Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா? மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

டெல்லி: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் 25 இடங்களைக் கூட பிடிக்காத நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகித இடமும் ஒதுக்கப்படும் என்ற அரசாணையைக் கடந்த ஜூன்-22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையின் படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏறக்குறைய 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

எனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திலும் தஞ்சாவூரை சேர்ந்த தார்னிஷ்குமார் உள்ளிட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றாமல் புதிய இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த வழக்கைக் கடந்த ஜூலை7 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, என்றும், இதுகுறித்த தீர்வுக்கு உயர்நீதிமன்றத்தையே அணுகும்படி தெரிவித்தது.

இந்த வழக்கு கடந்த ஜூலை-14 ஆம் தேதி நீதிபதி ரவிச்சந்திரபாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித உள் இட ஒதுக்கீடு அளித்த, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனால் நீட் தேர்வுக்கு தயாராகாத தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில பாடத்திட்ட மாணவர்களும், தமிழக சுகாதாரத்துறை சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மருத்துவமாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் 85% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செல்லும் என்று தீர்ப்பளித்தது. தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய நீதிபதிகள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்கமுடியாது என்றும் கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவினால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பலரின் மருத்துவக் கனவில் மண் விழுந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து ஒன்றிரண்டு ஆண்டுகளாவது விலக்கு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமி டெல்லியில் முட்டி மோதி வருகிறார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.