படி தூண்டுவதும்கூட இந்திய தண்டனை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்தான். எந்த தந்தையும் தன் மகளை அந்த நிலைக்குத் தூண்ட மாட்டார். எந்த சகோதரனும் தன் சகோதரியை தற்கொலைக்கு தூண்டிவிட மாட்டார். எனில், இங்கு அனிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? மாநில அரசா? மத்திய அரசா?

அனிதாவின் தற்கொலைக்கு உரிய நியாயம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் தள்ளப்பட்டு இருக்கின்றன. நீட் தேர்வுக்கு அனிதாவே கடைசி பலியாக இருக்கட்டும்.

– புதிய அகராதி.