Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்தியா, ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” – சு.பொ.அகஸ்தியலிங்கம்

தமிழகம் உருவாக்கிய மொழி உணர்வு, இன்றைக்கும் இந்திய அரசியலில் ஓர் ஆக்கப்பூர்வமான பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அதில் சில தோல்விகள் இருக்கலாம்; பலகீனம் இருக்கலாம். நான் வரலாற்றை கொச்சைப்படுத்த வில்லை.

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடக்கி ஆண்டபோது ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்கிரஸ் அமைப்பை உருவாக்கினர். அதை ஒரு ‘சேஃப்டி வால்வு’ ஆக பயன்படுத்தினர். ஆனால் அந்த காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பாக மாறியது. 1886ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட மூன்றாவது மாநாடு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்தது.
இந்த மாநாட்டிற்கு முன்புவரை காங்கிரசார் ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். ஆனால் முதன்முறையாக அவரவர் தாய்மொழியில் பேசும் மாநாடாக அமைந்தது சென்னை மாநாடுதான்.
அந்த மாநாட்டில் மூக்கணாச்சாரி என்ற பொற் கொல்லர், எப்படி சிறுதொழில்கள் நசிந்தது என்பது குறித்து தமிழில் உரையாற்றினார்.
அப்போது மேடையில் இருந்த தலைவர்கள், “அவரவர் தாய்மொழியில் பேசுங்கள்; அப்போதுதான் உளப்பூர்வமாக பேச முடியும்” என்றனர். இதைப்பார்த்த பிரிட்டிஷ்காரர்கள், ‘நீங்கள் ஒப்புக்கொண்ட விதிமுறைக்கு மாறாக தாய்மொழியில் பேசுகிறீர்கள். இப்படி தமிழில் பேசுவது ஆபத்தானது. தாய்மொழியில் பேசினால் எல்லா மக்களும் புரிந்து கொள்வார்கள். அதனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கலகம் உருவாகிவிடும்,’ என்று எச்சரித்தனர்.
ஆக,, காங்கிரஸ் கட்சியை ஒரு கலக அமைப்பாக மாற்ற, தமிழ்மொழிதான் பயன்பட்டிருருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழை தூக்கிப் பிடித்தப்பிறகுதான் யுகப்புரட்சியே நடந்தது. தாய்மொழியை முதன்மைப்படுத்தி, பண்பாட்டை வளர்த்துக்கொள்கிற பாரம்பரியம் நம்முடையது. தாய்மொழி மீது காதலென்பது இயல்பானது. எந்த மொழியையும் படிக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் என் மீது எந்த மொழியையும் திணிக்காதே என்றுதான் சொல்கிறேன்.
சுதந்திர உணர்வை தட்டி எழுப்ப வெறும் ஹிந்தி மொழி மட்டுமே பயன்படவில்லை. சுதந்திர போராட்டத்திற்கு மிக உற்சாகத்தை தூண்டிய, ‘வந்தே மாதரம்’ என்ற சொல், வங்கமொழியில் சொல்லப்பட்டது; ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, உருது மொழியில் சொல்லப்பட்டது. இன்றைக்கும் ஜெய்ஸ்ரீராம் கோஷ்டிக்கு வயிற்றைக் கலக்கும் கோஷம், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’.
ஆக, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதெல்லாம் பக்கா ‘ஃபிராடு’. ஏனெனில் இந்தியா, ஒரே நாடு அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் ‘நேஷன்’ என்ற சொல் இல்லை. ‘இந்திய ஒன்றியம்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் பலமொழி பேசுகின்ற, பல்வேறு கலாசார வேறுபாடுகளைக் கொண்ட தேசம்தான், இந்தியா.
இந்த வேற்றுமையை ஒப்புக்கொள்ளாத எவராலும் இந்திய ஒற்றுமையை பாதுகாக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், மொழிவழி மாநிலங்களை ஒழித்துக்கட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எது இந்தியாவின் ஆட்சிமொழி என்பதில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பம் இருக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் பேசும் மொழி ஹிந்தி என்கின்றனர். அந்த விவாதமே தப்பு.

ஒரிஸா, மேற்குவங்கம், பீஹார், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எங்கேயும் தாய்மொழியாக ஹிந்தி இல்லை. பா.ஜ.க., ஆளக்கூடிய உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் கூட போஜ்புரி கலந்த ஹிந்தி மொழிதான் பேசப்படுகிறது.
ஒரு மொழியை படிப்பது என்பது வேறு; பேசுவது என்பது வேறு. எந்த மொழி வாழ்க்கையோடும், அன்றாட நிகழ்வோடும் இணைந்திருக்கிறதோ அந்த மொழியை எளிதில் கற்றுக்கொள்வோம். ஆக எந்தச்சூழ்நிலையிலும் ஹிந்தியை தேசிய மொழியாக உயர்த்திப் பிடிக்கத் தேவையில்லை. அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்.

மொழி என்பது வெறும் உணர்வு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது பண்பாட்டுக் குறியீடு. அந்தந்த மண்ணுடைய பொருளாதார, தட்பவெப்ப நிலையோடு பொருந்திதான் மொழி உருவாகிறது. யார் ஆக்கிரமிக்கிறார்களோ, எது ஆட்சியாளர் மொழியாக இருக்கிறதோ, எல்லாவற்றையும்விட எது வியாபாரத்துடன் தொடர்பு கொள்கிறதோ அந்த மொழி ஆதிக்கம் பெறும். மொழி, வாழ்க்கையோடும் தொழிலோடும் இணைந்தது.

அன்று ராஜாஜி இந்தியை திணித்தார். பெரியார், எதிர்த்தார். 1937ம் ஆண்டிலேயே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்து விட்டது. இடைக்காலத்தில் ஆட்சியாளராக இருந்த காங்கிரஸ்காரர்கள்தான் ஹிந்தியை முதலில் திணித்தார்கள்.

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைப்பது தொடர்பாக மாநிலங்களவையில் ஒரு விவாதம் வந்தது. தமிழ் இலக்கியங்களில் எங்கேயும் தமிழ்நாடு என்ற சொல்லே இல்லை என்றனர். அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணாதுரை, கம்பராமாயணத்தில் ஆரம்பித்து எந்தெந்த இலக்கியத்தில் தமிழ்நாடு என்ற சொல் இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கினார். அதன்பின், அவர் முதல்வராக ஆன பின்புதான் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டி சட்டம் கொண்டு வந்தார்.
நாம் விரும்பியோ விரும்பாமலோ ஆங்கில மொழி தேவைப்படுகிறது.
உலகம் முழுவதும் பணியாற்றி வரும் இந்தியர்களில் தமிழ் வழியில் படித்துவிட்டுச் சென்றவர்கள்தான் அதிகம். ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பதை ஏற்க முடியாது.
இந்திய ராணுவத்தில் அரை சதவீதம்கூட பணியாற்றாதவர்கள் குஜராத்திகள். தேசபக்தியைப் பற்றி அதிகமாக பேசுபவர்கள் குஜராத்திகள். ஆனால் ராணுவத்தில் அவர்களின் பங்களிப்பு அதிகளவில் இல்லை. மற்றவர்கள், ராணுவத்தில் சேர்ந்து சாக வேண்டும்; அவர்கள் மட்டும் தேச பக்தியைப்பேசி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்.
இங்குள்ள மார்வாரிகள்கூட தமிழில் பேசித்தான் வியாபாரம் செய்கின்றனர். ஏனெனில், வாழ்க்கைப்பாடு என்று வந்துவிட்டால் எந்த மொழியையும் எழுதவும் பேசவும் கற்றுக்கொள்வோம். ஆனால் சுயமான சிந்தனை வளர்ச்சிக்கு, அவரவர் தாய்மொழிதான் சிறந்தது.

இந்தியா, பன்முக கலாசாரம் உள்ள நாடு. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் இந்தியாவை ஒற்றை நாடாக ஆக்க முயற்சிக்கின்றனர். ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே வரி என்பதுதான் அவர்களின் நோக்கம்.
ஒரு நாடு என்பது, இந்து நாடு. ஒரு மதம் என்பது, இந்து மதம். ஒரு மொழி என்பது ஹிந்தி. அதுவும், தேவநாகரி, சமஸ்கிருதம் கலந்த மொழி. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். தமிழால் முடியாது என்பவர்கள் அறிவில்லாதவர்கள். தமிழால் முடியாதது எதுவுமே இல்லை.

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், அறிவியல் கட்டுரைகளை தமிழிலேயே எழுதினார். அதிக மருத்துவர்கள் உருவாகி இருப்பது தமிழகத்தில் தான். குஜராத்திலோ, ஹிந்தி பேசும் மாநிலங்களிலோ அல்ல. கணினியில் அதிகமாக பயன்படுத்தும் மொழி ஆங்கிலம், சீனம் மொழிகளுக்குப் பிறகு தமிழ்தான்.
மத்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய கல்விக்கொள்கை நம் மொழிக்கு ஆபத்தானது. அராஜகமும், அயோக்கியத்தனமும் அதிகரித்தால் மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். ஒரு மொழியை அழித்தால், ஓர் இனம் அழிந்து விடும். இனத்தின் பண்பாடு அழிந்துவிடும். பிற நாட் டுக்காரர்கள் உடனடியாக பொங்கி எழுந்து விடுவார்கள். ஆனால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்.
கேரளாவில் ஈ.கே.நாயனார் முதல்வராக இருந்தபோது, அப்போது பிரதமர் வாஜ்பாயிடம் இருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதம் ஹிந்தியில் எழுதப்பட்டு இருந்தது. ஈ.கே.நாயனாருக்கு ஹிந்தி மொழியும் தெரியும். ஆனாலும் அவரோ அந்த கடிதத்தை எரித்து, அதன் சாம்பலை பிரதமருக்கு அனுப்பி வைத்தார்.

கடிதம் ஒன்றையும் எழுதினார். அதில், ‘ஹிந்தியில் கடிதம் எழுதப்பட்டு இருந்ததால் என்னால் படிக்க முடியவில்லை. என் தாய்மொழி மலையாளம். அதில் கடிதம் எழுதி அனுப்புங்கள். பதில் அளிக்கிறேன்’ என்று மலையாளத்தில் எழுதி அனுப்பினார்.
சரி என்றால் பாராட்டவும், தப்பு என்றால் கண்டிக்கவும் என்றைக்கு முழங்குகிறோமோ அன்றைக்கு தான் நாம் மொழியைக் காப்பாற்ற, சம உரிமை பெறவும் முடியும். இந்தியா என்பது ஒற்றை நாடல்ல; இது ஓர் உபகண்டம்.

தொடர்புக்கு: 9632562964.